உள்ளடக்கத்துக்குச் செல்

கவவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவவு என்னும் சொல் தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் காட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கவவும் என வினைமுற்றாகவும், கவவ என எதிர்கால வினையெச்சமாகவும், கவவி என இறந்தகால வினையெச்சமாகவும், கவவியார், கவவினாள் என்று வினையாலணையும் பெயர்களாவும், கவவுக்கை என்ற வடிவில் பெயரெச்சமாகவும் இந்தச் சொல் பண்டைய இலக்கியங்களில் பயின்றுவந்துள்ளது. இவை அனைத்தும் வளைத்து அரவணைத்துக்கொள்ளும் பொருளை உணர்த்துகின்றன.

சொல்லாட்சிகள் - எடுத்துக்காட்டு

[தொகு]

இந்தச் சொல் கையாளப்பட்டுள்ள இடங்களில் உணர்த்தும் பொருள்கள் இவை:

உரிச்சொல்

[தொகு]
  • அகத்திடும் பொருளைத் தரும் ஓர் உரிச்சொல். [1] [2]

பெயர்ச்சொல்

[தொகு]
  • தாயாகவும் கொள்ளத்தக்க மனைக்கிழத்தி தன் தலைவன் அவனது மனைவிக்குப் பிறந்த குழந்தையைக் குழந்தையின் தாய் தழுவிக்கொள்வது போல, தான் 'கவவு' செய்து, குழந்தையைத் தழுவும் இன்பத்தில் மயங்குவாளாம். [3]
  • விலைமாதர் வந்த ஆண்மகனை மார்போடு மார்பாகத் தழுவும்போது பொருள் கவரும் (கவவும்) தன் நோக்கத்தை மறைப்பர் என்னும்போது "கவர் <-> கவவு" என்னும் சொற்கள் மயங்கி வந்துள்ளன. [4]
  • கையால் கவவு செய்து பிடித்த கொழுக்கட்டை [5]
  • அரவணைப்பு [6] [7] [8] [9] [10]

வினைமுற்று

[தொகு]
  • நிலத்தைக் காலால் கவவி (வளைத்து) நடக்கும் மலை போன்றது யானை. [11]

வினையெச்சம்

[தொகு]
  • தோய [12]
  • கண்ணால் தழுவுதல் [13]

வினையாலணையும் பெயர்

[தொகு]
  • கண், நுதல், கன்னம் ஆகியவற்றில் அழகால் வளைத்துப் போடுதல். [14]
  • தாயின் அரவணைப்பு. [15]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. 'கவவு அகத்திடுமே'. ((தொலகாப்பியம் 2-357, உரியியல்)
  2. கவர்வு என்னும் சொல் விருப்பம் என்னும் பொருளைத் தரும். 'கவர்வு விருப்பு ஆகும்'. (தொல்காப்பியம் 2-362, உரியியல்)
  3. 'தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
    ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து' என மொழிப-
    'கவவொடு மயங்கிய காலையான' (தொல்காப்பியம் 3- 171, கற்பியல்)
  4. நுண் பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
    மாயப் பொய் பல கூட்டி, கவவுக் கரந்து, (மதுரைக் காஞ்சி 560-70)
  5. கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,(மதுரைக்காஞ்சி 626)
  6. நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி, (மதுரைக்காஞ்சி 664)
  7. சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; (நற்றிணை 52)
  8. மா மகன்
    கவவுக் கொள் இன் குரல் (நற்றிணை 212)
  9. ஆரத் தழுவுவாள் கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; (குறுந்தொகை 132)
  10. மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
    கவவு இன்புறாமைக் கழிக (அகநானூறு 13)
  11. நிலம் கால் கவவும் மலை போன்ற (களவழி நாற்பது 21)
  12. குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
    நாளும்நாள் உடன் கவவவும், தோளே (நற்றிணை 332)
  13. கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால், (கலித்தொகை 35)
  14. 'கண்ணும், நுதலும், கவுளும், கவவியார் (கலித்தொகை 83)
  15. அன்னை;
    ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. (நற்றிணை 297)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவவு&oldid=2134891" இலிருந்து மீள்விக்கப்பட்டது