இடைக்கோடு இடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீளமான வரிகளைத் தாளின் ஓரத்திலோ திரையின் ஓரத்திலோ மடித்து எழுதும்போது உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ அல்லது இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் (Hyphenation) எனலாம். பல மொழிகளில் '-' வடிவிலான பிணைப்புக்கோட்டுக் குறியை இதற்கெனப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

தமிழில் இடைக்கோடு இடல்[தொகு]

ஐந்தாம் வகுப்பு மாணவி தனது குறிப்பேட்டில் இடைக்கோடு இடல் முறையைப் பேணியுள்ள உரை

தமிழில் ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுக்களிலும் எழுதி வந்த நெடிய மரபு இருப்பதாலும், யாப்பிலக்கண நெறிமுறைகளைப் பற்றி வந்த மரபுப்பாக்கள் மிகுதியாக உள்ளதாலும் இடைக்கோடு இட்டு மடித்து எழுதுவதற்கான தெளிவான மரபு வளர்ந்துள்ளது. இம்மரபின் விளைவாகவும் தமிழ் எழுத்திலக்கணத்தின் சீரொருமையின் (consistence) பயனாகவும் இடைக்கோடிடும் நெறிமுறைகளை முறைப்படியாகக் கற்பிக்காத சூழலிலும் ஓர் ஒழுங்கு பேணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வலப்புறம் உள்ள படத்தில் "வெண்கொற்றக் குடையோ" என்று வரும் சொற்றொடரின் இடையே வரி மடியும்போது, போதுமான இடம் இல்லாவிட்டாலும் அசையின் நடுவே மடித்து றகர ஒற்றில் அடுத்த வரி தொடங்கக் கூடாது என்று மாணவி தவிர்த்திருப்பதைக் காணலாம்.

ப.டேவிட் பிரபாகர் என்ற மொழியியல் ஆசிரியர் தமிழில் சொற்களைப் பிரித்து எழுதும், இடைக்கோடு இடும் மரபை ஆய்ந்துள்ளார். அவர் அந்நெறிமுறைகளைக் கொண்டு கணினியில் உரை இயற்ற உதவும் செயலிகளில் தாமாக உரையை மடித்து விலக்கக்குறியை இடுவதற்கு இயலும் என்றும் காட்டியுள்ளார். அவரது ஆய்வின்படி தமிழில் வரியை மடித்து எழுதும்போது போது பின்வரும் நெறிகள் கடைப்பிட்டிக்கப்படுகின்றன.[1]

 1. உடைபடும் சொல்லின் ஓர் எழுத்து மட்டும் வரியின் இறுதியில் தனித்து நிற்காது.
 2. மடிந்து தொடரும் ஒரு சொல்லின் ஓர் எழுத்து மட்டும் பிணைப்புக்குறியைத் தொடர்ந்து வரியின் முதலில் வரலாகாது.
 3. ஒற்றெழுத்துகள் வரியின் தொடக்கத்தில் வாரா.

இவை பின்வரும் யாப்பிலக்கண நெறிகளின் விளைவாக ஏற்பட்ட மரபு என்றும் தெரிகிறது.

 1. மரபுப்பாக்களில் ஓரசைச்சீர்களும் ஓரெழுத்து அசைகளும் மிக அரிதாகவும் தெளிவாக வரையறுத்த இடங்களிலும் மட்டுமே சீர்களில் வருகின்றன.
 2. ஒற்றுகள் சொல்லின் தொடக்கத்தில் வருவதில்லை, அவை அசைகளில் ஒலிப்புக்கணக்கின் கீழும் வருவதில்லை.

உரை எழுதப் பயன்படும் கணிச் செயலிகளில்[தொகு]

உரைகளை எழுதி, வடிவமைத்து, தாளில் அச்சிடவும் கோப்புகளாகச் சேமிக்கவும் உதவும் கணிப்பொறிச் செயலிகளில் மடித்து எழுதும் நெறிகளை முறையாகப் பதிவு செய்தல் இன்றியமையாதது.[2][3] இந்நெறிகளின் துணைகொண்டே அவை உரைகளை இடம்விட்டு தகுந்த இடத்தில் மடிக்கவும், பிணைப்புக்குறி இடவும் செய்கின்றன.[4] தமிழுக்கு 2010-ம் ஆண்டுவாக்கில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் தமிழ் மரபுடன் முழுமையாகப் பொருந்தி வரவில்லை. தமிழ் இடைக்கோடிடுதலுக்கான மென்பொருள் நீட்சிகள் பின்வருவன.

ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும்[தொகு]

ஆங்கிலத்தில் இடைக்கோடு இடுதல் பின்வரும் விதங்களில் பயன்படுகிறது.

பிரித்தல்[தொகு]

 1. ஒரு வரிக்குள் அடங்கும் அளவுக்கான உரையை மட்டும் வைத்து மீதத்தை அடுத்த வரியில் மடித்து எழுதும்போது உடைபடும் சொல்லைக் காட்டும் பொருட்டு
 2. முன்னொட்டுக்களையும் பின்னொட்டுக்களையும் பிரித்துக் காட்டும் வண்ணம்
 3. அசைகளையும் எழுத்துக்காட்டலையும் சுட்டுவதற்காக

சேர்த்தல்[தொகு]

 1. கூட்டுச் சொற்களையும் கூட்டுச் சொற்றொடர்களையும் காட்ட
 2. பல சொற்கள் கொண்ட வரிசையை ஒரு சொல்லுடன் இணைப்பதற்காக

மேற்கோள்கள்[தொகு]

 1. ப, டேவிட் பிரபாகர் (2004), "Tamil Hyphenator" (PDF), தமிழ் இணையம், சிங்கப்பூர், pp. 151–155, 2010-09-21 அன்று பார்க்கப்பட்டது
 2. "Hyphenation". 2010-09-28 அன்று பார்க்கப்பட்டது.
 3. Etemad, Elika J. "CSS Text Level 3#hyphenate". W3C Working Draft 6 March 2007. The World Wide Web Consortium (W3C). 2010-09-28 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |coauthors= ignored (உதவி)
 4. Thottingal, Santhosh. "ITP:openoffice.org-hyphenation-ta : tamil hyphenation". Feature Requests. Debian. 2010-09-28 அன்று பார்க்கப்பட்டது.
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-02-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-10-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்கோடு_இடல்&oldid=3543441" இருந்து மீள்விக்கப்பட்டது