உள்ளடக்கத்துக்குச் செல்

கியான்லிகி பஃப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியான்லிகி பஃப்பான் (பிறப்பு 1978) ஒரு பிரபல இத்தாலிய கால்பந்து வீரர் ஆவார்.[1][2] இவர் ஜுவன்டஸ் அணிக்காகவும் இத்தாலிய தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடியுள்ளார். இவரை ஒரு சிறந்த கோல் கீப்பர் என மற்ற வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அணி மேலாளர்கள் கருதுகின்றனர். இவர் திறமையாக விளையாடுவது மட்டுமல்லாமல் நற்பண்புகளும் கொண்டுள்ளதால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தொடக்ககாலம்

[தொகு]

இளம் வயது பஃப்பான் 1995 ஆண்டு முதல் பார்மா அணிக்காக விளையாடினார். அந்த அணி சில கோப்பைகள் வெல்வதற்கு உதவியாக இருந்தார். இவரின் திறமையை அறிந்த ஜுவன்டஸ் அணி 2001ம் ஆண்டு பெரும் தொகை செலவு செய்து இவரை தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டனர். ஜுவன்டஸ் அணியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு உதவியதால் இவர் ஒரு சிறந்த கோல் கீப்பர் என உலகளவில் அறியப்பட்டார். மேலும் 2005 மற்றும் 2006 ஆண்டுகளிலும் ஜுவன்டஸ் அணி கோப்பையை வென்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த அணியின் தலைவனாக விளையாடி வருகிறார். இவரின் உதவியுடன் ஜுவன்டஸ் அணி 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு முறை கோப்பையை வென்றது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

சர்வதேச ஆட்டங்கள்

[தொகு]

சர்வதேச அளவிலான ஆட்டங்களில் இவர் இத்தாலி அணிக்காக 176 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதன் மூலம் அதிக ஆட்டங்களில் விளையாடிய ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் 1998, 2002, 2006, 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார். இதில் 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கோப்பையை இத்தாலி அணி வென்றது. 1996 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

விருதுகள் மற்றும் சாதனைகள்

[தொகு]

இவர் 12 முறை சிறந்த இத்தாலிய கோல் கீப்பர் விருதை வென்றுள்ளார். மேலும் ஐந்து முறை உலகின் சிறந்த கோல் கீப்பர் விருதையும் வென்றுள்ளார். பஃப்பான் மொத்தம் 23 கோப்பைகளை வென்றுள்ளார். இதில் ஐரோப்பிய அளவிலான கோப்பையும் மற்றும் இத்தாலிய தேசிய அணிக்காக வென்ற உலக கோப்பையும் அடங்கும். இத்தாலிய கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 12 ஆட்டங்களில் கோல் விடாமல் இருந்து சாதனை படைத்துள்ளார். ஆயிரம் போட்டிகளுக்கு மேல் விளையாடிய மிகச்சில கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

விளையாடும் பாணி

[தொகு]

இவர் இளமைக் காலம் முதல் தற்போது வரை மிகவும் நேர்த்தியான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆட்டத்தின் பொழுது கவனமும், முக்கிய தருணங்களில் அமைதியுடனும் செயல்படுவதால் இவர் அணி வீரர்கள் மற்றும் எதிரணியினர் இடையே நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் பல சமகால கோல் கீப்பர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். சிறந்த உடல் வலிமை கொண்டுள்ள இவர் ஆட்டத்தில் வேகமாகவும் செயல்படுவதால் எதிரணியினர் செலுத்தும் பந்துகளை மிகவும் நேர்த்தியாக தடுத்து விடுகிறார். பந்து வரும் திசையினை முன்கூட்டியே அறிந்து அதற்கு தகுந்தவாறு இடம் நகர்வதால் இவரால் சுலபமாக பந்துகளை தடுக்க முடிகிறது. மிக அருகில் இருந்து அடிக்கப்படும் பெனால்டி வாய்ப்பினை தடுப்பதிலும் இவர் வல்லவர். அதுமட்டுமல்லாமல் மேலே வரும் பந்துகளையும் எகிறி குதித்து தடுக்கும் வல்லமை உடையவர். சில தருணங்களில் கோல்கீப்பர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பந்துகளை முன்கூட்டியே இவர் தடுத்துவிடுவார்.

குடும்பம்

[தொகு]

பஃப்பான் விளையாட்டு வீரர்கள் நிறைந்த ஒரு இத்தாலிய குடும்பத்தில் 28 ஜனவரி 1978 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தாய் ஸ்டெல்லா ஒரு வட்டு எறிதல் வீராங்கனை, இவரின் தந்தை அட்ரியனோ ஒரு பளு தூக்கும் வீரர் ஆவார். அவர்கள் இருவரும் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவரின் இரு சகோதரிகள் இத்தாலிய கைப்பந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். மேலும் இவரது மாமா ஒரு கூடைப் பந்து விளையாட்டு வீரர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Elezioni, Gigi Buffon appoggia Monti. "Uomo tutto d'un pezzo, raziocinante"" (in Italian). Corriere della Sera. 15 February 2013. http://www.corriere.it/politica/speciali/2013/elezioni/notizie/15-febbraio-buffon-monti_5ef83cc8-7770-11e2-a4c3-479aedd6327d.shtml. பார்த்த நாள்: 16 March 2016. 
  2. "Buffon: "Che rischi alla fine. Mi carico con le piazze italiane"" (in Italian). La Gazzetta dello Sport. 28 June 2012. http://www.gazzetta.it/Europei/2012/28-06-2012/buffon-che-rischi-fine-mi-carico-le-piazze-italiane-911671979718.shtml. பார்த்த நாள்: 16 March 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியான்லிகி_பஃப்பான்&oldid=3609863" இலிருந்து மீள்விக்கப்பட்டது