ஆஷா சச்தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஷா சச்தேவ் (Asha Sachdev) என்கிற பெயரில் நன்கு அறியப்பட்ட நபீசா சுல்தான் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர், 1970கள் மற்றும் 1980களின் பாலிவுட் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.[1][2] இரகசிய உளவாளி படமான ஏஜென்ட் வினோத் (1977) மற்றும் அதிரடித் திரைப்படமான வோ மைன் நஹின் உட்பட சில ஆரம்ப படங்களில் முன்னணி நடிகையாகவும் நடித்தார்.[3] 1978-இல் பிரியதாமா படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஹிஃபாசத் (1973) மற்றும் ஏக் ஹி ராஸ்தா (1977) போன்ற வெற்றிகரமான படங்களில் இவர் முக்கிய கதாநாயகியாக இருந்தார். கிஷோர் குமார் மற்றும் ஆஷா போஸ்லே பாடிய, ராஜேஷ் ரோஷன் இசையமைத்த ஏக் ஹி ராஸ்தா படத்தில் இவர் மற்றும் ஜீதேந்திரா நடித்து படமாக்கப்பட்ட "ஜிஸ் காம் கோ டோனோ ஏ ஹை" பாடல் பிரபலமானதாக அறியப்படுகிறது. இதே போன்று, கவாலி பாடலான "பால் தோ பால் கா" எனத் தொடங்கும் பாடல் தொடர்ந்து பிரபலமாக உள்ளது. இது, முகமது ரஃபி மற்றும் ஆஷா போஸ்லே பாடியதாகும். இந்த பாடல் "தி பர்னிங் டிரெய்ன்" என்கிற பாலிவுட் திரைப்படத்தில் உள்ளது.

இவர், நடிகை ரஞ்சனா சச்தேவ் மற்றும் இசைக்கலைஞர் அஹ்மத் அலி கான் (ஆஷிக் ஹுசைன்) ஆகியோரின் மகள் ஆவார். இவர்கள் விவாகரத்து செய்த பிறகு, தனது மாற்றாந்தந்தையின் பெயரிலிருந்து தனது மேடைப் பெயரை ஏற்றுக்கொண்டார். பாடகர் அன்வர் உசைன் இவரது சகோதரர் ஆவார். இவரது தந்தையின் இரண்டாவது திருமணத்தின் மூலம் இவர் நடிகர் அர்சாத் வர்சியின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.

தொழில்[தொகு]

ஆஷா புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவர் ஆவார். இவர் 1972 இல் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான டபுள் கிராஸில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், அதில் இவர் ஒரு தைரியமான மற்றும் ஆற்றல் மிக்க பாத்திரத்தில் நடித்தார், இருப்பினும் படம் தோல்வியடைந்தது. ஹிஃபாஸாத் (1973) திரைப்படத்தில் இவருக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்தது, மேலும் அந்தப் படம் இவரது நல்ல நடிப்பிற்காகவும் பாடல்களுக்காகவும் பாராட்டப்பட்டது, குறிப்பாக "யே மஸ்தானி தாகர்" மற்றும் "ஹம்ராஹி மேரா பியார்" ஆகிய பாடல்கள் பிரபலமடைந்தன. அதன் பிறகு இவருக்கு துணை மற்றும் தைரியமான கதாபாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்கான வோ மைன் நஹின் (1974) என்ற நவின் நிஷ்சொல்- ரேகா ஸ்டார் த்ரில்லர் திரைப்படத்தில் ரெட் ஹாட் பேண்ட்டுடன் இவரது தைரியமான தோற்றம் பரவலாக பேசப்பட்டது.

இவர், அரிதாக முன்னணி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகளைப் பெற்றார் - ஏஜென்ட் வினோத் மற்றும் ஏக் ஹி ராஸ்தா (1977) போன்ற படங்கள் வெற்றி பெற்றன. 1978 இல் பிரியதாமா படத்தில் நீது சிங்கின் சிறந்த தோழியாக நடித்ததற்காக பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். இந்த கதாபாத்திரத்தில், இவர் ஒரு எளிய புடவை அணிந்திருந்தார். மேலும், படம் முழுவதும் இவரது கதாபாத்திரம் வருவதாக அமைக்கப்பட்டிருந்தது. மாமா பஞ்சா, லஃபாங்கே, மெஹபூபா, சட்டே பே சத்தா, துனியா மேரி ஜெப் மே, தி பர்னிங் ட்ரெயின், ஜுதாய், பிரேம் ரோக் மற்றும் ஈஸ்வர் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். 1980 களின் பிற்பகுதியில், இவர் தொலைக்காட்சிக்கு சென்றார், 90 களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார்.

இவர் 2000 களின் பிற்பகுதியில், மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு வந்தார். இவர், ஃபிசா, ஆகாஸ், ஜூம் பராபர் ஜூம் மற்றும் ஆஜா நச்லே போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். தொலைக்காட்சியில், இவர் ஆரம்பகால சோப் ஓபரா, புனியாத் போன்ற நிகழ்ச்சிகளில் (1986) பணியாற்றினார், மேலும் 2008 இல், இவர் நடிகர் ரஞ்சீத்துடன் சாப்(SAB) டிவியில் ஜுக்னி சலி ஜலந்தர் என்ற தொலைக்காட்சி தொடரிலும் தோன்றினார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷா_சச்தேவ்&oldid=3920428" இலிருந்து மீள்விக்கப்பட்டது