உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழ் (சைனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருக நெறியின் படி ஊழின் வகைகள்

ஊழ் அல்லது கர்மா அல்லது வினைப்பயன்  சைன அருக நெறியின் படி, உள மற்றும் அண்டவியல் சார்ந்த முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஆகும். எளிமையாகச் சொன்னால், மனிதனின் நல்வினையும் தீவினையுமே சீவனின் (ஆன்மா)  மறுபிறவியைத் தீர்மானிக்கின்றது என்பது சமணக்கொள்கை. உலகியல் சார்ந்த சம்சார உலகில் உழலும் ஆன்மாக்கள் இறுதியில் மோட்சத்தை அல்லது வீடுபேற்றை அடையும் வரை ஊழின் காரணமான பிறவிகளில் ஆன்மா உழன்று கொண்டிருக்கும். வீடுபேற்றை அடைவதற்கு தூய வழிகளில் ஒன்றை ஒருவன் கடைப்பிடிக்கவேண்டும்.[1]

தோற்றமும் வளர்ச்சியும்

[தொகு]

ஊழ் கொள்கை எல்லா  இந்திய மதங்களுக்கும் பொதுவானது எனினும், அது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதைக் கூறுவது கடினம். அருகரின் மிகப்பழைய நூல்களிலேயே ஊழ் கொள்கை தொடர்பான கருத்துக்களைக் காண முடிகின்றது.[2]  அவற்றில் அசராங்க சூத்திரம், சூத்திரக்கிருதாங்கம் என்பன குறிப்பிடத்தக்கவை..[3] மகாவீரருக்கு முந்திய பார்சுவ நாதரின் காலத்தில் ஊழ், மறுபிறவி போன்ற கோட்பாடுகள் சமணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை..[4] பொ.மு   8 அல்லது 9ஆம் நூற்றாண்டு என்று இந்தக் காலம் பொதுவாக வரையறுக்கப்படுகின்றது.[4][5]

பொ.மு 300 அளவில் பத்திரபாகுவின் காலத்தில் ஊழ் தொடர்பான நம்பிக்கை ஆழமாக வேரூன்றி விட்டது என்பதற்கான சான்றுகளை திகம்பர - சுவேதாம்பர இரு அருகப் பிரிவுகளிலும் காணமுடிகின்றது. அருக சமூக - சமய நடைமுறைகளான நோன்புகள், கடுமையான விரதங்கள்,  சல்லேகனை எனும் தன்னுயிர் நீப்பு[6] மற்றும் இறைமறுப்பு முதலான எல்லா அடிப்படைக் கோட்பாடுகளிலும், ஊழ் பற்றிய அருக நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருப்பதைக் காணலாம்.  ஊழில் சமணருக்கும் சைவ வைணவருக்கும் கொண்டிருக்கும் கருத்து மாறுபாடுகளையும் இந்த இடத்தில் நாம் ஊன்றி நோக்கவேண்டும். ஊழில் இந்துக்களிலிருந்து மாறுபட்ட கொள்கை கொண்டவர்கள் என்பதால், சைவ வைணவரின் சிரார்த்தச் சடங்கும் நீத்தார் வழிபாடும்  அருகரால் மூடநம்பிக்கை என்று விமர்சிக்கப்படுகின்றது.[7] மனிதன் மிருகமாகப் பிறக்கலாம், மிருகம் மனிதனாகப் பிறக்கலாம் என்ற ஆழமான நம்பிக்கையே, அருகரின் புகழ்பெற்ற ஜீவகாருணியம் என்ற கோட்பாட்டுக்கு அடிநாதமாக விளங்குகின்றது என்று கொள்ளலாம். . [8]

மெய்யியல் கண்ணோட்டம்

[தொகு]
ஊழால் தீர்மானிக்கப்படுபது பிறவிச்சுழலாகும்

அருகரின் நம்பிக்கைப் படி, ஊழ் என்பது, பிரபஞ்சம் முழுவதும் பரந்துள்ள பௌதிகப் பொருள் ஆகும். உயிரொன்று செய்கின்ற செயல்களைப் பொறுத்து ஊழின் துணிக்கைகள் அந்த உயிர் நோக்கிக் கவரப்படும்.  இந்தக் கவர்ச்சியானது, நாம் ஏதாவது ஒரு விடயத்தை செய்யும் போது, சிந்திக்கும் போது, சொல்லும் போது, கொல்லும் போது, திருடும் போது, ஒவ்வொரு செயலையும் பொறுத்து மாறுபட்டு இடம்பெறும். எனவே அருகரின் ஊழ் என்பது காரண காரியங்களுக்கு மாத்திரம் பொறுப்பானதல்ல. உயிரை ஊடுருவி நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நுட்பமான விடயம் ஆகும். உயிரின் தூய, வெளிப்படையான, இயற்கையான ஒவ்வொரு  இயல்பும் இவ்வாறு  ஊழால் தீர்மானிக்கப்படுகின்றது.  ஊழ் ஆன்மாவை வெவ்வேறு நிறங்களால் சாயம் பூசும் ஒருவித அழுக்காக வர்ணிக்கப்படுகின்றது. இந்த நிறங்களுக்கு ''லேஸ்யம்'' என்று பெயர். ஊழின் அடிப்படையில், இவ்வாறு சொர்க்கம், நரகம், பூவுலகு, மனிதர், விலங்குகள் என்று பல்வேறு பிறப்பெடுக்கும் உயிர்கள் இந்த லேஸ்யம் அகன்று  தூய நிலையில் வீடுபேறு அடைகின்றன. 

அளவில் அறிவு, அளவில் ஆற்றல், வரம்பில் இன்பம் என்பன உயிர்களுக்கு இயல்பானவை. அவை இயல்பாகவே தூயவை.[9] எனினும், ஊழால் இவை பாதிக்கப்படும் போது, உயிர்களின் இந்த இயல்புகள் இழக்கப்பட்டு விடுகின்றன. உயிர்கள் ஊழால் முடிவிலிக்காலம் முதலே பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன.[10] ஊழுக்கும் உயிர்க்குமான இந்த இயல்பு செம்பும் களிம்பும் என்று  அருக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. .

பருவடிவ ஊழும் நுண்வடிவ ஊழும்

[தொகு]
ஆன்மா தன் இறப்பின் பின் ஊழைப் பொறுத்து நான்கு இடங்களுக்குச் செல்லும்.

ஊழை பருப்பொருளாகக் காணும் அருகம், உலகம் எங்கும் பரந்துள்ள,  மிக நுண்மையான, எளிதில் உணரமுடியாத அணுத்துணிக்கைகளாக ஊழை வரையறுக்கின்றது.[11] இவை மகிழ்தல், துயர்கொள்ளல் முதலான மனிதரின் ஒவ்வொரு இயல்புக்கும் பொறுப்பானவை. எண்ணிறந்தவை., இந்த பௌதிக துணிக்கைகளை "திரவிய கர்மம்" என்று அழைக்கின்றன அருக நூல்கள். திரவிய கர்மத்தின் விளைவால் நாம் அனுபவிக்கும் உணர்வுகள் பாவ கர்மம் என்று சொல்லப்படுகின்றன. .[12] பாவ கர்மத்துக்கும் திரவிய கர்மத்துக்கும் இடையிலான உறவு, காரண காரிய உறவு ஆகும்.[13] இந்த ஊழ்கள் இல்லாவிட்டால், பௌதிக உடலை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியாது என்பது அருகரின் நம்பிக்கை. உலகை உயிர் உணரும் இடைப்பட்ட வெளியில் "கர்மாண சரீரம்" எனும் ஊழ் நிறைந்தபுலமாக இந்த ஊழ்த்துணிக்கைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பின் உடலால் உணரப்படுவதாகஉம் நம்பப்படுகின்றது.

ஊழின் சுய இயக்கம்

[தொகு]

அருக ஊழானது,  காரியங்கள் மற்றும் அந்தக் காரியங்களின் பின்னுள்ள காரணங்களில் அதிக கவனம் செலுத்துகின்றது. தனிப்பட்ட செயல்களுக்கு இந்த ஊழ் பொறுப்பாவதால், இதை இறையருளால் நீக்கமுடியும் என்று அருகர் நம்புவதில்லை.  . ஊழ் காரண காரியத்துக்குப் பொறுப்பானது என்பதால், இறைநம்பிக்கை அற்ற அருக நெறியில்  இறைவனின் இடத்தைப் பெறுகின்றது. ஒருவர் செய்கின்ற செயலின் பலாபலன்களைப் பொறுத்து அவரது மறுபிறப்பை அவரது ஊழே தீர்மானிக்கின்றது என்கிண்றது அருக நெறி. [14] ஊழின் விளைவுகள் நிச்சயமானவை, தவிர்க்கமுடியாதவை. எந்தவொரு தெய்வீக சக்தியும் ஊழின் ஆற்றலிலிருந்து மாந்தரை விடுவிக்கமுடியாது. சுய கட்டுப்பாடும்,தவமுமே ஊழின் ஆற்றலை ஓரளவு கட்டுப்படுத்த இயலும்..[15][16]

அருக நூல்களின் படி, தன் ஊழால் பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள ஆன்மா நான்கு 'கதி'களில் நிலவ முடியும். தேவர், நரகர், திரியஞ்சம் (அஃறிணைகள்), மானுடர் என்பவை அவை. இந்த நான்கு கதிகளில்  தேவகதி அதியுயர்ந்தது. மனிதகதி அடுத்த படி. மூன்றாம் படியில் திரியஞ்சமும் இறுதிப்படியில் நரகமும் அமைகின்றன.  .[17] ழு நரகத்தின் அமைந்துள்ளது.

ஆன்மாவுக்குச் சாயம்பூசல் - லேஸ்யம்

[தொகு]
அருக நூல்களில் "மாமரமும் அறுவரும்" என்று விவரிக்கப்படும் லேஸ்யம். மரத்தை, அடிமரத்தை, தண்டை, கிளையை, சிறுகிளையை, பழத்தை மட்டும் பறித்தால் போதும் என்று சொன்ன அறுவரும் ஆறு லேஸ்யங்களைக் குறிப்பர்.

ஊழ் தொடர்பாக லேஸ்யம் என்பது முக்கியமான சைனக் கொள்கை.    இந்த லேஸ்யங்கள், பளிங்கு தான் சேர்ந்த பொருளின் நிறத்தைப் பெறுவது போல, ஆன்மா பெறுகின்ற இயல்புகளாக இனங்காணப்படுகின்றன. ஒவ்வொரு நிறங்களும் ஆன்மாவின் ஒவ்வொரு இயல்புகளைக் குறிக்கின்றன. எனவே லேஸ்யம்உயிர்களின்  ஊழைத்தீர்மானிக்கின்றன என்பது லேஸ்யத்தின் விரிந்த வடிவம்.லேஸ்யம் என்பது ஆறு  வண்ணங்கள்: கருப்பு, நீலம், சாம்பல், மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை.[18] , கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் அமங்கல லேஸ்யங்கள். உயிரின் போகூழுக்குப் பொறுப்பானவை.  மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை என்பன மங்கல லேஸ்யங்கள். இஐ உயிர்களுக்கு ஆகூழைக் கொணர்கின்றன.   உத்தராத்யாயாயன் சூத்திரம் எனும் அருக நூல், வெள்ளை மற்றும் கருலோஐ லேஸ்யமாகக் கொண்டோரின் மனநிலை மாறுபாடுகளை விரிவாக விவாதிக்கின்றது. :[19]

ஊழைப் பாதிக்கும் காரணிகள்

[தொகு]

கீழ்வரும் நான்கு காரணிகள் ஊழ் மானுடனைப் பாதிக்கும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன:

  • இயற்கை (பிரகிருதி ) – அருக நூல்களில் ஊழ் நல்லூழ் தீயூழ் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவை இரண்டும் நன்னான்கு பிரிவுகளாகப் பிரிக்கபப்ட்டுள்ளன. எனவே மொத்தம் எட்டு வகையான ஊழ்கள் உண்டு.  தீயூழ் (''காதிய கர்மா'')  நான்கும், தர்ஷனாவரணம் (புலன்கெடு தீயூழ்), ஞானவரணம் (அறிவுகெடு தீயூழ்), அந்தராயம் (தடைகொடு தீயூழ்), மோகனீயம் (மயக்கு தீயூழ்) என்பவை. நல்லூழ் நான்கும் (''அகாதிய கர்மா'') நாமம் (உடல்கொடு நல்லூழ்), ஆயுள் (ஆயுள்கொடு நல்லூழ்), கோத்திரம் (தரம்கொடு நல்லூழ்), வேதனீயம் (உணர்வுகொடு நல்லூழ்) என்பவை.[20] எனவே ஊழின் வகையை இயல்பைப் பொறுத்து, உயிர் பாதிக்கபப்டுகின்றது.
  • ஊழ்வலைக் காலம் (ஸ்திதி) - ( கால கர்ம பத்திர) – ஊழானது தான் இயங்குகின்ற காலம் வரை ஊழ் கட்டானது உயிரைப் பிணைத்திருக்கும். இது உயிரை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிரின் ஆன்மிக வளர்ச்சியை இது கட்டுப்படுத்தும். 
  • அனுபவம் – உயிர்களின் ஊழை அனுபவிக்கும் அளவு, அது கடுமையானதோ மென்மையானதோ, ஊழின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது. உயிர் முதிர்ச்சி அடைய அடைய, இந்த அனுபவமானது அதிக தீவிரம் அடையும். 
  • அளவு' (பிரதேசம்) அனுபவமொன்றை உயிர் பெறும் போது, அடையப்படுகின்ற ஊழின் அளவு ஆகும்.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Chapple 1990, ப. 255
  2. Glasenapp 1999, ப. 175.
  3. E.B 2001, ப. 3357, 3372
  4. 4.0 4.1 Glasenapp 1999, ப. 176.
  5. Glasenapp 2003, ப. ix
  6. Jaini 2000, ப. 134
  7. Jaini 2000, ப. 135
  8. Patil 2006, ப. 11
  9. Jaini 1998, ப. 104–06
  10. Jaini 1998, ப. 107
  11. Gombrich 2006, ப. 50
  12. Jaini 1998, ப. 112
  13. Shah 1998, ப. 262
  14. Tukol 1980, ப. 73
  15. Jaini 2000, ப. 76
  16. Dundas 2002, ப. 97
  17. Jaini 1998, ப. 108
  18. Jacobi 1895, ப. 197
  19. Jacobi 1895, ப. 199–200
  20. Sanghvi 1974, ப. 302

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊழ்_(சைனம்)&oldid=2521118" இலிருந்து மீள்விக்கப்பட்டது