உள்ளடக்கத்துக்குச் செல்

உரோமனெசுக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐபெல், ரைன்லாந்தில் உள்ள மரியா லாச் குருமடத்தில் காணப்படும் செதுக்கு வேலை.
1160-75 காலத்தைச் சேர்ந்த வின்செசுட்டர் விவிலிய நூலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட "மோர்கன் தாள்". தாவீதின் வாழ்க்கைக் காட்சிகள்.

ரோமனெசுக் கலை (Romanesque art) என்பது, ஏறத்தாழ கிபி 1000 தொடக்கம், 12 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சற்றுப் பின் கோதிக் பாணியின் எழுச்சி வரை ஐரோப்பாவில் நிலவிய கலைப்பாணி ஆகும். இதற்கு முன்னிருந்த காலப்பகுதி முன்-ரோமனெசுக் காலம் எனப்படுகின்றது. இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டுக் கலை வரலாற்றாளர்களால் கட்டிடக்கலை தொடர்பில் முதலில் பயன்படுத்தப்பட்டது. குறித்த கட்டிடக்கலைப் பாணி உரோமக் கட்டிடக்கலைப் பாணியின் பல அடிப்படை அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. வட்டவடிவ வளைவுகள், வில்வடிவ வளைகூரைகள், அரைவட்ட முகப்பு அமைப்பு, இலை அலங்காரம் என்பன இந்த அம்சங்களில் குறிப்பிடத் தக்கவை. ஆனால், இப்பாணியில் முற்றிலும் வேறான பல அம்சங்களும் அடங்கியிருந்தன. தெற்கு பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் பாணியில் பிந்திய "அன்டிக்" காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சி காணப்பட்டது. ஆனால் சிசிலி தொடக்கம் இசுக்கண்டினேவியா வரையான கத்தோலிக்க ஐரோப்பா முழுவதும் பரவிய முதல் பாணி ரோமனெசுக் பாணியே ஆகும். ரோமனெசுக் பாணியில், பைசண்டியக் கலையின் செல்வாக்கும், பிரித்தானியத் தீவுகளின் தீவுக்குரிய கலையின் செல்வாக்கும் காணப்படுகின்றன.

இயல்புகள்

[தொகு]

ரோமனெசுக்குக் கட்டிடக்கலைக்குப் புறம்பாக இக்காலப்பகுதியின் கலைப் பாணி சிற்பத்திலும் ஓவியத்திலும் மிக வலுவானதாகக் காணப்பட்டது. ஓவியத்தில் இக்காலப் பாணி பெரும்பாலும் பைசண்டியப் படிமவியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட தேவாலய ஓவியங்களாக இருந்தன. "கிறித்துவின் மாட்சிமை", "இறுதித் தீர்ப்பு" போன்றவற்றுடன் கிறித்துவின் வாழ்க்கையில் இருந்து பல காட்சிகளும் இவற்றுள் அடங்கின. விளக்கப்படங்களுடன் கூடிய கையெழுத்து ஆவணங்களைப் பொறுத்தவரை மிகக் கூடுதலான அலங்காரமானவை விவிலியமும், தாவீதின் தோத்திரப் பாடல் நூலுமாகும். இவற்றில் பல புதிய காட்சிகளைக் காட்டவேண்டி இருந்ததால் அவை தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்பட்டன.

பின்னணி

[தொகு]

இந்தக் காலத்தில் ஐரோப்பா மிகவும் வளம் கொண்டதாக வளர்ச்சியடைந்தது. உயர் தரம் கொண்ட கலைகள், கரோலிங்கிய, ஒட்டோனியக் காலங்களைப்போல், அரச சபைகள், துறவிமடங்கள் ஆகியவற்றைக் கொண்ட குறுகிய வட்டத்துக்குள் அடங்கியிருக்கவில்லை. யாத்திரைகளுக்கான பாதைகளில் இருந்த நகரங்களின் தேவாலயங்களும், சிறிய நகரங்களிலும், ஊர்களிலும் இருந்த பல தேவாலயங்களும் உயர்தரம் வாய்ந்த அலங்காரங்களைக் கொண்டிருந்தன. பேராலயங்களும், பெரு நகரத் தேவாலயங்களும் பிற்காலத்தில் திருத்தங்களுக்கும் மீள் கட்டுமானங்களுக்கும் உட்பட்டன. ஆனால், உரோமனெசுக் காலத்தைச் சேர்ந்தவையாக இன்றும் நிலைத்திருப்பவை பெரும்பாலும் முன் குறிப்பிட்ட சிறிய தேவாலயங்களே.

சிற்பம்

[தொகு]

கட்டிடக்கலைச் சிற்பங்கள்

[தொகு]

உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் கல்லில் பெரிய ஆக்கங்களைச் செதுக்கும் மரபும் வெங்களத்தில் உருவங்களைச் செய்யும் மரபும் அழிந்து விட்டன. சில இயல்பளவு சிலைகள் சாந்தினால் செய்யப்பட்டன. ஆனால், தற்காலத்தில் அவை மிகவும் அரிதாகவே காணக்கிடைக்கின்றன.[1] முன்-உரோமானெசுக் ஐரோப்பாவுக்கு உரிய மிகவும் அறியப்பட்டதும், இன்றுவரை நிலைத்திருப்பதுமான பெரிய அளவு சிற்பவேலை ஆளளவு இயேசுவின் உருவத்தைக் கொண்ட மரச் சிலுவை ஆகும். இது 960-965 காலப் பகுதியில் கொலோனின் பேராயர் கேரோவினால் செய்விக்கப்பட்டது. பிற்காலத்தில் பரவலாகப் பயன்பட்ட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிற்பத்தின் முதல் மாதிரி இதுவெனத் தெரிகின்றது. இது பின்னர் "சான்செல்" வளைவுக்குக் கீழேயுள்ள வளையில் பொருத்தப்பட்டு, 12 ஆம் நூற்றாண்டில் இருந்து கன்னி மரியாளினதும், நற்செய்தியாளர் யோனினதும் உருவங்கள் சிலுவைச் சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் பொருத்தப்பட்டன.[2] 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் உருவச் சிற்பங்களை உருவாக்குதல் மீண்டும் புத்துயிர் பெற்றதுடன், கட்டிடக்கலைச் சிற்பங்கள் பிந்திய உரோமனெசுக் காலத்தின் அடையாளமாகவும் விளங்கின.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Some (probably) 9th century near life-size stucco figures were discovered behind a wall in Santa Maria in Valle, Cividale del Friuli in Northern Italy relatively recently. Atroshenko and Collins p. 142
  2. G Schiller, Iconography of Christian Art, Vol. II,1972 (English trans from German), Lund Humphries, London, pp. 140–142 for early crosses, p. 145 for roods, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85331-324-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமனெசுக்_கலை&oldid=2525886" இலிருந்து மீள்விக்கப்பட்டது