ஒத்தெல்லோ
ஒத்தெல்லோ (Othello) (ஒத்தெல்லோவின் சோகம்) என்பது வில்லியம் சேக்சுபியரால் 1603 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் ஒரு துன்பியல் நாடகம் ஆகும். இது 1565 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொக்காக்சியோவின் சீடனான சிந்தியோவால் எழுதப்பட்ட "ஒரு மூரிஷ் கேப்டன்" என்ற கதையின் அடிப்படையிலானது.[1] இந்தக் கதையானது, ஒத்தெலோ மற்றும் இயாகோ ஆகிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது. இனவெறி, காதல், பொறாமை, துரோகம், பழிவாங்குதல் மற்றும் மனந்திரும்புதல் ஆகியவற்றின் மாறுபட்ட மற்றும் நிலைத்து நிற்கும் கருப்பொருள்களால், ஒத்தெல்லோ தற்போதும் தொழில்முறை மற்றும் சமுதாய நாடக மேடைகளில் நிகழ்த்தப்படுகிறது, மேலும் பல திரைப்படங்கள் மற்றும் இலக்கியத் தழுவல்களுக்கான ஆதாரமாகவும் திகழ்கிறது.
கதாபாத்திரங்கள்
[தொகு]- ஒத்தெல்லோ
- டெஸ்டமெனோ
- இயாகோ
- மைக்கேல் காசியோ
- ரோடெரிகோ
- எமிலியா
கதைச்சுருக்கம்
[தொகு]வெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெசுடமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். மணமகளின் தந்தைக்கு இந்தக் காதல் திருமணத்தில் உடன்பாடு இல்லை. ஒத்தெல்லோ தனது மகளை ஏமாற்றி மணம் முடித்து விட்டதாக வழக்குத் தொடர்ந்தார். வழக்கில் ஒத்தெல்லோவிற்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. இராணுவத்தில் பணிபுரிந்து வந்த காசியோ ஒத்தெல்லோ மற்றும் டெசுடமெனோ இருவருக்கும் நட்பாய் இருந்தான். ஒத்தெல்லோ மைக்கேல் காசியோவிற்குப் பதவி உயர்வு அளித்தான். ஆனால், இந்தப் பதவி உயர்வுக்குத் தானே தகுதியானவன் என்று நினைத்திருந்த கொடூர எண்ணம் கொண்ட இயாகோ ஒத்தெல்லோவிற்கும் காசியோவிற்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி இருவரையும் பழிவாங்கத் திட்டமிட்டான். [2]
ஒரு நாள் காசியோவை நிறைய மது அருந்தச் செய்து படைவீரர்களுடன் வம்புச் சண்டை ஒன்றில் இழுத்து விட்டான். நிதானமிழந்த காசியோவும் சிறிய அளவில் சச்சரவுகள் செய்தான். ஆனால், இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்கி விசாரணைக்காக ஒத்தெல்லோவை வரவழைத்தான். அப்போது காசியோவிற்கு ஆதரவாகப் பேசுவது போல் பேசி காசியோ மது அருந்திய தகவலை ஒத்தெல்லோவின் கவனத்திற்குக் கொண்டு வந்தான். இதனால் ஆத்திரமடைந்து ஒத்தெல்லோ காசியோவின் பதவி உயர்வை இரத்து செய்து விட்டான். போதை தெளிந்த பின் ஒத்தெல்லோவிடம் தான் பெற்றிருந்த நன்மதிப்பை இழந்து விட்டதற்காக வருந்தினான். ஒத்தெல்லோவிடம் நன்மதிப்பைப் பெற அவனது மனைவி டெசுடமெனோவிடம் நடந்தவற்றைக் கூறுவது தான் சிறந்த வழி என்று கூறி மீண்டும் ஒரு சதியைச் செய்தான். காசியோ டெசுடமெனோவின் அறையை விட்டு வெளியேறும் போது ஒத்தெல்லோவிடம் தந்திரமாகப் பேசி டெசுடமெனோவின் மீது சந்தேகப்படச் செய்தான். ஒத்தெல்லோவிடம் வந்த டெசுடமெனோ காசியோவின் பதவி உயர்வை இரத்து செய்தது சரியான செயலல்ல என்றும், அவன் பெரிதாக ஏதும் தவறிழைத்து விடவில்லை என்றும் பரிந்து பேசினாள். இது ஒத்தெல்லோவின் சந்தேகத்தை அதிகரிக்கப் போதுமானதாக இருந்தது. மேலும், தவறுதலாக டெசுடமெனோ கீழே விட்ட கைக்குட்டையை காசியோவின் கையில் கிடைக்கச் செய்து அதை ஒத்தெல்லோவின் பார்வையில் படும்படிச் செய்து ஒத்தெல்லோவின் சந்தேகத்தை வலுப்படுத்தினான். இதனால் ஆத்திரமடைந்த ஒத்தெல்லோ கட்டிலில் படுத்திருந்த டெசுடமெனோவைக் கொலை செய்து விட்டான். அதே சமயம், காசியோவைக் கொல்ல இயாகோவால் அனுப்பப்பட்ட அடியாளின் சட்டைப்பையில் இருந்த கடிதங்களுடனும், அடியாளால் ஏற்படுத்தப்பட்ட காயங்களுடனும் தப்பி வந்த காசிேயா அந்தக் கடிதங்களை ஒத்தெல்லோவிடம் கொடுத்தான். நிகழ்ந்தவை எல்லாமே இயாகோவின் சதித்திட்டம் என்பதையும், காசியோ மற்றும் டெசுடமெனோ இருவருமே குற்றமற்றவர்கள் என்பதையும் தாமதமாக அறிந்த ஒத்தெல்லோ தன்னுடைய உடைவாளின் மீது விழுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டான். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cinthioʹs Tale: The Source of Shakespeareʹs Othello" (PDF). Harvard,Edu. Archived from the original (PDF) on 2018-01-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-24.
- ↑ http://www.absoluteshakespeare.com/guides/summaries/othello/othello_summary.htm
- ↑ http://shakespeare.mit.edu/othello/full.html