கடவுள் உண்மையைப் பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"கடவுள் உண்மையைப் பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்"
ஆசிரியர்லியோ டால்ஸ்டாய்
நாடுஉருசியா
மொழிஉருசியம்
வகை(கள்)சிறுகதை
வெளியிடப்பட்ட காலம்1872

"கடவுள் உண்மையைப் பார்க்கிறார், ஆனால் காத்திருக்கிறார்" என்பது உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதை ஆகும். இது 1872ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. தான் செய்யாத ஒரு கொலைக்காகத் தண்டனை அனுபவிக்கும் ஒரு மனிதனைப் பற்றி இச்சிறுகதை கூறியது.[1]

கதைச் சுருக்கம்[தொகு]

விளாதிமிர் என்ற உருசியப் பட்டணத்தில், அக்சினோவ் என்பவர் ஒரு நல்ல வணிகராகத் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஒரு கோடை காலத்தில் ஒரு கண்காட்சிக்குத் தன் பொருட்களை விற்பதற்காக அவர் புறப்படுகிறார். ஒரு கெட்ட கனவில் தன் கணவன் நரைத்த முடியுடன் திரும்பி வருவதாக அவரது மனைவி காண்கிறாள். எனவே அவரை செல்ல வேண்டாம் எனத் தடுக்கிறாள். ஆனால் அவர் இதைக் கண்டு சிரிக்கிறார். அக்கனவை ஒரு அதிர்ஷ்டத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்கிறார்.

பட்டணத்திற்குச் செல்லும் பாதி வழியில் அவர் தன் சக வணிகன் ஒருவனைச் சந்திக்கிறார். அவனுடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. இருவரும் அன்றிரவு ஒரு சத்திரத்திற்குச் செல்கின்றனர். ஒன்றாகத் தேநீர் அருந்திவிட்டு அருகருகே உள்ள அறைகளில் தங்குகின்றனர். பொழுது விடிவதற்கு முன்னரே அக்சினோவ் எழுந்திருக்கிறார். காற்று குளிராக இருக்கும்போதே தன் குதிரைகள் மற்றும் வண்டி ஓட்டுபவருடன் புறப்படுகிறார். 25 மைல்களுக்குப் பிறகு தன்னுடைய குதிரைகளுக்கு உணவளிக்கப் பயணத்தை நிறுத்துகிறார்.

இந்த இடைவேளையின் போது இரு வீரர்கள் ஒரு அதிகாரியுடன் வருகின்றனர். அக்சினோவிடம் முந்தைய இரவு அவர் சந்தித்த வணிகருடன் அவருக்கு என்ன தொடர்பு எனக் கேள்விகள் கேட்கின்றனர். அந்த வணிகர் முந்தைய நாள் இரவு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டதை அவரிடம் பின்னர் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் தங்கியிருந்த அறைகள் அருகருகே இருந்ததால் அக்சினோவிற்கு ஏதாவது தெரிந்திருக்கலாம் என நினைக்கின்றனர். அந்த அதிகாரி அக்சினோவின் உடமைகளைச் சோதிக்கின்றனர். ஒரு இரத்தக் கறை படிந்த கத்தியை எடுக்கின்றனர். அக்சினோ பயத்தில் நடுங்குகிறார்.

அவ்வீரர்கள் அக்சினோவின் கைகளைக் கட்டுகின்றனர். அவரைக் கைது செய்கின்றனர். அவரது மனைவி சிறைச்சாலையில் இருக்கும் தன் கணவனைக் காண வருகிறாள். அவர் கைதி உடையில் இருப்பதைக் கண்டு மயங்கி விழுகிறாள். ஜார் மன்னரிடம் மனு அனுப்ப வேண்டும் என அவர் கூறுகிறார். தான் முயற்சித்ததாகவும் ஆனால் எதுவும் நடக்கவில்லை எனவும் அவள் கூறுகிறாள். அவர் அக்கொலையைச் செய்தாரா என அவரது மனைவி கேட்கிறாள். அக்சினோவ் அழுக ஆரம்பிக்கிறார். அவர் தன் மனைவி சென்ற பிறகு, தன் மனைவியே தன்னைச் சந்தேகப்பட்ட போதும், கடவுளுக்கு மட்டுமே உண்மை தெரியும் எனவும், தான் கடவுளிடம் மட்டும் தான் முறையிட வேண்டும் எனவும் நினைக்கிறார்.

கடவுளை நம்புகிறார். கைதிக்குக் கொடுக்கப்படும் வாடிக்கையான கசையடிகளை ஏற்றுக் கொள்கிறார். தண்டனையாகச் சைபீரியாவில் இருக்கும் சுரங்கங்களில் பணி செய்ய அனுப்பப்படுகிறார். சைபீரியாவில் 26 ஆண்டுகளைக் கழிக்கிறார். ஒரு தெய்வ பக்தியுள்ள முதியவராக மாறுகிறார். அவரது முடி வெள்ளையாக மாறிவிட்டது. தாடி நீளமாக வளர்ந்துவிட்டது. நடப்பதற்கே சிரமப்படுகிறார். அவர் சிரிப்பதே இல்லை. அடிக்கடி வழிபடுகிறார். மற்ற கைதிகள் மத்தியில் அமைதியான மற்றும் நியாயமான மனிதன் எனப் பெயரெடுக்கிறார்.

ஒரு நாள் தான் சைபீரியாவிற்கு எவ்வாறு வந்தேன் என புதுக் கைதியான செம்யோனிச்சு கூறிக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் அக்சினோவின் வயது தான் இருக்கும். அக்சினோவ் வாழ்ந்த பட்டணத்தில் இருந்து தான் அவனும் வந்துள்ளான். ஒரு குதிரையைத் திருடியதாக அவன் சந்தேகிக்கப்பட்டுள்ளான். உண்மையில் அவன் அக்குதிரையைக் கடனாகத் தான் பெற்றான். இருப்பினும், அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். இதில் முரண்பாடு என்னவென்றால், அவன் தன் இளம் வயதில் இதைவிட மோசமான செயலைச் செய்து தப்பித்துள்ளான்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு இவன் தான் காரணமாக இருப்பானோ என அக்சினோவிற்குச் சந்தேகம் ஏற்படுகிறது. அவர் செம்யோனிச்சிடம் கேள்விகள் கேட்கிறார். அவன் மறைத்துப் பேசுகிறான். இது அக்சினோவின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. தான் இழந்த அனைத்தையும் அக்சினோவ் நினைவு கூருகிறார். துயரத்தில் மூழ்குகிறார். பழிதீர்க்க தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்குகிறார். ஆனால் செம்யோனிச்சிடம் இருந்து விலகியிருக்கத் தீர்மானிக்கிறார். அவன் இருக்கும் திசையைக் கூடப் பார்க்கக் கூடாதென முடிவெடுக்கிறார். இரு வாரங்களுக்குப் பிறகு, தூக்கம் வராத காரணத்தால், அக்சினோவ் சிறைச் சாலைக்குள் உலா வருகிறார். செம்யோனிச் தன் படுக்கைக்குக் கீழ் ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டுவதைக் காண்கிறார். கோபத்துடன் செம்யோனிச் தப்பித்துச் செல்ல அக்சினோவிற்கு வாய்ப்பளிப்பதாகக் கூறுகிறான். சுரங்கப் பாதையைப் பற்றி சிறைச் சாலை அதிகாரியிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறான். செம்யோனிச் ஏற்கனவே தன்னை கொன்றுவிட்டதாகவும் இனி மேல் தான் கடவுள் காட்டும் வழியில் தான் செல்ல வேண்டும் எனவும் அக்சினோவ் கூறுகிறார்.

அடுத்த நாள் வீரர்கள் சுரங்கப் பாதையைக் கண்டுபிடிக்கின்றனர். கைதிகளிடம் விசாரிக்க ஆளுநர் வருகிறார். ஆனால் சுரங்கப் பாதையைப் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாதென அனைவரும் கூறுகின்றனர். அக்சினோவின் மனது பழிவாங்கத் துடிக்கிறது. ஆனால் தனக்குத் தண்டனை கொடுக்கப்படும் நிலை வந்தாலும் செம்யோனிச்சைப் பற்றி அக்சினோவ் கூறவில்லை.

அன்றிரவு அக்சினோவ் தன் படுக்கையில் தலை வைக்கப் போகும்போது செம்யோனிச் அவருக்கு அருகில் வந்து உட்காருகிறான். தன்னை மன்னிக்குமாறு அவர் காதில் மெதுவாகக் கூறுகிறான். அந்த வணிகனைக் கொன்று பணத்தை எடுத்துக் கொண்டது தான் தான் என ஒப்புக் கொள்கிறான். அக்சினோவின் உடமைகளுக்குள் அக்கத்தியை வைத்து அவர் மீது சந்தேகம் ஏற்படுமாறு செய்ததும் தான் தான் என ஒப்புக் கொள்கிறான். அக்சினோவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறான். தன் குற்றங்களை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டு அக்சினோவை விடுதலை செய்ய வைப்பேன் என்றும் கூறுகிறான். தன் வாழ்க்கை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தான் செல்ல தற்போது எங்குமே இடமில்லை என்றும் அக்சினோவ் கூறுகிறார்.

செம்யோனிச்சின் கண்ணீரைக் கண்டு அக்சினோவும் அழுகிறார். மீண்டும் தன்னை மன்னித்துவிடுமாறு செம்யோனிச் கெஞ்சுகிறான். கடவுள் உன்னை மன்னிப்பார் என அக்சினோவ் கூறுகிறார். ஒருவேளை உன்னைவிட நான் நூறு மடங்கு மோசமானவனாக இருக்கலாம் எனவும் கூறுகிறார். இதைக் கூறிய பிறகு தன் மனம் இலகுவானதை அக்சினோவ் உணர்கிறார். வீட்டிற்குச் செல்லவோ அல்லது சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகவோ அவர் மனம் விரும்பவில்லை. இறப்பு ஒன்றே அவரது விருப்பமாக உள்ளது.

ஆளுநரிடம் தன் குற்றங்களை செம்யோனிச் ஒப்புக் கொள்கிறான். அக்சினோவை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்கின்றனர். எனினும், விடுதலை செய்வதற்கான ஆணை செயல்படுத்தப்படும் முன்னரே அக்சினோவின் உயிர் அமைதியாக பிரிகிறது.

உசாத்துணை[தொகு]

  1. The Works of Leo Tolstoi. Roslyn, New York: Black's Readers Service Company, 1928.