இளம் துருக்கியர் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளம் துருக்கியர் புரட்சி
Young Turk Revolution

1908 இல் இளம் துருக்கியரின் புரட்சி பற்றிய அறிவிப்பு
நாள் 1908
இடம் உதுமானியப் பேரரசு
  • இளம் துருக்கியரின் வெற்றி
  • இரண்டாவது அரசமைப்புக் காலம் தொடக்கம்
    • நாடாளுமன்றம் மீள உருவாக்கம்
    • 1876 அரசமைப்புச் சட்டம் மீள உருவாக்கம்
பிரிவினர்
இளம் துருக்கியர் உதுமானியப் பேரரசு உதுமானிய அரசு
தளபதிகள், தலைவர்கள்
உதுமானியப் பேரரசு சுல்தான் இரண்டாம் அப்துல் அமீது

இளம் துருக்கியர் புரட்சி (YOUNG TURKS REVOLUTION) ஆட்சிமுறை சீர்திருத்தம் கோரி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில், ஆட்டோமன் (OTTOMAN - TURKEY) பேரரசில் நடந்த புரட்சி. ஏகாதிபத்திய முடியாட்சிக்குப் பதிலாக, மக்கள் நலனை முன்னிறுத்திய ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட முடியாட்சி அமைக்கக் கோரிய (CONSTITUTIONAL MONARCHY) புரட்சி.


இவ்வியக்கம், பாரிஸ், ஜெனீவா போன்ற பகுதிகளில் நாடு துறந்து வசித்த ஆட்டோமன் (OTTOMAN) வம்சாவளி மக்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பிரஞ்சுப் புரட்சி முன்மாதிரியாய் அமைந்தது. டிசம்பர் 1876 இல் முதல் அரசியல் அமைப்புச் சட்டம் வடிவம் பெற்றது.


எதேச்சாதிகாரி சுல்தான் அப்துல் ஹமித், 1878 இல் இதன் செயற்பாட்டை நிறுத்தி வைத்தார். இதனால், புரட்சியின் தீவிரம் அதிகமாயிற்று. ஆட்சியில் உள்ள பொருளாதார, வரிவிதிப்புக் குறைகளைக் களைய ஜனநாயக முறையில் தீர்வு கோரப்பட்டது. ஆட்டோமனின் நிதி நிர்வாகம், ஐரோப்பியக் கடன் தரும் நிறுவனங்கள் நியமித்த 'ஆட்டோமன் பொதுக் கடன் நிர்வகிப்பு' என்னும் அமைப்பின் மேலாளுமையில் 1881 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. ஏற்கனவே பெரும்பாலான பால்கன் பகுதிப் பிரதேசங்கள் தன்னாட்சி பெற்று இருந்தன. அந்த வழியில் பேரரசு மேலும் சிதறிப் போவதை நிறுத்தக் கோரப்பட்டது.


அடிப்படையில் இது தேசியவாத புரட்சி எனினும், பரந்த பேரரசின் பல்வேறு இன மக்களின் வேறுபட்ட மரபு அடையாளங்கள் அழிந்திடாதிருக்க ஏதுவாக இனவாரி பிரத்யேக உரிமைகளும் அளித்தல் வேண்டும் என்பது எழுச்சியின் ஒரு மையக் கோட்பாடாக இருந்தது. 'வேற்றுமையுள் ஒற்றுமை' (UNITY IN DIVERSITY) நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் அவசியமெனும் சீரிய சிந்தனை அன்றே இருந்தது. ஒரு புறம், ஐரோப்பிய அரசு நிர்வாக முறையான 'அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த முடியாட்சி'யை வரவேற்றாலும், ஆட்டோமெனின் நிர்வாகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலையீடுகள் எதுவும் இருத்தலாகாது என்பதில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பாக இருந்தனர்.


இவ்வியக்கத்திற்கு, முற்றிலும் மாறுபட்ட மரபுகள், சித்தாந்தங்கள் கொண்ட பல்வேறு இன, மத அமைப்புகளிலிருந்தும் ஒருமித்த ஆதரவு கிடைத்தது. 1906 இல் பல இன, பிரிவு அமைப்புகள் இணைந்து "கமிட்டி ஆப் யூனியன் மற்றும் ப்ராக்ரஸ்" (COMMITTEE OF UNION AND PROGRESS (CUP)) என்னும் செயற்குழு உருவானது; பின்னாளில், இது ஒரு அரசியல் கட்சியானது. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள், மூன்றாம் படையில் (THIRD ARMY) உயர் பதவி வகித்தவர்கள். இதைக் கண்டு பயந்த சுல்தான், நிதி நெருக்கடி ஏற்படுத்தி, இவ்வமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முயன்றான்; ஆயிரக்கணக்கில் தனது கையாட்களை அமர்த்தி உளவு பார்த்தான். ஆனால், அவற்றையெல்லாம் மீறி, அக் குழு முனைப்புடன் செயல்பட்டது. இக் குழுவின் சில உறுப்பினர்கள் முடியாட்சி ஒழிய வேண்டுமென விரும்பிய போதிலும், பலர், ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்ட முடியாட்சியை ஏற்கத் தயாராகவே இருந்தனர்.

எப்படியும், எதேச்சிகார முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வர ஒரு புரட்சியின் தேவையை அனைவருமே உணர்ந்தனர். புரட்சியை முறியடிக்கும் ஆட்சியாளர்களின் அடக்கு முறை திட்டங்கள் வலுப்பெறும் முன்பாகவே, முதல் அடி தனதாக இருக்க வேண்டும் என்னும் நோக்குடன் மேஜர் அஹ்மத் நியாஸி (AHMED NIYAASI), 200 புரட்சி ஆதரவாளர்களுடன், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொணர வேண்டும் என்னும் முழக்கத்துடன் ஜூலை 3,1908 இல் தலைநகரை நோக்கி பயணமானார். இதுவே புரட்சி பரவலின் முன்னோடி.


அரசின் இராணுவமே புரட்சிக்காரர்களின் அனுதாபிகளாக இருந்தமையால், சுல்தானின் புரட்சியை முடக்கும் அதிரடி முயற்சிகள் அனைத்துமே தோற்றன. ஜூலை 6 இல், புரட்சி ஆரம்பப் பிரகடனம் வெளிவந்தது; அம்மாதம் 24 இல், அரசியல் அமைப்புச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருவதாக சுல்தான் அறிவித்தார். 'விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம், சம நீதி' எனும் புரட்சியின் கோட்பாடுகள், ஆட்டோமன் கொடியின் சிவப்பு - வெள்ளை வர்ணங்களில் எழுப்பட்ட கொடிகளைத் தாங்கிய படியே, தெருக்களெங்கும் வெற்றி ஊர்வலம் நடந்தது. மத, இன நல்லிணக்கம் வளருமென்பதைக் காட்டும் விதமாக, பல்வேறு மத, இனத்தவர் பேதமின்றி கட்டித்தழுவி மகிழ்ந்தனர். இரத்த வெறி பிடித்த சுல்தான் (RED SULTHAN) எனும் பெயர் வரக் காரணமான 1896 இல் நடந்த மனிதப் படுகொலைப் போரில் இறந்தவர்களுக்கான சிறப்பு பிராத்தனையில் அனைத்து மத குருக்களும், இனத்தவரும் கலந்து கொண்டனர்.


இருப்பினும், இளம் துருக்கியினர் புரட்சி, கொள்கை அளவில் தோல்வி அடைந்ததாகவே கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு, ஜனநாயக முறை, சமத்துவம், நிர்வாகத்தில் சம ஒதுக்கீடு போன்ற உயர் கோட்பாடுகள் துவக்கத்தில் உறுதி அளிக்கப்பட்டாலும், நடைமுறையில் இவை எதுவுமே செயல்படுத்தப்படவில்லை என்பதே நிதர்சன உண்மை. இன, மரபு சிறப்பு அடையாளங்கள் காக்கப்படவில்லை. இன, மொழி பாகுபாடற்ற தேசிய உணர்வு ஐரோப்பாவில் பரவியதன் விளைவாக, ஏற்கனவே இருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் சிதறி புதிய நாடுகள் உருவாவதற்கு அது காரணமாயிற்று; ஆட்டோமான் பேரரசிலிருந்து (OTTOMAN EMPIRE) பால்கன் நாடுகள் பிரிந்தது ஒரு உதாரணம்.


ஆட்டோமான் புரட்சியின் (OTTOMAN REVOLUTION) தோல்வி முழுவதுமே புரட்சியாளர்களைச் சாராது; பேரரசு பிளவுபடாது, அனைத்து வேறுபட்ட பிரிவினர்களுக்கும் சம உரிமை பெறுதல் புரட்சியின் உயர் நோக்கம். ஆனால் சுயநலம், அதிகாரப் பசி கொண்ட எதிர் வேட்டையாடும் சக்திகள் இருந்தமையால், கொள்கைக்கும், செயலாக்கத்திற்கும் நடுவிலான இடைவெளி மிகப் பெரிதாகிப்போனது என்பதே நிதர்சனமான உண்மை.