கரந்தை காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரந்தை காந்தி

சுதந்திரப் போராட்டத்தில், காந்தியவாதியாய் தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டவர் திரு ச.அ.சாம்பசிவம் பிள்ளை அவர்களாவார்.

பொறியாளர் பணி[தொகு]

   திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர் இவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவர். சேலம், திருச்சி முதலிய நகரங்களில், பொதுப் பணித் துறையில், பொறியாளராகப் பணியாற்றியவர்.

பணி துறப்பு[தொகு]

     மகாத்மா காந்தி அவர்கள் 1920 அம் ஆண்டில், ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, தனது பொறியாளர் பணியினைத் துறந்தார். திருச்சியில் இருந்து கரந்தைக்கு இடம் பெயர்ந்தார்.

சமூகப் பணி[தொகு]

     கரந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில், மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு தினமும் செல்வார். அங்குள்ள சிறுவர்களை எல்லாம், அழைத்துக் கொண்டு, வெண்ணாறு சென்று, அவர்களைக் குளிப்பாட்டி, தலைக்கு எண்ணெய் தடவி, தலைச் சீவி விடுவார். சுத்தமாய் இருப்பது, தாம் இருக்கும் இடத்தில் தூய்மையைப் பேணிப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்குப் போதிப்பார். 
      ஒரு நாள், இரு நாள் அல்ல, நாள்தோறும், தன் காலம் முழுவதும் இவர் ஆற்றிய பணி இது. அந்நாளில் மிகவும் மகத்தான பணி இது. மிகவும் தாழ்த்தப் பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் காலடி எடுத்து வைப்பதே, மிகவும் பாபகரமான செயலாய் கருதப்பட்ட காலத்தில், சிறிதும் தயங்காது, தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்காகப் பாடுபட்டவர்.

கரந்தை காந்தி[தொகு]

     காந்தியின் வாழ்விலும், தோற்றத்திலும் மாற்றத்தைக் கொடுத்த ஊர் மதுரை. மேல் அங்கியைக் கழற்றி எறிந்துவிட்டு, அரை ஆடை உடுத்தி, ஆண்டியின் கோலத்திற்கு மாறியது மதுரையில்தான்.
     மதுரையில் காந்தி, தன் மேலாடையைத் துறந்ததும், கரந்தையில் சாம்பசிவமும் தன் மேலாடையைத் துறந்தார். இறுதி வரை இடுப்பில் ஒரு வேட்டி, மேலே ஒரு சிறு துண்டு. இதுவே இவரது உடையாகிப் போனது.[1]
      கரந்தையிலும், தஞ்சையின் பிற பகுதிகளிலும், நாள்தோறும் ஒரு பகுதியில், சிறு கூட்டம் ஒன்றினைக் கூட்டி, வெள்ளையனே வெளியேறு என வீர முழக்கமிடுவார். இதனாலேயே கரந்தையில் ஆறு மாதம், சிறையில் ஆறுமாதம் என இவர்தம் வாழ்வு கழிந்தது. 
       சாம்பசிவம் என்னும் இவர்தம் இயற்பெயரும் மெல்ல மறைந்து, கரந்தை காந்தி என்னும் பெயரே, இவர்தம் பெயராக நிலைத்தது.

கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணி[தொகு]

    கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய, தமிழவேள் உமாமகேசுவரனாரின், மைத்துனர் இவர். கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், தமிழ் பெருமன்றத்தையும், சங்க வளாகத்திற்கும், விளையாட்டுத்திடலுக்கும் இடையே ஓடும் வடவாற்றினைக் கடந்திட, ஒரு அழகிய தொங்கு பாலத்தையும் அமைத்தவர் இவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

((reflist))

  1. [1]
  2. [கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு அறிக்கை, 1929]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரந்தை_காந்தி&oldid=3590176" இலிருந்து மீள்விக்கப்பட்டது