உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சுக்கோத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்செழுத்து பெட்டிமீது ஒரு அச்சுக் கோப்பான்.

அச்சுக்கோத்தல் (Typesetting) என்பது பொதுவாக அச்சிடுவதற்காக உலோகத்தில் உள்ள அச்செழுத்துக்களை கோர்க்கும் செயலாகும்.

பல நூற்றாண்டுகட்கு முன்பு அச்செழுத்து முறையைக் கண்டறிந்தவர்கள் சீனர்களாவர். அவர்களே முதன் முதலில் தாள் செய்யும் முறையைக் கண்டறிந்தவர்கள். சீனர்கள் கல்லில் அச்செழுத்துக்களை உருவாக்கி, அச்சிட்டு வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தான் கூட்டன்பர்க் எனும் ஐரோப்பியர் இன்றுள்ள அச்செழுத்து முறையைக் கண்டறிந்தார். பின்னர் இம்முறை விரைந்து ஐரோப்பாவெங்கும் பரவியது. அதன் பின் ஐரோப்பியர்கள் மூலம் கீழ்த்திசை நாடுகட்குப் பரவியது. இந்தியாவில் அச்சுமுறை முதன் முதலாகத் தமிழகத்தில் தான் தொடங்கியது.

பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அச்சுக்கலை பரவியபோது மர அச்செழுத்து உருவாக்கப்பட்டது. தனித்தனி அச்செழுத்துக்களை மரத்தில் செதுக்கி அம்மர எழுத்துக்களைக் கோத்துச் சொல்லாகவும் சொற்றொடராகவும் ஆக்குவார்கள். பின் அதன்மீது மையைத் தடவி, தாளில் அழுத்திப் பதிந்து அச்செழுத்தைப் பெறுவார்கள். மர அச்செழுத்துக்கள் விரைந்து தேயலாயின. தேயாத அச்செழுத்துக்களை உருவாக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக எளிதில் தேயாத உலோக எழுத்துக்களை வார்த்தெடுக்கும் புதிய முறை உருவாகியது. கையால் உலோக எழுத்துக்களை உருவாக்குவது கடினமாக இருந்தது. அதிக நேரம் செலவிட வேண்டியதாயிற்று. இதற்காக முயன்று ஆய்வு செய்து எழுத்துக்களை வார்க்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எளிதில் தேயாமலிருக்க ஈயத்துடன் ஆன்டிமணி போன்ற வேறு சில கெட்டி உலோகங்களைக் கலந்து எழுத்துக்களை உருவாக்கலாயினர்.

இவ்வாறு வார்த்தெடுக்கப்பட்ட உலோக எழுத்துக்களை மரப்பெட்டியில் தனித்தனி அறைகளில் இடுவர். ஒரு எழுத்துக்கு ஒரு அறை வீதம் அமைந்திருக்கும். அச்சுக் கோப்பவர் அவ்வறைகளிலிருந்து எழுத்துக்களைப் பொறுக்கிச் சொற்களையும் சொற்றொடர்களையும் அமைப்பர். எழுத்து அடுக்கப் பயன்படும் கருவி 'அச்சுக் கோப்பான்’ (Composing Stick) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு கோக்கப்பட்ட அச்செழுத்துக்கள் நீள் சதுரத் தட்டில் வைத்துச் சேகரிக்கப்படும். இதற்கு அச்சுத்தட்டு (Galley) என்று பெயர். பின், தட்டு நிறைந்ததும் அதன் மீது மை தடவி தாளைப் பதித்து எடுத்துப் பிழை திருத்தம் செய்வர். பின்னர் பக்கங்களாக அமைக்கப்படும். இவ்வாறு பதினாறு பக்கங்கள் ஆனவுடன் ஒரு 'ஃபாரம்' அல்லது படிவமாக அச்சிடப்படும்.

இம்முறையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கையினால் எழுத்துக்களை எடுத்து அச்சுக் கோக்க நீண்ட நேரமாகிறது. சக்தியும் அதிகம் செலவாகிறது. பத்திரிகைகளுக்கு விரைந்து அச்சுக்கோப்பது அவசியமாகிறது. எனவே, நீண்ட ஆய்வுக்குப் பின் அச்சுக்கோக்கப் புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. 1878ஆம் ஆண்டில் ஆட்மர் மென்கென்தாலர் என்பவர் 'வரி அச்சு' (Linotype)முறைளைக் கண்டறிந்தார். இம்முறை மூலம் செய்தியை வரிவரியாக அச்சு வார்க்க இயலும். இதனை ஒரு இயந்திரமே செய்யும்.

பின்னர் 1587ஆம் ஆண்டில் டோல்பெர்ட் என்பவர் தனி அச்சு எழுத்துருக்கு எந்திரம் (Monotype) ஒன்றைக் கண்டுபிடித்தார். தட்டச்சுப் பொறியை இயக்குவதுபோல் எழுத்துப் பொத்தான்களை அழுத்தினால் தாள் ஒன்றில் அது துளையாக அமையும். இது நாடா வடிவில் இருக்கும். துளையிடப்பட்ட இந்நாடாவை வார்ப்பு எந்திரத்துள் அமைத்துக் காற்றைச் செலுத்தினால் அது அச்செழுத்துக்களை அதன் துளைக்கேற்ப வார்த்து அமைக்கும்.

இம்முறைகளில் அச்சுக் கோப்புப் பணி உலோக வார்ப்பால் அமைவதாகும். உலோக எழுத்து வார்ப்பு இல்லாமலே எழுத்துக்களை அமைக்கும் புதிய முறை அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று “ஒளி அச்சுக்கோப்பு' முறையாகும். ஒளிப்பட முறையில் ஒளித்தகட்டில் அல்லது தாளில் எழுத்துக்கள் ஒளிப் பொறிப்புகளாக அச்சுக் கோக்கப்படும். இம்முறையே இதுவரை கண்டறியப்பட்டுள்ள முறையில் விரைவானதாகும். வரி அச்சில் ஒரு விநாடிக்கு 3 முதல் 5 எழுத்துக்களே அச்சுக் கோக்க முடியும். ஆனால் ஒளி அச்சு முறையில் 80 முதல் 100 எழுத்துக்கள் வரை அச்சுக்கோக்க முடியும். ஒளி அச்சின் வேகம் மணிக்கு எட்டாயிரம் சொற்களாகும். இஃது மேலும் வளர்ச்சியுற்று கணிப்பொறி அச்சுக்கோத்தல் (Computerised type setting), மின்ம எழுத்தாக்கம் ( Electronic) போன்ற முறைகளில் இன்று அச்சுக்கோக்கும் பணி விரைவாகவும் எளிதாகவும் அழகாகவும் நடைபெற்று வருகிறது. லேசர் அச்சாக்கம் (Laser printing) இன்று புகழ் பெற்று வரும் ஒன்றாகும். சாதாரணத் தாளில் நுண்கரும்புள்ளிகளை உருவாக்குவதன் மூலம் இத்தகைய அச்சுக் கோத்தல் பணி நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுக்கோத்தல்&oldid=3047831" இலிருந்து மீள்விக்கப்பட்டது