உள்ளடக்கத்துக்குச் செல்

இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ் (பிறப்பு 1981) ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரர். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரியல் மேட்ரிட் அணிக்காகவும் ஸ்பெயின் தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த போர்டோ அணிக்காக விளையாடி வருகிறார். 2008 முதல் 2012 வரை ஐந்து முறை உலகின் மிகச்சிறந்த கால்பந்து கோல் கீப்பர் விருதினை வென்றதனால் உலகின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் வெற்றிகரமான கோல்கீப்பராக கருதப்படுகிறார்.[1] இவர் உடல் வலிமை மிக்கவராகவும், துள்ளிய நகர்வுகள் செய்து கண்கவர் தடுப்புகளை செய்வதாலும் "செயிண்ட் இக்கர்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.[2][3][4][5]

ரியல் மாட்ரிட்

[தொகு]

இளம் வயது கஸிலஸ் 1990ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் குழுமத்தில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி 1999 ஆம் ஆண்டு அதன் முன்னணி அணியில் விளையாட ஆரம்பித்தார். தொடர்ந்து 16 ஆண்டுகள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இறுதி ஆண்டுகளில் அந்த அணியின் தலைவராகவும் திகழ்ந்தார். அந்த அணிக்காக விளையாடி ஸ்பெயின் நாட்டினுள் நடந்த போட்டிகளில் 11 கோப்பைகளும், ஐரோப்பிய அளவில் நடந்த போட்டிகளில் 5 கோப்பைகளும் மற்றும் உலகளாவிய போட்டிகளில் இரண்டு கோப்பைகளும் வென்றுள்ளார். இவர் 725 ஆட்டங்களில் விளையாடி ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

போர்டோ குழு

[தொகு]

நீண்ட காலமாக ரியல் மேட்ரிட் அணியில் விளையாடிய கஸிலஸ் 2015 ஆம் ஆண்டு பல யூகங்களுக்கு பின் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த போர்டோ அணிக்கு மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு ஒப்பந்தமானார். இதனால் பல ரியல் மேட்ரிட் ரசிகர்கள் கவலையுற்றனர். இவரின் பெற்றோர் ரியல் மேட்ரிட் குழுமத் தலைமை இவரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர். போர்டோ அணியிலும் இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதிக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடிய சாதனையும் அதிக போட்டிகளில் கோல் விடாமல் ஆடிய சாதனையையும் இவர் நிகழ்த்தினார். மே 2018 ஆம் ஆண்டு போர்டோ அணி போர்ச்சுகல் நாட்டின் கோப்பையை வென்றது. இவர் அந்த அணியுடன் செய்த ஒப்பந்தத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளார்.

ஸ்பெயின் தேசிய அணி

[தொகு]

இவர் ஸ்பெயின் தேசிய அணிக்காக மிகவும் இளம் வயதான 19ல் தேர்வு செய்யப்பட்டு தன் முதல் ஆட்டத்தினை ஜூன் 2000 ஆம் ஆண்டு விளையாடினார். தற்போது வரை 167 ஆட்டங்களில் இவர் விளையாடியது ஸ்பெயின் நாட்டு தேசிய சாதனையாகவும் மற்றும் ஐரோப்பிய அளவில் இரண்டாம் இடத்திலும் இது உள்ளது. 2008 ஆம் ஆண்டு இவர் தேசிய அணியின் தலைவனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆண்டு நடந்த ஐரோப்பிய தேசிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. அடுத்து 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் இவரின் தலைமையில் ஸ்பெயின் அணி கோப்பையை வென்றது. தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய தேசிய கால்பந்து போட்டியிலும் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.

சாதனைகள்

[தொகு]

2011 ஆம் ஆண்டு படி குழும கால்பந்து மற்றும் தேசிய கால்பந்து போட்டிகளில் உள்ள அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரு சில வீரர்களின் இவரும் ஒருவர் ஆனார். செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் ஆனார். ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு தனது 1000 ஆவது போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக விளையாடி ரியான் கிக்ஸ் சாதனையை இவர் சமன் செய்தார்.

விளையாடும் பாணி

[தொகு]

இவர் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களால் மிகவும் திறமையான கோல் கீப்பர் எனக் கருதப்படுகிறார். இளமை காலம் முதல் தற்போது வரை மிகவும் நேர்த்தியான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஆட்டத்தின் பொழுது கவனமும், முக்கிய தருணங்களில் அமைதியுடன் செயல்படுவார். இவர் பல சமகால கோல் கீப்பர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். சிறந்த உடல் வலிமை கொண்டுள்ள இவர் ஆட்டத்தில் வேகமாகவும் செயல்படுவதால் எதிரணியினர் செலுத்தும் பந்துகளை மிகவும் நேர்த்தியாக தடுத்து விடுகிறார். மிக அருகில் இருந்து அடிக்கப்படும் பெனால்டி வாய்ப்பினை தடுப்பதில் இவர் வல்லவர். சில தருணங்களில் கோல்கீப்பர் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்து பந்துகளை முன்கூட்டியே இவர் தடுத்துவிடுவார்.

குடும்பம்

[தொகு]

கஸிலஸ் 20 மே 1981 ஆம் ஆண்டு ஜோஸ் லூயி என்ற கல்வித்துறை சேர்ந்த அதிகாரிக்கும் மரியா என்ற முடி திருத்துபவர்க்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இளைய சகோதரரும் சிறிய அளவிலான கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iker Casillas named World's Best Goalkeeper by IFFHS". Terra Sport. 4 January 2013.
  2. Morgan, Richard (5 February 2013). "25 Greatest Goalkeepers in Football History". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  3. Mundie, Adam. "Top five: Greatest goalkeepers of all-time". Give Me Sport. Archived from the original on 7 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 9 May 2015.
  4. Fernandes, Nitin (22 July 2013). "Football: The 20 greatest goalkeepers of all time". Sports Keeda. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.
  5. "The best football goalkeepers ever". bestfootballplayersever.com. பார்க்கப்பட்ட நாள் 19 June 2014.