ஆர்னால்ட் பால்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்னால்ட் பால்மர்

ஆர்னால்ட் பால்மர் (Arnold Daniel Palmer 10 செப்டம்பர் 1929 - 25 செப்டம்பர் 2016) என்பவர் கோல்ப் ஆட்டத்தில் சிறந்த வீரராகக் கருதப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தொழில்முறை கோல்ப் ஆட்டக்காரர். இவர் கிங் என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படுகிறார்.[1]

கோல்ப் டைஜஸ்ட் என்ற இதழ் 2000இல் இவரை ஆறாவது சிறந்த ஆட்டக்காரராக மதித்துப் பாராட்டியது.[2] 2008 இல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 30மில்லியன் டாலர்கள் பெற்றார்.

இளமைக்காலம்[தொகு]

பெனிசில்வேனியாவில் பிறந்தார். இவர் இளம் வயதிலேயே தம் தந்தையிடமிருந்து கோல்ப் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டார். இவர் 17 வயதில் இருக்கும்போது மாநில அளவில் நடந்த போட்டிகளில் இரண்டு சாம்பியன்கள் பட்டம் பெற்றார். வேக் பாரஸ்ட் பல்கலைக் கழகத்தின் கோல்ப் ஆட்ட உதவித் தொகை இவருக்குக் கிடைத்தது.

1950 ஆம் ஆண்டில் கல்லூரியில் படிக்கும்போது இவருடைய நெருங்கிய நண்பர் ஒரு விபத்தில் இறந்து போனதால் கல்லுரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டுக் கடற்படையில் சேர்ந்தார். அதன் காரணமாக மூன்று ஆண்டுகள் கோல்ப் விளையாட்டில் இடைவெளி ஏற்பட்டது.

கோல்ப் வெற்றிகள்[தொகு]

50 ஆண்டுகளுக்கு மேலாக கோல்ப் ஆட்டத்தில் புகழுடன் இருந்தார். 90 ஆட்டப் போட்டிகளில் வாகை சூடினார். 1958, 1960, 1962, 1964 ஆகிய ஆண்டுகளில் மாஸ்டர் பட்டத்தை வென்றார். பல பொருள்களைச் சந்தைப்படுத்த இவருடைய பெயரைப் பயன்படுத்தி விளம்பரங்கள் வந்தன. அதன் மூலம் நிறைய பணம் ஈட்டினார். இவருடைய ஆட்டத்திற்கு என்று பிரத்தியேகமான வணிகச் சின்னம் உருவாக்கினார்.

1960 முதல் 1963 வரை ஆட்டங்களில் போட்டியிட்டு பட்டம் பெற்று 400000 டாலர்கள் ஈட்டினார். 1963இல் அமெரிக்க ரைட்ர் கிண்ணம் பெற்றார். 1975 இல் மீண்டும் அந்த ஆட்டத்திற்குத் தலைமை தாங்கி வெற்றி பெற்றார்.

முதலீட்டாளர்[தொகு]

கோல்ப் விளையாட்டு வீரர் என்று மட்டுமல்லாமல் நல்ல முதலீட்டாளராகவும் இருந்தார். தானியங்கி மற்றும் விமான குழுமங்களில் தம் பணத்தை முதலீடுகள் செய்தார். 1990களில் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டினார்.

பிற நற்செயல்கள்[தொகு]

1958 முதல் பிரீமேஸன்சில் உறுப்பினராக இருந்தார். ஸ்காட்லாந்து கால்பந்து கிளப்பை ஆதரித்து வந்தார். குழந்தைகள், இளைஞர்கள் முதலியோருக்கு உதவும் வகையில் ஓர் அறக்கட்டளை நிறுவினார். ஆர்லாண்டாவில் ஒரு மருத்துவமனையையும் தொடங்கினார்.

வெற்றிப் பதக்கங்கள்[தொகு]

2004 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் சுதந்திர பதக்கமும் 2009ல் காங்கிரசின் தங்கப் பதக்கமும் ஆர்னால்டு பால்மருக்கு வழங்கப்பட்டன.

இவர் வானுர்தி இயக்குவதிலும் வல்லவராக இருந்தார்.[3] 1999இல் இவரது 70 ஆம் பிறந்த நாளில் லாட்ரோபில் உள்ள வானூர்தி நிலையத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.

சான்றாவணம்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.golfdigest.com/story/golf-digest-celebrates-arnold-palmers-life-with-a-special-tribute-issue
  3. http://www.arnoldpalmer.com/aviation
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னால்ட்_பால்மர்&oldid=3542904" இருந்து மீள்விக்கப்பட்டது