அ. சிதம்பரனார்
துடிசைக்கிழார் அ. சிதம்பரனார் (மறைவு-டிசம்பர் 30, 1954) தமிழக வரலாற்றாய்வாளர் மற்றும் பழந்தமிழ் நூலாராய்ச்சியாளர்.
பிறப்பு, கல்வி
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் கோயம்புத்தூரில் அர்த்தநாரீசுவர முதலியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றார்.
தனிவாழ்க்கை
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் காவல்துறையின் ஊர்காவல் படையில் பணிபுரிந்தார். பின்னாளில் வட்டார ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார்.
பங்களிப்பு
[தொகு]இலக்கிய ஆய்வு
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் உ.வே சாமிநாதையர் மற்றும் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பழந்தமிழ் நூலாராய்ச்சியில் ஈடுபட்டார். துடிசைக்கிழார் எழுதிய தமிழ்ச்சங்கங்களின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகளைக்கொண்டு ஆராய்வது. துடிசைக்கிழார் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிகளை தொகுத்து கழகத் தமிழ் வினாவிடை என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். துடிசைக்கிழாரின் ஆய்வுகள் பெரும்பாலும் இலக்கிய செய்திகளைக்கொண்டு ஊகங்களை நிகழ்த்தும் தன்மை கொண்டவை.
இலக்கியப்படைப்புகள்
[தொகு]துடிசைக்கிழார்சிதம்பர முதலியார் தன் ஊராகிய கோயம்புத்தூரை அடுத்துள்ள துடியலூரின் செய்திகளை ஆராய்ந்து துடிசைப் புராணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது மரபான புராணவகையைச் சேர்ந்த நூல்.
சைவப் பணி
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் சிவபூசை விளக்கம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். கௌமார மடாலயம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளுடன் அணுக்கமாக இருந்தார். துடிசைக்கிழார் எழுதிய திருமந்திரம் குறிப்புரை, திருமூலர் வரலாறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வரலாற்றாய்வு
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் சேர மன்னர்களின் காலம், வரலாறுகளை ஆராய்ந்து சேரர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
மறைவு
[தொகு]துடிசைக்கிழார் சிதம்பர முதலியார் டிசம்பர் 30, 1954 அன்று கோயம்புத்தூரில் மரணம் அடைந்தார்.
இலக்கிய இடம்
[தொகு]துடிசைக்கிழார் மரபான புராணமையப் பார்வை கொண்டவர். இலக்கியச்செய்திகளைக்கொண்டு வரலாற்றை உருவகிப்பது இவருடைய வழக்கம். உதாரணமாக, முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டுகள் இருந்ததாக துடிசைக்கிழார் தன் தமிழ்ச் சங்கங்களின் வரலாறு எனும் நூலில் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வுமுறைமையும் முடிவுகளும் பொதுவாக புறவயமான ஆய்வுகளை நிகழ்த்தியவர்களால் ஏற்கப்படுவன அல்ல. துடிசைக்கிழார் இன்று அவருடைய திருமந்திரக் குறிப்புரைக்காக சைவ ஆய்வில் குறிப்பிடும்படியானவராக கணிக்கப்படுகிறார்.
நூல்கள்
[தொகு]மதம்
[தொகு]- துடிசைப் புராணம்
- உருத்திராக்க விளக்கம்
- திருமூலர் வரலாறு
- விபூதி விளக்கம்[1]
- ஆனைந்து
- திருமந்திரம் குறிப்புரை
- சிவபூசை விளக்கம்
இலக்கியம்
[தொகு]- கழகத் தமிழ் வினாவிடை - 1
- கழகத் தமிழ் வினாவிடை - 2
- கழகச் சைவ வினாவிடை - 1
- கழகச் சைவ வினாவிடை - 2
- அகத்தியர் வரலாறு
- தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
வரலாறு
[தொகு]- சேரர் வரலாறு[2]