இராமதேவர் பூசா விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமதேவர் பூசா விதி (இராமதேவர் பூஜா விதி) என்னும் நூல் இராமதேவர் என்னும் சித்தரால் பாடப்பட்டது. [1]. பாடலகள் எண்சீர் விருத்தம் என்னும் யாப்பால் அமைந்துள்ளன. இதில் மொத்தம் பத்துப் பாடல்கள் மட்டுமே உள்ளன.

வேண்டும் என்னும் சொல் இந்த நூலில் ‘வேணும்’ சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இது மக்கள் வழங்கும் சொல். இது போன்ற நடையையும், பிற சித்தர் நூல்கள் 16-ஆம் நூற்றாண்டு என்று மு. அருணாசலம் குறிப்பிடுவதையும் எண்ணும்போது இந்த நூல் 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

ஆதி என்பது மணிவிளக்கு. அதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அகண்ட பரிபூரணமாக அது உள்ளது. இது சோதி உருவம். இது நாம் நடந்துகொள்ளும் மார்க்கமாக (வழியாக) உள்ளது. நாம் நலமுடன் வாழவே இந்த மார்க்கம். இது அறிவாகிய மனோண்மணி என்னும் ஆத்தாள் (தாய்). இதனை விருப்பு வெறுப்பு அற்ற நிர்குணத்தில் கண்டுகொள்ள வேண்டும். இப்படி இது சித்து வழியைக் காட்டுகிறது [2]

எடுத்துக்காட்டு[தொகு]

சித்தான மூன்று எழுத்துச் செயலாம் சோதி

சீரியவை யுங்கிலியும் சவ்வுமாகி

முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி

முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும் தான்

வித்தான வித்தையடா மூட்டும் பாரு

விரிவான முகக்கருவும் மூன்று கேளு

சத்தான அதன் கருவும் சிலையில் வைத்துச்

சதுரான விதி விவரம் அறியக் கேளே [3]
  • இந்தப் பாடலில் பயின்ற வரும் யுங்கிலி, சவ்வு, செபிக்க, சதுரான விதி போன்ற சொற்கள் தமிழுக்குப் புதியவை.

மேற்கோள்[தொகு]

  1. சித்தர் பாடல்கள் பதிப்பாசிரியர் அரு.இராமநாதன் பிரேமா பிரசுரம், 23 ஆற்காடு ரோடு, சென்னை 24 வெளியீடு, இரண்டு பாகம், மொத்தம் 686 பக்கம், ஐந்தாம் பதிப்பு 1986 பக்கம் 326
  2. பாடல் 1
  3. பாடல் 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமதேவர்_பூசா_விதி&oldid=2737261" இலிருந்து மீள்விக்கப்பட்டது