உள்ளடக்கத்துக்குச் செல்

கீதாஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதாஞ்சலி
கீதாஞ்சலி-முன்னட்டை
நூலாசிரியர்ரவீந்திரநாத் தாகூர்
உண்மையான தலைப்புগীতাঞ্জলি
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம், வங்காளம்
பொருண்மைகடவுள் வழிபாடு
வகைகவிதை
வெளியிடப்பட்ட நாள்
1910
ஆங்கில வெளியீடு
1912

இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali). வங்காள மொழியில் 157 பாடல்கள் கொண்ட இதன் மூலப் பதிப்பு ஆகஸ்ட் 14, 1910 அன்று வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பு 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இந்திய சொசைடி ஆஃப் லண்டன்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது வங்கமொழியிலிருந்து தாகூராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 103 பாடல்களைக் கொண்டிருந்தது. கீதாஞ்சலியின் வங்கமொழிப் பதிப்பிலிருந்து 53 பாடல்கள் மற்றும் அவரது பிற படைப்புகளிலிருந்து 50 பாடல்கள் என மொத்தம் 103 பாடல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலப் பதிப்பில் இடம்பெற்றன[1][2]. கீதாஞ்சலி உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. டபுள்யு. பீ. ஏட்ஸ் உட்பட பல கவிஞர்களும் விமர்சகர்களும் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள். இந்நூல் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை (1913) இல் பெற்றுத் தந்தது. மேற்கத்தியர் அல்லாத ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது அதுவே முதல்முறையாகும்.

இந்திய தேசிய கவி இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதி பின்பு ஆங்கிலக்கவிஞர் டபுள்யு.பீ.ஏட்ஸ்-ன் உதவியுடன் மொழிபெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி ஒரு பக்தி இலக்கியம். அது ஒரு பக்தன் கடவுளுடன் மீண்டும் இணைவதற்காக ஏங்கும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது. பக்தி இலக்கியமாக இருந்தாலும், தாகூர் ஒரு புதிய தனித்துவமிக்க படைப்பாக கீதாஞ்சலியைத் தந்திருக்கிறார்.

உள்ளடக்கம்

[தொகு]

கீதாஞ்சலி நான்கு அடிப்படைத் தலைப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.[3]

  1. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள்.
  2. கடவுளுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள்.
  3. இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ளதொடர்புகள்.
  4. ஆத்மாவிற்கும் மனித சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகள்.

இவை நான்கு தலைப்புகளும் ஒன்றோடொன்று இணந்தவை. இவற்றை தனிமைப்படுத்தி பகுக்க இயலாது.

ஆத்மா எனும் கோயில்

[தொகு]

"மனித உடம்பு ஆத்மாவைத் தாங்கி நிற்கும் கோயில்; ஆத்மாவோ கடவுளைத் தாங்கி நிற்கும் கோயில். கடவுளைத் தாங்கி நிற்காத ஆத்மாவினால் எந்தப் பயனுமில்லை. பிறப்பும் இறப்பும் உடலுக்குள் ஆத்மாவை நிரப்புவதன் மூலமும், உடலிலிருந்து ஆத்மாவை வெளியேற்றுவதன் மூலமும் கடவுள் தனது முடிவற்ற (மரணமற்ற) வாழ்க்கையை நடத்துகிறான்". "மனிதன் பங்கேற்கும் இந்த உலக நாடகம் கடவுள் நடத்தும் லீலை. அழியக்கூடிய இந்த மனிதனிடம் நிறைந்துள்ள மகிழ்ச்சி,பலம் மற்றும் புகழ் அனைத்தும் அந்த எல்லையில்லாத கடவுள் தந்ததாகும்".-என்ற தத்துவத்தை தாகூர் தன் கவிதைகளில் குறிப்பிடுவதாக ஸ்ரீனிவாச அய்யங்கார் விளக்கியுள்ளார்.

"Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life". -கீதாஞ்சலி (முதல் பாடல்)

இந்த வெற்றுடம்பை மூங்கிலால் ஆன புல்லாங்குழலுடன் ஒப்பிடுகிறார் தாகூர். "இந்த சிறிய புல்லாங்குழலை நீ(கடவுள்) மலைகளிலும், பள்ளத்தாக்கிலும் சமவெளிகளிலும் சுமந்து வந்து அதன் மூலம் இனிய எல்லையில்லாத நாதத்தை வெளியிடுகிறாய்" என்று மனிதனை இயக்குவது கடவுள்தான். அவரை நினைக்காத ஆத்மாவினால் ஒரு பயனுமில்லை என்று கூறுகிறார்.

:"This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new."-கீதாஞ்சலி(முதல் பாடல்).

மனிதன்,கடவுள்,இயற்கை

[தொகு]
கீதாஞ்சலியின் பல பாடல்கள் இயற்கைக்கும் கடவுளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகின்றன." பூக்கள்,ஆறுகள்,சப்தமிடும் சங்குகள், இந்தியாவில் சூலை மாதத்தில்பெய்யும் அடை மழை, அல்லது பிரியும் போதும் இணையும்போதும் மாறுகின்ற மனோநிலை,ஆற்றில் மிதக்கும் சிறுபடகில் அமர்ந்து யாழை மீட்டும் ஒரு மனிதன், சீனப்படத்தில் வரும் விசித்திர அர்த்தம் கொண்ட ஓர் உருவத்தைப்போல், எல்லாமுமாகக் கடவுள் காட்சியளிக்கிறான்."-( INTRODUCTION : W. B. YEATS to WILLIAM ROTHENSTEIN)

இறப்பு-மனிதன் கடவுளை அடைய செய்யும் பயணம்

[தொகு]

:"And now I am eager to die into the deathless.

Into the audience hall by the fathomless abyss where swells up the music of toneless strings I shall take this harp of my life.

I shall tune it to the notes of forever, and when it has sobbed out its last utterance, lay down my silent harp at the feet of the silent." "இந்த உடலைவிட்டு உன்னுடன் கலக்க ஆவலாக உள்ளேன். இந்த ஆத்மா என்னும் இசைக்கருவியை உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன். நீண்ட காலமாக இதிலிருந்து நீ விரும்பியபடி இசையெழுப்பிவிட்டேன். இனி உன்னை வந்தடைய ஆவலாக உள்ளேன்."-இவ்வாறு தாகூர் கூறுவதன்மூலம் மக்களுக்கு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவிக்கிறார். இறைவனை அடைய இறப்பே வழி என்ற போதிலும், கடவுளின் விருப்பப்படி அவர் தந்துள்ள வயது வரை நாம் வாழ வேண்டியது நம் கடமை. இறைவன் நம்மை அழைக்கும் வரை நம் கடமையைச் செய்தபடி நாம் காத்திருக்க வேண்டும்.

சில பாடல்களின் மொழிபெயர்ப்பு

[தொகு]

(பாடல் எண்:13)

[தொகு]
"நான் எந்தப் பாடலைப் பாடுவதற்காக இங்கு வந்தேனோ அது இன்றுவரை பாடப்படாமலேயே உள்ளது.
என் இசைக்கருவியைச் சரிசெய்வதிலேயே என் நாட்களைக் கழித்துவிட்டேன்.
உண்மையில் நேரம் வரவில்லை, வார்த்தைகள் சரியாக பொருத்தப்படவில்லை, ஆசையினால் வரும் வலி ஒன்றே என் இதயத்தில் உள்ளது.
பூ மலரவில்லை; காற்று மட்டும் பெருமூச்சுவிடுகிறது.
நான் அவனது முகத்தைப் பார்த்ததில்லை; அவனது குரலைக் கவனித்ததில்லை; என் வீட்டிற்கு முன்னால் உள்ள சாலையிலிருந்து அவனது மெல்லிய காலடியோசையை மட்டுமே கேட்டிருக்கிறேன்.
அவன் இருக்கையை தரையில் விரிப்பதிலேயே பெரும் பொழுதும் கடந்துவிட்டது;
ஆனால் விளக்கு ஏற்றப்படவில்லை; ஆகையால் அவனை என் வீட்டிற்குள் அழைக்க முடியாது.
அவனுடனான சந்திப்பை எதிர்பார்த்து வாழ்கிறேன்; ஆனால் இதுவரை அந்தச் சந்திப்பு நிகழவில்லை."
(கருத்து: மனம் என்னும் கோயிலில் கடவுள் அமர்வதற்கான இருக்கையைத் தயார் செய்வதிலேயே நாட்கள் உருண்டோடிவிட்டன. அதில் ஒளி வருவதற்கான விளக்கை ஏற்றவில்லை. அதனால் கடவுளை என் மனத்தினுள் குடியேறச் சொல்ல முடியவில்லை.)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ""Centenary of "Gitanjali""" (PDF). Frontier Weekly. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Ghosal, Sukriti. "The Language of Gitanjali: the Paradoxical Matrix" (PDF). The Criterion: An International Journal in English. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
  3. The essay Gitanjali: Main Themes in Gitanjali (a critical study) by Dr. Raghukul Tilak published by Rama brothers New Delhi-5
  • Indian writing in English-Srinivasa Iyengar:
  • RabindraNath Tagore -Srinivasa Iyengar:
  • The Poetry of Tagore -S.B. Mukerjee:
  • INTRODUCTION : W. B. YEATS to WILLIAM ROTHENSTEIN
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாஞ்சலி&oldid=4007809" இலிருந்து மீள்விக்கப்பட்டது