உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சின் இரண்டாம் நெப்போலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாம் நெப்போலியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் நெப்போலியன்
Napoléon II
பிரெஞ்சுப் பேரரசன்
ரோம் பேரரசின் மன்னன்
ரைக்ஸ்டார்ட் இளவரசன்
ஆட்சி22 ஜூன்-7 ஜூலை 1815
முடிசூட்டு விழா22 ஜூன் 1815
முன்னிருந்தவர்நெப்போலியன் I
பின்வந்தவர்நடப்பின்படி லூயி XVIII
உரிமைநிலை ஜோசப் பொனபார்ட்
முழுப்பெயர்
நெப்பொலியன் பிரான்சுவா ஜோசப் சாப்பரன் பொனபார்ட்
மரபுபொனபார்ட்
தந்தைநெப்போலியன் I
தாய்மரீ லூயி

நெப்போலியன் பிரான்சுவா ஜோசப் சார்ல்ஸ் பொனபார்ட் அல்லது இரண்டாம் நெப்போலியன் (Napoléon François Joseph Charles Bonaparte, மார்ச் 20, 1811ஜூலை 22, 1832) என்பவன் முதலாம் நெப்போலியனான நெப்போலியன் பொனபார்ட்டின் மகன் ஆவான். இவன் ஜூன் 22, 1815 முதல் இரண்டு வாரங்களுக்கு ஜூலை 7 வரை பிரான்சின் பேரரசனாக இருந்தவன்.

இவன் பாரிசில் பிறந்து 3 ஆண்டுகளில் 1814 இல் முதலாவது பிரெஞ்சுப் பேரரசு முடிவுக்கு வந்த போது அதன் பேரரசனாக இருந்த நெப்போலியன் பொனபார்ட் தனது முடிக்குரிய மகனை பிரான்சின் பேரரசனாக அறிவித்து தனது பதவியைத் துறந்தான். 1815 இல் வாட்டர்லூ போரில் முதலாம் நெப்போலியன் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் தனது 4 வயது மகனை பேரரசனாக அறிவித்து முடி துறந்தான். முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டதில் இருந்து அவன் தனது மகனைக் காணவில்லை.

ஜூன் 22, 1815 இல் தந்தையின் முடிதுறப்பை அடுத்து இரண்டாம் நெப்போலியனை பிரான்ஸ் நாட்டின் தலைவனாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்தது. ஆனாலும், அதே ஆண்டு ஜூலை 7-இல் அவனது பதவி திடீரென்று பறிக்கப்பட்டு பதினெட்டாம் லூயி பதவிக்கு வந்தான். அடுத்த பொனபார்ட் நெப்போலியன் III 1851 இல் பதவிக்கு வந்தான்.

நெப்போலியன் பிரான்சுவா ஜோசப் சார்ல்ஸ் பொனபார்ட், பிரெஞ்சுப் பேரரசன்

1815 இல் பிரான்சுவா முடி துறந்ததை அடுத்து தனது முழுக்காலத்தையும் ஆஸ்திரியாவில் கழித்தான். 1818 இல் அவனுக்கு ரைக்ஸ்டார்ட் அரசின் இளவரசன் என்ற பட்டம் வாழங்கப்பட்டது. இவன் பின்னர் ஜூலை 22, 1832 இல் தனது 21வது அகவையில் காசநோய் காரணமாக வியென்னா நகரில் இறந்தான். இவனது இறப்பில் பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. இவன் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது[1].

இரண்டாம் நெப்போலியன் தனது கடைசிக் காலத்தில் பவேரியாவின் இளவரசி சோஃபி உடன் நட்புக் கொண்டிருந்தான் எனவும் அவளுடைய மகனான முதலாம் மாக்சிமிலியன் (பிற்காலத்தில் மெக்சிக்கோ மன்னன்) இவனது மகன் என்றும் கருதப்படுகிறது[2].

ஜேர்மனியின் தலைவர் ஹிட்லரின் ஆணைப்படி 1940 ஆம் ஆண்டில் இரண்டாம் நெப்போலியனின் உடல் வியென்னாவில் இருந்து பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு, 1840 இல் நெப்போலியன் பொனபார்ட்டின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே சிறிது காலம் மகனின் உடலும் புதைக்கப்பட்டது. பின்னர் பாரிசுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]