கண்டத் திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  படிவு
  பாறை
  Mantle

கண்டங்களின் கரையோரங்களை அண்டி அமைந்துள்ள திட்டான பகுதி கண்டத் திட்டு எனப்படுகின்றது. இது ஆழம் குறைந்த கடற்பரப்பினால் மூடியிருக்கும். கண்டத்திட்டு முடியும் இடத்தில் பெரும்பாலும் சடுதியான சரிவு காணப்படும். இது திட்டுமுடிவு (shelf break) ஆகும். திட்டு முடிவுக்குக் கீழ்க் கண்டச் சரிவு (continental slope) என அழைக்கப்படும் பகுதியும் அதற்கும் கீழே கண்ட எழுச்சியும் (continental rise) காணப்படும். இக் கண்ட எழுச்சி இறுதியில் கடல் மிக ஆழமான கடலடித்தளத்துடன் (abyssal plain) சேரும்.

கண்டத் திட்டுப் பொதுவாக உட்கண்டத் திட்டு, இடைக்கண்டத் திட்டு, வெளிக்கண்டத் திட்டு என மூன்று வகையாகப் பிரிக்கப்படுவது உண்டு. இவை ஒவ்வொன்றும் தமக்கேயுரிய நில உருவாக்கவியல் மற்றும் கடல்சார் உயிரியல் தன்மைகளைக் கொண்டுள்ளன. கண்டத்திட்டின் இயல்பு திட்டுமுடிவில் சடுதியாக மாறுகின்றது. இங்கே கண்டச் சரிவு தொடங்குகின்றது. சில இடங்களைத் தவிரப் பெரும்பாலான இடங்களில் கண்ட முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவு சீரான ஆழத்தில் காணப்படுகின்றன. இது அண்ணளவாக 140 மீட்டர் ஆக உள்ளது. கடல் மட்டம் தற்போது உள்ளதிலும் குறைவாக இருந்த பனிக்கட்டிக் காலத்துக்கு உரிய அடையாளமாக இது இருக்கக்கூடும்.[1][2][3]

கண்டச் சரிவு, கண்டத் திட்டிலும் கூடிய சரிவுடன் அமைந்துள்ளது. சராசரியாக 3 பாகையாக இருக்கும் இச் சரிவு, குறைந்த அளவாக 1 பாகையும், கூடிய அளவாக 10 பாகையும் இருக்கக்கூடும். இச் சரிவுகளில் ஆழ்கடல் குடைவுகள் (submarine canyons) காணப்படுவது உண்டு. இவை தோன்றிய விதம் நீண்டகாலம் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

கண்டச் சரிவுக்கு அப்பால், கண்ட எழுச்சி தொடங்குகிறது. இதன் சரிவின் அளவு, கண்டத்திட்டுச் சரிவின் அளவுக்கும், கண்டச்சரிவுச் சரிவின் அளவுக்கும் இடையில் 0.5 முதல் 1 பாகை வரையில் இருக்கும். கண்டச் சரிவில் இருந்து 500 கிமீ வரை பரந்து இருக்கும் இதில், கண்டத்திட்டு, கண்டச் சரிவு ஆகியவற்றிலிருந்து கலக்கல் நீரோட்டம் (turbidity currents) காரணமாக எடுத்துவரப்பட்டுப் படிந்துள்ள தடிப்பான படிவுகள் காணப்படுகின்றன.

கண்டத்திட்டுகளின் பொருண்மிய முக்கியத்துவம்[தொகு]

கண்டமேடைகள் ஆழம் குறைந்த கடல் படுக்கைகளாகக் காணப்படுவதால் மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் கனிப்பொருள் படிவுகளை அகழ்தல் என்பவற்றிலும் முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டத்_திட்டு&oldid=3889755" இலிருந்து மீள்விக்கப்பட்டது