உள்ளடக்கத்துக்குச் செல்

என்றி டிரேப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்றி டிரேப்பர்
பிறப்பு(1837-03-07)மார்ச்சு 7, 1837
இளவரசர் எட்வார்டு கவுன்டி, வெர்சீனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 20, 1882(1882-11-20) (அகவை 45)
தேசியம்அமெரிக்கர்
துறைமருத்துவம், வானியல்
கல்வி கற்ற இடங்கள்மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளி
கையொப்பம்

என்றி டிரேப்பர் (Henry Draper) (மார்ச் 7, 1837 – நவம்பர் 20, 1882), ஒரு அமெரிக்க மருத்துவரும், தொழில்சாரா வானியலாளரும் ஆவார். வானொளிப்படவியலில் இவரது முன்னோடிப் பங்களிப்புக்களுக்காக இவர் இன்று பெரிதும் அறியப்படுபவராக உள்ளார்.

வாழ்வும் தொழிலும்

[தொகு]

என்றி டிரேப்பரின் தந்தை, யோன் வில்லியம் டிரேப்பர் ஒரு பெயர்பெற்ற மருத்துவரும் வேதியியலாளரும் தாவரவியலாளரும் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆவார். 1839ல் முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கி ஒன்றினூடாக ஒளிப்படம் எடுத்தவரும் இவரே.[1] தாயார் அந்தோனியா கொயெட்டானா டி பைவா பெரெய்ரா கார்டினர், பிரேசிலின் பேரரசரின் தனிப்பட்ட மருத்துவரின் மகள். மருமகள் அந்தோனியா மோரியும் ஒரு வானியலாளர்.[2]

என்றி டிரேப்பர், 1857ல், தனது 20 ஆவது வயதில் மருத்துவத்துக்கான நியூயார்க் பல்கலைக்கழகப் பள்ளியில் மருத்துவத்துக்கான பட்டம்பெற்று வெளியேறினார். முதலில், பெல்லெவு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்தார். பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1867ல் இவர் பணக்காரரான மேரி அன்னா பாமர் என்பவரை மணம் செய்துகொண்டார். டிரேப்பர் வானொளிப்படங்களைப் பயன்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கினார். 1872ல், உறிஞ்சர் கோடுகளைக் காட்டிய விண்மீன் நிறமாலை ஒளிப்படம் ஒன்றை எடுத்தார். இத்துறையில், யோசெப் புரோன்டோபர், லூயிசு மொரிசு ருதர்போர்ட், ஆஞ்செலோ செக்கி என்போர் இவருக்கு முன்னோடிகளாக இருந்தனர். ஆய்வில் ஈடுபடுவதற்காக 1873ல், நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைத் துறந்தார்.

இவர் 1874ல் வெள்ளி இடையோட்டத்தைப் ஒளிப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை வழிநடத்திச் சென்றார். அத்துடன் முதன் முதலாக ஓரியன் விண்மீன் படலத்தை 1880 செப்டெம்பர் 30ம் தேதி ஒளிப்படம் எடுத்தார். தனது 11 அங்குல கிளார்க்கு பிரதர்சின் முறிவுத் தொலைநோக்கி மூலம் 50 நிமிடத் திறப்பு நிலையில் இப்படம் எடுக்கப்பட்டது. 1880 வியாழனின் நிறமாலையையும் இவர் ஒளிப்படம் எடுத்தார். மிகவும் விரும்பப்பட்ட நிலவின் படங்களை எடுப்பதற்குக் களமாக விளங்கிய டிரேப்பரின் வானாய்வகம் நியூயார்க்கின் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சனில் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடம் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன் வரலாற்றுக் கழகமாகச் செயற்பட்டு வருகிறது.

என்றி டிரேப்பர்.

விருதுகளும், மதிப்புக்களும்

[தொகு]

டிரேப்பர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ எல்.எல்.டி சட்டம் சார்ந்த பட்டத்தையும், விசுக்கோசின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் இருந்து, வெள்ளிக் கடப்பைப் படம் எடுக்க ஐக்கிய அமெரிக்கக் குழுவின் பயணத்தை வழிநடத்தியமைக்காக 1882ல் அமெரிக்கச் சட்டமன்றப் பதக்கம் ஒன்றையும் பெற்றார். தேசிய அறிவியல்களுக்கான அக்கடமி, அசுட்ரோமினிசே கெசேசாஃப்ட்டு (Astronomische Gesellschaft) ஆகியவற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவற்றுடன், அமெரிக்க ஒளிப்படவியல் கழகம், அமெரிக்க மெய்யியல் கழகம், கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான அமெரிக்க அக்கடமி, அறிவியல் முன்னேறத்துக்கான அமெரிக்கக் கழகம் ஆகியவற்றிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.

இறப்புக்குப் பின்

[தொகு]

இரட்டை நுரையீரல் உறையழற்சி நோயினால் உரிய காலத்துக்கு முன்பே அவர் இறந்தபின்னர், அவரது மனைவி, வானியற்பியலில் தலைசிறந்த பங்களிப்புச் செய்தவர்களுக்கு மதிப்புச் செய்வதற்காக என்றி டிரேப்பர் பதக்கத்துக்கான நிதியொன்றை ஏற்படுத்தியதுடன், விண்மீன் நிறமாலைகளுக்கான என்றி டிரேப்பர் விபரப்பட்டியலை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் பயன்பட்ட தொலை நோக்கிக்கான நிதியையும் வழங்கினார். என்றி டிரேப்பரின் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தொலைநோக்கி, இப்போது போலந்தின் பிவின்சில் உள்ள வானியலுக்கான தோரன் மையத்தில் (நிக்கோலாசு கோப்பர்நிக்கசு பல்கலைக்கழகம்) உள்ளது. நிலவில் உள்ள டிரேப்பர் என அழைக்கப்படும் சிறிய கிண்ணக்குழிக்கு இவரது நினைவாகவே பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Orion Nebula: Where Stars Are Born, Chapter 3, Henry Draper, by C. Robert O'Dell, 2003, Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 067401183X
  2. "Vasser Encyclopedia: Antonia Maury". Vassar College. 2008. பார்க்கப்பட்ட நாள் September 4, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_டிரேப்பர்&oldid=2707916" இலிருந்து மீள்விக்கப்பட்டது