ஒல்லி மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்லி மனிதன்
ஒல்லி மனிதனின் ஒரு தோற்றம்
முதல் தோற்றம் யூன் 10, 2009 இல் சம்திங் ஆவ்ஃபுல் பதிவில்
உருவாக்கியவர் எரிக் நட்சன்
தகவல்
பால்ஆண்

ஒல்லி மனிதன் (Slender Man) என்பது, ஒரு கற்பனையான இயல்புகடந்த கதைமாந்தன். இது திகில் தரும் இணைய "மீம்" ஆக 2009 ஆம் ஆண்டில் "சம்திங் ஆவ்ஃபுல்" (Something Awful) என்னும் நகைச்சுவை இணையத்தளப் பயனரான எரிக் நட்சன் (Eric Knudsen) என்பவரால் உருவாக்கப்பட்டது.[1] இது மெலிந்த இயல்புக்கு மாறான உயரம் கொண்டதும், கூறுகள் இல்லாத தலையையும் முகத்தையும் கொண்டதும், கறுப்பு நிற உடை அணிந்ததுமான ஒரு உருவம்.

ஒல்லி மனிதன் பற்றிய கதைகள் அவன் மக்களை, குறிப்பாகச் சிறுவர்களைப் பின் தொடர்தல், கடத்துதல், காயப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் காட்டுகின்றன.[2] ஒல்லி மனிதன் கற்பனைக் கதைகளில் மட்டுமன்றிப் பல்வேறுபட்ட கற்பனை ஆக்கங்களிலும், பொதுவாக இணையவழியாக உருவாகும் ஆக்கங்களில் தோன்றுகிறான். இலக்கியம், ஓவியம், நிகழ்படத் தொடர்கள் போன்றவை உள்ளிட்ட பல ஊடகங்களில் ஒல்லி மனிதனைக் காண முடியும்.[3][4] இணைய வழிக் கற்பனைகளுக்கு வெளியே, ஒல்லி மனிதன் பாத்திரம் ஒரு இணைய அடையாளமாக உருவாகியுள்ளதுடன், நிகழ்பட விளையாடுக்களில் உள்ளிடப்பட்டு மக்கள் பண்பாட்டிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

ஒல்லி மனிதன் தொடர்பான ஆக்கங்களின் வாசகர்கள், விசுக்கொன்சினில் உள்ள வோகேசாவில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி கத்தியால் குத்தப்பட்டது போன்ற, பல வன்முறைச் செயற்பாடுகளோடு தொடர்பு கொண்டிருந்ததால், 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒல்லி மனிதன் தொடர்பில் ஒழுக்கம் தொடர்பான பீதி உருவானது.

தோற்றம்[தொகு]

"சம்திங் ஆவ்ஃபுல்" இணைய மடற்குழுவின் இழை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு யூன் 10 ஆம் தேதி ஒல்லி மனிதன் உருவானான்.[5][6] அந்த இழை ஒரு "போட்டோசாப்" போட்டி ஆகும். இதில் போட்டியாளர்கள் வழமையான ஒளிப்படங்களை இயல்புக்கு மாறாகத் தோற்றம் அளிக்குமாறு மாற்றும்படி கேட்கப்பட்டார்கள். இப்போட்டியில், "விக்டர் சேர்ஜ்"[7] என்னும் புனைபெயரில் கலந்துகொண்ட எரிக் நட்சன் என்பவர், சமர்ப்பித்த இரண்டு கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களில் காணப்பட்ட சிறுவர் கூட்டம் ஒன்றில் கறுப்பு உடையுடன் கூடிய உயர்ந்த ஒல்லியான உருவம் ஒன்றைச் சேர்த்திருந்தார்.[8][9] முன்னைய சமர்ப்பிப்புகள் ஒளிப்படங்களை மட்டுமே கொண்டிருந்தபோதும், சேர்ஜ் படத்துடன் குறுகிய உரைகளையும் சேர்த்திருந்தார். இவ்வுரைகள், குறித்த உருவத்தின் பெயர் "ஒல்லி மனிதன்" எனவும், அவனால் சிறுவர்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் விளக்கின. அவ்வுரைகள் அந்த ஒளிப்படங்களைக் கற்பனை ஆக்கங்களாக உருமாற்றின. அந்த மடற்குழுவின் பிற இடுகையாளர்களும், காட்சிவழி, உரைவழிச் சேர்கைகள் மூலம் அப்பாத்திரத்தை விரிவாக்கினர்.[8][9]

"ஒல்லி மனிதன்" பாத்திரம் மிக வேகமாகவே பரவத் தொடங்கி, இரசிகரோவியம் (fanart), கதைமாந்தருடை விளையாட்டு (cosplay) பல்வேறு ஆக்கங்களுக்கு வித்திட்டது. இணையவழிக் கற்பனைக் கதைகளான "கிறீப்பிபாஸ்தா" திகில் கதைகள், சிறிய உரைகளுடன் இலகுவாகப் படியெடுக்கத் தக்கனவாக வெளிவந்தன. இவை ஒரு இணையத் தளத்தில் இருந்து இன்னொரு இணையத் தளத்துக்கு விரைவாகப் பரவின. முதல் ஆக்குனருக்குப் புறம்பாக, "ஒல்லி மனிதன்" பல்வேறு படைப்பாளர்களின் எண்ணற்ற கதைகளுக்கு விடயமாக மாறினான்.[3] ஒல்லி மனிதனின் பல்வேறு அம்சங்கள், அது தொடங்கிய "சம்திங் ஆவ்ஃபுல்" இழையிலேயே வெளியாகின. இவற்றுள் முதல் ஆக்கங்களுள் ஒன்று அந்தக் குழுவின் பயனர்களில் ஒருவரான "தொரோ-அப்" என்பவரால் உருவாக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டு செருமனியைப் பின்னணியாகக் கொண்ட கிராமியக் கதையான இதில் "டெர் குரொஸ்மன்" என்னும் பாத்திரம் வருகிறது. இது ஒல்லி மனிதனைக் குறிக்கும் தொடக்கப் படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[10]:36 ஒல்லி மனிதன் தொடர்பான முதல் நிகழ்படத் தொடர், "செ கார்ஸ்" என்பவர் "சம்திங் ஆவ்ஃபுல்" இழையில் இட்ட இடுகை ஒன்றில் இருந்து உருவானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dewey, Caitlin; Dewey, Caitlin (2014-06-03). "The complete history of ‘Slender Man,’ the meme that compelled two girls to stab a friend" (in en-US). The Washington Post. https://www.washingtonpost.com/news/the-intersect/wp/2014/06/03/the-complete-terrifying-history-of-slender-man-the-internet-meme-that-compelled-two-12-year-olds-to-stab-their-friend/. 
  2. De Vos, Gail Arlene (2012). What Happens Next?. ABC-CLIO. பக். 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781598846348. https://books.google.com/books?id=6HJwCRAlpioC&pg=PT162. 
  3. 3.0 3.1 Romano, Aja (October 31, 2012). "The definitive guide to creepypasta—the Internet's urban legends". The Daily Dot. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  4. "Slender Man: Birth of an Urban Legend". The Escapist இம் மூலத்தில் இருந்து 2017-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170924182453/http://www.escapistmagazine.com/articles/view/comicsandcosplay/columns/darkdreams/11906-Slender-Man-Birth-of-an-Urban-Legend. 
  5. "Slender Man: How a myth was born". Tampa Bay Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-21.
  6. "What is Slenderman, and what does it have to do with the Wisc. stabbing?" (in en). NY Daily News. http://www.nydailynews.com/news/national/slenderman-wisc-stabbing-article-1.1815135. 
  7. Klee, Miles (August 21, 2013). "How the Internet's creepiest meme mutated from thought experiment to Hollywood blockbuster". The Daily Dot. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
  8. 8.0 8.1 Chess, Shira (2012). "Open-Sourcing Horror: The Slender Man, Marble Hornets, and genre negotiations". Information, Communication & Society 15 (3): 374–393. doi:10.1080/1369118X.2011.642889. 
  9. 9.0 9.1 Dane, Patrick (October 31, 2012). "Why Slenderman Works: The Internet Meme That Proves Our Need To Believe". பார்க்கப்பட்ட நாள் 2013-02-20.
  10. Chess, Shira; Newsom, Eric (27 November 2014). Folklore, Horror Stories, and the Slender Man: The Development of an Internet Mythology. Palgrave Macmillan US. பக். 58–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-49113-8. https://books.google.com/books?id=xuGvBQAAQBAJ&pg=PT58. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லி_மனிதன்&oldid=3355209" இலிருந்து மீள்விக்கப்பட்டது