எரித்திரேய கடல்
எரித்திரேய கடல் (Erythraean Sea) (கிரேக்கம்: Ερυθρά Θάλασσα; Erythra Thalassa) என்பது பண்டைய நிலப்பட வரைவுகளில் குறிக்கப்படுகின்ற ஒரு கடல் பெயர் ஆகும்.
பெயர் தோற்றம்
[தொகு]"எரித்திரேய கடல்" என்னும் பெயர் கிரேக்க மொழிச் சொல்லாகிய "எருத்ரா" (Ερυθρά) என்பதிலிருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. அதற்கு "சிவப்பு" என்று பொருள். இன்று செங்கடல் என்று அழைக்கப்படுகின்ற பகுதியில் நீரின் மேல்மட்டத்தில் சிவப்பு நிற நுண்ணுயிரிக் கூட்டம் தோன்றி, செந்நிறமாகக் காணப்படுவதுண்டு.
எரித்திரேய கடல் "எரி திரைக் கடல்" என்னும் தமிழ்ப் பெயரிலிருந்து தோன்றியதாகச் சிலர் தரும் விளக்கம் ஏற்புடையதாகத் தெரியவில்லை. கடல் எரிவது போன்று செந்நிறம் தெரிவதாலும், திரை தோன்றுவதாலும் அப்பெயர் வந்ததாக விளக்கப்படுகிறது. "ருத்ரம்" என்னும் சமசுகிருத சொல்லோடு தொடர்புடைய எருத்ரா (Ερυθρά) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து "எரித்திரேய" கடல் என்பது பிறந்ததாகக் கொள்வதே சிறப்பு[1]
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பிளாவியுஸ் பிலோஸ்ட்ராட்டுஸ் என்பவர் கூற்றுப்படி, "எருத்ரா அல்லது சிவப்பு என்று அழைக்கப்படுகின்ற கடல் ஆழ்நீல நிறம் கொண்டது. எருத்ராஸ் என்னும் மன்னன் தன் பெயரை அக்கடலுக்கு அளித்தார்."[2]
எரித்திரேய கடல் என்று அழைக்கப்படும் நீர்ப் பகுதிகள்
[தொகு]"எரித்திரேய கடல்" யாது என்பது குறித்து வரலாற்றில் பல நீர்ப் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன:
- ஹெரொடோட்டஸ் என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் (கி.மு. 5ஆம் நூற்றாண்டு) தம் நூலில் பெனீசிய மக்கள் எரித்திரேய கடலிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
- கி.பி. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட "எரித்திரேய கடல் வழிக்கையேடு" (Periplus of the Erythraean Sea) என்னும் நூல் "எரித்திரேய கடல்" என்னும் பெயரால் அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதையும் குறிக்கிறது.[3]
- கடந்த நூற்றாண்டுகளில், நிலப்பட வரைநர்கள் "எரித்திரேய கடல்" என்னும் பெயரால் சோக்கோத்ரா தீவைச் சூழ்ந்த, குவார்தாஃபுயி முனைக்கும் (Cape Guardafui), ஆர்தாமாத் கரைக்கும் (Hadhramaut) இடைப்பட்ட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியைக் குறித்தார்கள். இப்போது ஏதென் வளைகுடா (Gulf of Aden) என்னும் பெயர் வழக்கில் உள்ளது. வடமேற்கு இந்தியப் பெருங்கடலை இப்பெயரால் குறிப்பிடும் நிலவரை படங்களில் செங்கடல் "அரபி வளைகுடா" (Arabian Gulf) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது.
- எரித்திரேய கடல் என்னும் பெயர் பாரசீக வளைகுடா (முந்நாட்களில் "செந்நிற வளைகுடா") பகுதியையும் குறித்தது.
- எரித்திரேய கடல் என்னும் பெயரால் செங்கடல் குறிக்கப்பட்டது. இது குறிப்பாக 19ஆம் நூற்றாண்டு வழக்கம். அதன்படியே "எரித்திரேயா" என்னும் நாடு பண்டைய கிரேக்க மூலத்திற்கு ஏற்ப பெயர்பெற்றது.
- 1895இலிருந்து செவ்வாய் கிரகத்தின் கருஞ்சிவப்புப் பகுதிக்கு எரித்திரேய கடல் (Mare Erythraeum) என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Red Sea". Encyclopædia Britannica Online Library Edition. Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
- ↑ Life of Apollonius of Tyana, Book III, chapter L, Loeb Classical Library
- ↑ 1794, Orbis Veteribus Notus by Jean Baptiste Bourguignon d'Anville