உள்ளடக்கத்துக்குச் செல்

கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிங் எட்வர்ட் மெமோரியல் (கே.ஈ.எம்.) மற்றும் சேத் கோவர்தன்தாஸ் சுந்தர்தாஸ் (எஸ்.ஜி.எஸ்.) மருத்துவக் கல்லூரி (King Edward Memorial Hospital and Seth G.S. Medical College) (மராத்தி: राजा एड्वर्ड (सातवे) स्मारक रुग्णालय व सेठ गोवर्धनदास सुंदरदास वैद्यकीय महाविद्यालय) இந்தியாவின் முதன்மை மருத்துவக் கல்வி வழங்கும் மருத்துவமனைகளில் ஒன்றாகும். மும்பையில் 1926ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.

சேத் கோவர்தன்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக்கல்லூரி பல்வேறு மருத்துவத்துறைகளில் 2000 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கல்வியையும் நலமீட்பு உடற்பயிறசி ஊட்ட உணவு சிகிச்சை, பணியிட நோய் மருத்துவம் போன்ற தனிச்சிறப்புத் துறைகளில் பட்டமேற்படிப்பு வரையிலான கல்வியையும் வழங்கி வருகிறது. தொடர்புடைய சிறப்புத்துறைகளில் முனைவர்பட்ட வகுப்புகளும் ஆளப்படுகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் செவிலியர் பள்ளியும் நடத்தப்படுகிறது.

இந்நிறுவனங்களின் துவக்கம் இந்திய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையது. மும்பையின் ஒரே மருத்துவக் கல்லூரியாக விளங்கிய கிராண்ட் மருத்துவக்கல்லூரியில் தகுதிபெற்ற இந்தியர்கள் ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிய மறுக்கப்பட்டதை யொட்டி இங்கிலாந்திலிருந்து பட்டம் பெற்று திரும்பிய சில இந்திய மருத்துவர்களின் முயற்சியால் துவங்கப்பட்டது. மும்பையின் பெருந்தனக்காரராக விளங்கிய சேத் கோவர்தன்தாஸ் சுந்தர்தாசின் வாரிசுகள் வழங்கிய நன்கொடை கொண்டு துவங்கப்பட்ட இந்த மருத்துவக்கல்லூரியில் இந்திய மக்களே ஆசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணிபுரிய முடியும். ஏறத்தாழ 390 பணியாளர்களும் மருத்துவர்களும் 550 இருப்பு மருத்துவர்களும் பணியாற்றும் 1800 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஆண்டொன்றிற்கு 1.8 மில்லியன் புறநோயாளிகளும் 78,000 உள் நோயாளிகளும் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள். பல்வேறு மருத்துத்துறைகளிலும் அறுவை நெறிமுறைகளிலும் அடிப்படை உடல்நல காப்பு மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மும்பை பெருநகர் மாநகராட்சியின் நிதியைக் கொண்டு செயல்படும் இவ்விரு நிறுவனங்களும் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளோருக்கு இலவச மருத்துவ வசதிகள் அளித்து சிறந்த சேவை அளித்து வருகின்றன.

தற்போதைய மருத்துவமனை முதல்வராக சஞ்சய் ஓக் இருந்து வருகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sanjay Oak as Dean of KEMH". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2011-03-08.