உடன்பாட்டு வினை எதிர்மறை வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உடன்பாட்டு வினை எதிர்மறை வினை[தொகு]

உடன்பாட்டு வினை[தொகு]

ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலைதான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது.[1]

உதாரணம்[தொகு]

 • வருகிறேன்
 • செய்கிறான்
 • செய்வேன்
 • பெறுவான்

போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.

எதிர்மறை வினை[தொகு]

ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.

உதாரணம்[தொகு]

 • வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
 • செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
 • செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
 • பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)

என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.

 • செய் + ஆ + ஆன் - செய்யான்
 • தெரி + அல் + அன் - தெரியலன்
 • வந்து + இல் + அன் - வந்திலன்

இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.

குறிப்பு[தொகு]

சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும். வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.

பெயரெச்சம்[தொகு]

 • கேட்கும் செவி,
 • காணும் கண்

இத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.

எதிர்மறைப் பெயரெச்சம்[தொகு]

 • கேள் + ஆ - கேளாச் செவி
 • காண் + ஆ - காணாக் கண்

வினையெச்சம்[தொகு]

 • செய்ய வந்தேன்,
 • செய்து வந்தான்

இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.

எதிர்மறை வினையெச்சம்[தொகு]

 • பாராது இருந்தாள்
 • எழுதாமல் இருந்தான்

எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும்.

சான்றுகள்[தொகு]

 1. "உடன்பாட்டு வினை". 23 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.