இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் (நூல்)
இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டைகள் (The Forts of Sri Lanka) என்னும் நூல், இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல் ஆகும். 1930 களின் நடுப்பகுதியில் இலங்கையில் பணி புரிந்த நெல்சன் என்பவரால் இந் நூல் எழுதப்பட்டது. இந்நூலுக்கான ஆய்வுத் தகவல்கள் நெல்சன் இலங்கையில் வாழ்ந்த காலத்தில், 1938 ஆம் ஆண்டுக்கு முன்னரே சேகரிக்கப்பட்டவை[1] ஆயினும். இந் நூல் 1984 ஆம் ஆண்டிலேயே எழுதி வெளியிடப்பட்டது.
உள்ளடக்கம்
[தொகு]இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளை இந்நூல் நான்கு பிரிவுகளாக ஆய்வு செய்கிறது. புவியியல் அடிப்படையிலான இப்பிரிவுகள் மேற்குப் பகுதிக் கோட்டைகள், தெற்குப் பகுதிக் கோட்டைகள், வடக்குப் பகுதிக் கோட்டைகள், கிழக்குப் பகுதிக் கோட்டைகள் என்பனவாகும்[2].
இவற்றில் மேற்குப் பகுதிக் கோட்டைகளின் கீழ், கொழும்பு, களுத்துறை, பெந்தோட்டை, நீர்கொழும்பு, கல்பிட்டி ஆகிய ஐந்து கோட்டைகள் பற்றிய விளக்கங்களும் விபரங்களும் தரப்பட்டுள்ளன. தெற்குப் பகுதிக் கோட்டைகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டுள்ளவை காலி, மாத்தறை, தங்காலை, அம்பாந்தோட்டை, கட்டுவானை ஆகிய கோட்டைகள் ஆகும். யாழ்ப்பாணம், அம்மன்னீல், ஆனையிறவு, பெசுச்சூட்டர் கடவை, பைல் கடவை, பூநகரி, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், அரிப்பு ஆகிய 13 கோட்டைகள் வடக்குப் பகுதிக் கோட்டைகள் என்னும் தலைப்பின் கீழ் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, திருகோணமலை, ஒசுட்டன்பர்க் ஆகிய கோட்டைகள் பற்றிய விபரங்கள் கிழக்குப் பகுதிக் கோட்டைகள் என்னும் தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளன.
மொத்தமாக மேற்கூறிய 25 கோட்டைகள் பற்றி ஆய்வு செய்யும் இந்நூலில் இக்கோட்டைகளின் 30 களில் இருந்த தோற்றங்களைக் காட்டும் ஒளிப்படங்களும், அளவெடுத்து வரையப்பட்ட பல வரைபடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
நூல் வரலாறு
[தொகு]பிரித்தானியரான நூலாசிரியர் நெல்சன் 1933 - 1938 காலப்பகுதியில் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் கணக்காளராகப் பணியாற்றிய காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அங்கிருந்த ஒல்லாந்தர் கோட்டைகள் பற்றிய விபரங்களைத் திரட்டினார். எனினும் ஆய்வு முற்றுப்பெற்று நூலாகக்கூடிய வாய்ப்பு அப்போது அமையவில்லை. 1938ல் இலங்கையிலிருந்து மீண்டும் ஐரோப்பா சென்றார். இரண்டாம் உலகப்போர் வெடித்தபோது படையில் சேர்ந்த நெல்சன் போர் முடிந்த பின்னர் அபர்டீன் பல்கலைக் கழகத்தில் நிதிப்பிரிவில் 30 ஆண்டுகள் பணியாற்றியபின் 1975ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதன் பின்பே தனது முன்னைய ஆய்வுகளை நிறைவு செய்யக்கூடிய நேரமும் வசதியும் அவருக்குக் கிடைத்தது. மூன்று ஆண்டு காலம் முயன்று இந் நூல் தொடர்பான ஆய்வுகளை நிறைவு செய்தார். தகவல்களைத் திரட்டி ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கடந்து விட்டபடியால், கோட்டைகளின் அப்போதைய நிலையை அறியும் பொருட்டுத் தனது 77 ஆவது வயதில் 1984 ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு வந்து முன்னர் தகவல் திரட்டிய பெரும்பாலான கோட்டைகளையும் பார்வையிட்டார்[3]. இந்நூல் 1984 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
2004 ஆம் ஆண்டுப் பதிப்பு
[தொகு]இதன் முதல் பதிப்பு 1984ல் வெளியிடப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த பின்னர் இந்நூலின் அடுத்த பதிப்பு இலங்கையில் வெளியிடப்பட்டது. 1993ல் நெல்சன் இறப்பதற்கு முன்னர். அவரது நண்பரும் ஆய்வாளருமான ஆர். கே. டி சில்வா என்பவரிடம் தனது 1984 ஆம் ஆண்டில் இலங்கை வந்து அறிந்து கொண்ட கோட்டைகளின் நிலைமைகள் பற்றிய அறைக்கையைக் கையளித்து முடியுமான வகையில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டிருந்தார். ஆர். கே. டி சில்வாவும் 2004 ஆம் ஆண்டில் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டைகளுக்குச் சென்று அக்காலது நிலைமைகள் தொடர்பிலான புதிய தகவல்களையும் சேகரித்தார். இத் தகவல்களைக் கொண்டு புதிய இற்றைப்படுத்திய பதிப்பு வெளியிடப்பட்டது. எனினும், புதிய தகவல்கள் நூலில் ஒவ்வொரு பகுதியின் முடிவின் பின்னர் தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் நெல்சனின் 1984 ஆண்டின் அறிக்கையும் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இப்பதிப்பை இலங்கை-நெதர்லாந்துச் சங்கம் வெளியிட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Nelson, W. A, The Dutch Forts of Sri Lanka", Sri Lanka - Nederland Association, 2004 (updated by de Silva, R. K. D.)