ஆர்தர் ராம்போ
ஆர்தர் ராம்போ | |
---|---|
17 வயதாக இருந்தபோது வரையப்பட்ட ஆர்தரின் உருவப் படம் c.1872 | |
பிறப்பு | 20 அக்டோபர் 1854 |
இறப்பு | 10 நவம்பர் 1891 (அகவை 37) மர்சேய் |
பணி | கவிஞர், world traveler |
கையெழுத்து | |
![]() | |
ஜான் நிக்கோலாஸ் ஆர்தர் ராம்போ (Jean Nicolas Arthur Rimbaud - 20 அக்டோபர் 1854 – 10 நவம்பர் 1891) என்னும் முழுப்பெயர் கொண்ட ஆர்தர் ராம்போ சார்லேவில் (Charleville) என்னும் இடத்தில் பிறந்த ஒரு பிரெஞ்சுக் கவிஞரும், அரசின்மைவாதியும் ஆவார். நவீன இலக்கியம், இசை, ஓவியம் என்பவற்றில் இவரது செல்வாக்கு நீண்டகாலம் நிலைத்திருந்தது. மிக இளம் வயதிலேயே அவரது மிகப் புகழ் பெற்ற ஆக்கங்களை இவர் எழுதினார். இவரை ஒரு "குழந்தை ஷேக்ஸ்பியர்" என விக்டர் ஹியூகோ புகழ்ந்துள்ளார். ஆனால் இருபத்தொரு வயதாகு முன்பே ஆக்க எழுத்துக்களை நிறுத்திவிட்டார். எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். இவர் ஓய்வொழிவின்றி மூன்று கண்டங்களில் விரிவாகப் பயணம் செய்தார். 37 வயது நிறைந்து ஒரு மாதமாகு முன்னரே புற்றுநோய் காரணமாக இவர் காலமானார்.
வாழ்கைச் சுருக்கம்[தொகு]
பிரெஞ்சு நாட்டின் வட பகுதியில் சார்லிவில் என்ற சிறிய நகரில் 1954-இல் பிறந்தார் ரெம்போ. இவரின் தந்தை ஃப்ரெட்ரிக் ரெம்போ பிரெஞ்சுப் படையில் ‘கேப்டன்’ பதவி வகித்தவர். அவரது இராணுவப் பணி பெரும்பாலும் அல்ஜீரியாவில் கழிந்தது. ஃப்ரெட்ரிக் ரெம்போ அரபு மொழியை நன்கு கற்றவர். குரானை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர். ரெம்போவின் தாய், கண்டிப்பும் முரட்டுத் தனமும் மிக்கவர். இதனால் ரெம்போ ஆறுவயதுச் சிறுவனாக இருக்கும் போதே, இவரது தந்தை ஃப்ரெட்ரிக் மனைவியைப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு ரெம்போவோ, இவர் தாயோ அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.[1]
இயற்கையிலேயே விடுதலை வேட்கையும் பிடிவாதமும் கொண்ட ரெம்போவுக்குத் தாயின் கண்டிப்பும் அடக்கு முறையும் அடியோடு பிடிக்கவில்லை, பழமையில் ஊறிப் போன நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் இவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டன. அடிக்கடி தாயிடம் சொல்லாமல் ஊரை விட்டு ஓடுவதும், திரும்புவதுமாக இருந்தார். இந்தச் சமயத்தில்தான் இவருக்கு கவிதையில் நாட்டம் ஏறபட்டது.[1]
ரெம்போ பத்து வயதுப் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போதே அதி நுட்பமும், பிடிவாதமும், புதுமை விருப்பமும் போக்கிரித்தனமும் உடையவனாகக் காணப்பட்டார். பன்னிரண்டாம் வயதில் முதன் முதலாக இவர் எழுதிய இலத்தீன் கவிதை இவருக்குப் பள்ளிப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அது இடையர் வாழ்கையைக் கூறும் பாடல். பதினான்காம் வயதில் இவர் எழுதிய ‘ஏழுவயதுக்கவிஞன்’ (Seven-year-old poet) என்ற கவிதையில் தன் அறிவு நுட்பத்தைத் தானே பாராட்டி எழுதியிருக்கிறார்.[1]
1871 ஆம் ஆண்டு தன் பதினேழாம் வயதில் வீட்டைவிட்டு பாரிசுக்கு ஓடிய போது, அங்கிருந்த புகழ்பெற்ற கவிஞராகிய பால்வெர்லேனைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ரெம்போ வெர்லேனின் குடும்பத்தில் ஒருவராகவே இடம் பெற்றார். ஆனால் வெர்லேனின் தாயும் மனைவியும் ரெம்போவை வெறுத்தனர். இவருடைய விசித்திரமான பேச்சும், கொள்கையும், ஒழுங்கீனமான நடைமுறைகளும், படுக்கையில் இருந்தபடியே புகைபிடிக்கும் பழக்கமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் வெர்லேனின் தம்பதியாரிடையே மணமுறிவு ஏற்பட்டது. ரெம்போவுக்கும் வெர்லேனுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத பாலுறவுப் பழக்கம், கடைசியில் துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. 1974 ஆம் ஆண்டில் இவர்கள் இடையில் ஏற்பட்ட இந்த உறவு முறிவு ரெம்போவின் கவிதை வாழ்க்கைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வெர்லேனுடைய கவிதைப் பணியிலும் சரிவு ஏற்பட்டது.[1]
தனது பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றியலைந்தார். அப்போது பிழைப்புக்காக இவர் மேற்கொண்ட பணிகள் பல. கொஞ்சநாள் இசைப்பயிற்சியும், பிறமொழிப் பயிற்சியும் மேற்கொண்டார்; டச்சுக் காலனிப் படையில் சேர்ந்து சிலகாலம் பணி புரிந்தார். சைப்ரசில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தார். கடைசியில் அபிசீனியாவில் ‘அராரே’ என்ற இடத்தில் நிலையாகத் தங்கி காபி, கள்ளத் துப்பாக்கி, யானைத் தந்தம் முதலியவற்றை விற்பனை செய்ததோடு, கருப்பின அடிமைகளையும் பிரெஞ்சு வணிகர்களுக்கு விற்பனை செய்தார். இங்கு வாழ்ந்த சமயத்தில் இவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]
1891-ஆம் ஆண்டில் முழங்காலில் புற்றுநோய் ஏற்பட்டு, அதற்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக பிரான்சு திரும்பினார். மார்சேல்ஸ் மருத்துவமனையொன்றில் கால் துண்டிக்கப்பட்டு இறந்தார். அப்போது இவருக்கு வயது முப்பத்தேழு.[1]
தங்களிடையே உறவு முறிந்த நிலையிலும், வெர்லேன் ரெம்போவினுடைய கவிதைகளைத் திரட்டி ஒழுங்கு செய்தார். ரெம்போ இறப்பதற்கு ஓராண்டுக்குமுன், வெர்லேன் அராரேவுக்குக் கடிதம் எழுதி, ஏதாவது புதிய கவிதைகள் எழுதியிருந்தால் அனுப்பிவைக்கும்படி ரெம்போவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு ரெம்போ, அந்தக் குப்பையை நான் தீண்டுவது கூட இல்லை’ என்று பதில் எழுதியிருந்தார். ரெம்போ இறந்தபிறகே இவரின் கவிதைகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டன.[1]
ரெம்போ தனது இறப்புக்குப் பிறகு, தனது கவிதைகளோடு நிறையக் கடிதங்களையும் குறிப்புக்களையும் விட்டுச் சென்றிருக்கிறார். ரெம்போவின் சார்லிவில் நகரில், அவ்வூர் மக்கள் இவருக்குச் சிலையெடுத்துச் சிறப்பித்திருக்கின்றனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |