அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி
நிறுவப்பட்டது | 1940 |
---|---|
அமைவிடம் | ஜி.என்.பி.சாலை, குவகாத்தி, இந்தியா |
ஆள்கூற்று | 26°11′07″N 91°45′07″E / 26.1853352°N 91.7519043°E |
அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி அசாம் மாநிலத்தின் தலைநகரான குவகாத்தி நகரின் இதயப் பகுதியாகக் கருதப்படுகின்ற புகாரி டேங்கின் தென் முனைப் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் கமரூப அனுசந்தன் சமிதி (அசாம் ஆராய்ச்சி சங்கம்) என்ற நிறுவனத்தால் 1940 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. காலஞ்சென்ற காங்க்லால் பாருவா என்பவர் இந்த அருங்காட்சியக்ததை நிறுவியவர் ஆவார். அதன் தலைவராகவும் அவர் இருந்தார். 1953 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகம் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.
சிறப்பு
[தொகு]வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும், நகரின் மையத்தில் அதன் முக்கிய இடம் குவகாத்திக்கு வருகை தரும் ஏராளமான வரலாற்று ஆர்வலர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் இந்த அருங்காட்சியகம் 1940 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் போது நிறுவப்பட்டது. பாருவாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1953 ஆம் ஆண்டில், அவர் இறந்த பின்னர் அரசு நிர்வாகத்தின்கீழ் வந்தது.[1]
சேகரிப்புகள்
[தொகு]அசாம் மாநில அருங்காட்சியகத்தில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பல கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, அதில் கல்வெட்டு, சிற்பங்கள், பல்வகை கலைப்பொருள்கள், இயற்கை வரலாறு, கலை மற்றும் கைவினைப்பொருட்கள், மானுடவியல் மற்றும் நாட்டுப்புற கலை மற்றும் ஆயுதப் பிரிவு உள்ளிட்டவை அடங்கும். அசாம் மாநிலத்தின் பகுதிகளைச் சேர்ந்த கல், மரம், உலோகம் மற்றும் டெரகோட்டா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டநான்கு முக்கிய வகைகளைச் சேர்ந்த சிற்பங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தொகுப்புகள் மிகவும் அரிதானவையாகக் கருதப்படுகின்றன.
பிரிவுகள்
[தொகு]இந்த அருங்காட்சியகம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கையெழுத்துப் பிரிவில், அசாமி, தை, மியான்மரீஸ் போன்ற பண்டைய கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. பழைய மரங்களின் பட்டைகளில் உள்ள ஆவணங்களின் சேகரிப்பு உள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பிரிவில் வாள், இடைக்காலம் முதல் முகலாய காலம் வரையியுள்ள காலத்தைச் சேர்ந்த கவசங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரிலிருந்து பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் சேகரிப்பும் இதில் உள்ளது. 1200 களின் அஹோம் வம்சத்தின் ஆயுத சேகரிப்பு இந்த பிரிவின் தனித்துவமாகும். இவை தவிர டெரகோட்டா பிரிவு, கல்வெட்டு பிரிவு, இயற்கை வரலாற்றுப் பிரிவு, சிற்பங்கள் பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.[1]
அசாம் மாநில அருங்காட்சியகத்தில் உள்ள நூலகம் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது ஆகும். இங்கு ஸ்டெனோகிராஃபிக் சேகரிப்பில் பல பொருள்கள் உள்ளன. இந்த நூலகத்தில் பலவகையான பருவ இதழ்கள், பிற இதழ்கள், நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை கலை, கலாச்சாரம், புராணங்கள், சுயசரிதை, கலைக்களஞ்சியப் படைப்புகள் மற்றும் நாட்டிலிருந்து வெளிவருகின்ற ஆசிய சொசைட்டி இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களும் அடங்கும்.
பார்வையாளர் நேரம்
[தொகு]இந்த அருங்காட்சியகம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோடை காலத்திலும், காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் குளிர்காலத்திலும் திறந்திருக்கும். திங்கள் கிழமை தவிர பிற நாள்களில் பார்வையாளர்களுக்காக இது திறந்திருக்கும்; 2 வது மற்றும் 4 வது சனிக் கிழமை மற்றும் அரசு விடுமுறைகள் நாள்கள் அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாள்களாகும்..
மேலும் காண்க
[தொகு]- ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா
- தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்