அகுங் ராய் கலை அருங்காட்சியகம், உபுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகுங் ராய் கலை அருங்காட்சியகம்

அகுங் ராய் கலை அருங்காட்சியகம் (Agung Rai Museum of Art) என்பது இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

அமைவிடம்[தொகு]

அகுங் ராய் கலை அருங்காட்சியகம் ARMA என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் பெங்கோசெகன் சாலை , உபுத் 80571, இந்தோனேசியா என்ற முகவரியில் அமைந்துள்ளது பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியக்தை 09:00 முதல் 18:00 வரை பார்வையிடலாம்.[1]

தொடக்கம்[தொகு]

அகுங் ராய் கலை அருங்காட்சியகம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக திறந்து வைக்கப்பட்டதாகும். பாலி இனத்தைச் சேர்ந்த ஆங் ராய் என்பவர் இது தொடங்கிவைக்கப்பட்டது. அவர் தன் வாழ்க்கை முழுவதையும் பாலியின் கலை, பண்பாடு ஆகியவற்றிற்காகவே அர்ப்பணித்த பெருமையுடையவர். அலுவல்பூர்வமாக இந்த அருங்காட்சியகம் 9 சூன் 1996 ஆம் நாள் அன்று இந்தோனேசியாவில் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரான மபேராசிரியர் முனைவர் இங்க். வாடிமன் சோஜோனேகோரோ அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகமானது 13 மே 1996 ஆம் நாள் அன்று அமைக்கப்பட்ட அர்மா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் வாரத்திற்கு நான்கு முறை நிகழ்வுகளை நடத்துகின்றது. இங்கு உள்ளூரில் உள்ள குழந்தைகள் பாரம்பரிய நடனத்தை கற்றுக்கொள்வதற்கான மையம் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருகின்ற பார்வையாளர்களின் பயன்பாட்டிற்காக பண்பாடு தொடர்பான செயன்மைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1]

இலக்குகள்[தொகு]

இவ்வருங்காட்சியகத்தின் முதன்மை இலக்குகளாக பின்வருவன அமையும் [2]:

  • கலைப்பொருள்களை சேகரித்தல், தொகுத்தல், பாதுகாத்தல்.
  • ஓவியம், சிற்பம், நடனம், இசை மற்றும் பிற வகையான பண்பாட்டு வடிவிலான கலைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • உள்ளூர் மக்களுக்கு பல்வகைக் கலைகளின் திறமைகளை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருதல்.
  • பாலி, இந்தோனேசிய மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களால் தீட்டப்பட்ட ஓவியங்களை நிலையாக காட்சிப்படுத்த உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல். அவற்றுடன் ஆர்மா அறக்கட்டளையின் சேகரிப்புகளையும் காட்சிப்படுத்தல். கடன் அடிப்படையில் அகுங் ராய் மற்றும் அவருடைய சேகரிப்புகளையும் பெற்று காட்சிப்படுத்துதல்.

இங்குள்ள காட்சிப்பொருள்களில் பாரம்பரிய காலம் முதல் தற்காலம் வரையிலான சேகரிப்புகள் அடங்கும். கமாசனின் செவ்வியல்சார் ஓவியம், 1930கள் மற்றும் 1940களைச் சேர்ந்த பௌட்டன் கலைஞர்களின் மிகச் சிறந்த படைப்புகள், மற்றும் பாலித்தீவில் மட்டுமே காணப்படுகின்ற, 19ஆம் நூற்றாண்டின் ஜாவா கலைஞர்களான ராடென் சலேஹ் மற்றும் ஸ்யாரீப் புஸ்டமான் ஆகியோரின் படைப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிடத்தக்கதாக பாலி கலைஞர்களான முதலாம் கஸ்டி ந்யோம் லெம்பாட், இடா பாகஸ் மேட், அனக் ஆங்க் கேடே சோப்ரட் மற்றும் முதலாம் கஸ்டி மெட் டெப்லாக் போன்றோரின் படைப்புகளும் அடங்கும். பாலிப் பகுதியில் வாழ்ந்து, படைப்புகளை உருவாக்கிய வெளிநாட்டு கலைஞர்களான வில்லியம் கேராட், கோப்கர் ரடால்ப் போனட், மற்றும் வில்லியம் டூயிஜேவார்ட் ஆகியோர் உள்ளிட்டோரின் படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இது அருங்காட்சியகத்திற்கும் மேம்பட்ட நிலையில் தம் பணியினை ஆற்றி வருகிறது. இங்கு நிகழ்த்துகலைக்கான மையம் உள்ளது. பார்வையாளர்கள் அங்கு நிலையாகக் காணப்படுகின்ற ஓவியங்கள், சிறப்பு நிலையில் அமைந்த தற்காலிகக் கண்காட்சிகள், அரங்க நிகழ்வுகள், நடனம், இசை மற்றும் ஓவிய வகுப்புகள் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம். அங்குள்ள நூலகம், படிப்பறை உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் நடத்துகின்ற பண்பாட்டுப் பணிப்பட்டறைகள்,மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சித்திட்டங்கள் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் கலந்து கொள்ளலாம். சிறப்பான தரம் வாய்ந்த பல்வகைப் பணிகளை பலவகையான பண்பாட்டுப் பின்புலத்தோடு இந்த அருங்காட்சியகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். பாலியின் தனித்தன்மையை கொண்டு அமைந்துள்ள பண்பாட்டு பாரம்பரியத்தை அனுபவிக்கவும், கற்றுக் கொள்ளவும் விரும்புவோருக்கு இது பல வகையில் உதவி வருகிறது. என்றும் இயங்கும் நிறுவனம் என்ற சிறப்பினைக் கொண்டு அமைந்துள்ள இந்த அகுங் ராய் கலை அருங்காட்சியகம் பாலியின் கலைகளைப் பாதுகாக்க புதிய வகையான வாய்ப்புகளை வழங்கி வருவதில் எப்போதும் முன்னிடத்தில் இருக்கிறது. [2]

இலக்கியம்[தொகு]

  • Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-96-9. Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-96-9. Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-96-9.
  • இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Agung Rai Museum of Art (ARMA)
  2. 2.0 2.1 ARMA Museum Resort

வெளி இணைப்புகள்[தொகு]