கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கரூர் மாவட்டம், கரூர் நகரம், தேர் வீதியில் அமைந்துள்ள பள்ளி ஆகும்.. இது ஒரு பழமையான, புகழ்பெற்ற, மாணவிகள் மட்டுமே பயிலும் பள்ளியாகும். இப்பள்ளி 1942 ஆம் ஆண்டு அரசு பயிற்சிப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. இப்பள்ளி 1972 வரை உயர்நிலைப் பள்ளியாகவும் பிறகு மேல்நிலைப்பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. 2010ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இப்பள்ளி இரு வேளை முறையில் இயங்கியது. தற்போது முழு நேரப்பள்ளியாக உள்ளது. இங்கு பயின்ற மாணவிகளில் பலர் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் பலர் அரசுப் பதவிகளை அலங்கரித்து பணி நிறைவு பெற்றுள்ளனர். இப்பள்ளியில் அறிவியல் பிரிவு (தமிழ் வழி / ஆங்கில வழி), கலைப்பிரிவு, தொழிற்கல்வி எனப் பல பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு சுமார் 500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியை, 35 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவிகள் தனித்திறன்களில் சிறந்து விளங்குவதால், மாவட்ட, மண்டல, மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.