உள்ளடக்கத்துக்குச் செல்

கசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசன் {சமசுகிருதம்|कच}, Kaca) தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன். கசனைப் பற்றிய விவரம் மகாபாரதம் மச்சபுராணம் மற்றும் அக்னி புரணாங்களில் உள்ளது.[1] அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வர பிரகஸ்பதியால் அனுப்பப்படுகிறான். காரணம் இந்த மந்திரத்தைக் கொண்டு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் போரில் மரிக்கும் தேவர்களை மீண்டும் உயிர் பிழைக்க வைக்கலாம் என்பதே.

சுக்கிராச்சாரியாரின் குருகுலத்தில் கசன் சேர்ந்து குருகுலக் கல்வியை தொடங்கினான். அந்நிலையில் சுக்கிராச்சாரியின் மகளான தேவயானி கசன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள். தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் கசன் சஞ்சீவினி மந்திரத்தை கற்க வந்ததை அறிந்த அசுரர்கள், கசனை பலமுறை கொல்ல முயன்றனர். ஒவ்வொரு முறையும் தேவயானி தலையிட்டு கசனை அசுரர்களிடமிருந்து சுக்கிராச்சாரியார் மூலம் உயிருடன் மீட்டாள்.

இறுதியாக அசுரர்கள் கசனை கொன்று எரித்து, கசனின் பிணத்தின் சாம்பலை சோம பானத்தில் கரைத்து அதை தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாருக்கு வழங்கினர்கள். அவரும் அதைக் குடித்து மகிழ்ந்தார். பின் அவர் கசன் காணாது தேடினார். தனது ஞானப்பார்வையால் கசன் தன் வயிற்றில் சாம்பலாக உள்ளான் என்ற விஷயம் அறிந்தார்.

தேவயானியின் வேண்டுதலால் சுக்கிராச்சாரி, கசனை சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்து, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். பின் கசன் சுக்கிராச்சாரியின் வயிற்றை கிழித்து வெளியே வந்து, இறந்த போன சுக்கிராச்சாரியை, அவர் உபதேசித்த சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்தான்.

கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மண்ந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதலாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து மீண்டும் வெளிப்பட்டதாலும் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதால் கசன் தேவயானியை மணக்க மறுத்தான். இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயனபடுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும் மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன், தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அடைந்தான்.

பின்னாளில் தேவயானி சந்திரகுல மன்னன் யயாதியை மணக்கிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pargiter, F.E. (1972). Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp.196, 196ff.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசன்&oldid=3802407" இலிருந்து மீள்விக்கப்பட்டது