தொடித்தலை விழுத்தண்டினார்
தொடித்தலை விழுத்தண்டினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் பயின்றுவந்துள்ள 'தொடித்தலை விழுத்தண்டு' ஒன்னும் அரிய தொடரைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்த ஆசிரியர்கள் இவ்வாறு பலருக்குப் பெயர் சூட்டியுள்ளனர். புறநானூறு 243 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகக் காணப்படுகிறது.
- இவர் தன் இளமைப் பருவம் தன் கையை விட்டுப் போனதைப் போனதைப் பாடியுள்ளார். எனவே இது கையறுநிலைத் துறைப் பாடல்.
கையறுநிலை
[தொகு]கல்லா இளமை யாண்டு உண்டுகொல்லோ! இனி நினைந்து இரக்கம் ஆகின்று - இளமை கழிந்து போனதை எண்ணி பெருமூதாளர் ஒருவர் வருந்துகிறார்.
கல்லா இளமை
[தொகு]பிறர் சொல்லிக் கொடுத்ததையோ, தான் கற்றறிந்ததையோ எண்ணிப் பார்க்காமல் தன் இளமைத் திணவு சொல்வதை மட்டும் பின்பற்றும் பருவம் 'கல்லா இளமை'
கயமாடும் மகளிர்
[தொகு]பருவப் பெண்களை மகளிர் எனல் சங்ககால வழக்கு. மகளிர் குளத்தில் நீராடுகின்றனர். குளத்தில் பூத்திருக்கும் பூவைப் பறித்து வருகின்றனர்.
பாவை
[தொகு]மகளிர் பாவை செய்து அந்தப் பாவைப்பொம்மைக்குக் குளத்தில் பறித்துவந்த பூக்களை அழகாகத் தைத்துச் சூட்டி மகிழ்கின்றனர்.
மூழ்கு நீச்சல் விளையாட்டு
[தொகு]ஆடவருள் கல்லா இளையர் ஒளிவு மறைவு இன்றி அவர்களோடு சேர்ந்து நீந்தி விளையாடுகின்றனர். சில வேளைகளில் மகளிரோடு தழுவி விளையாடுகின்றனர். சில வேளைகளில் மரக்கிளைகளைப் பற்றிக்கொண்டு தொங்கி மகளிர்க்குத் தம் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
அருகிலுள்ள மருத மரத்தில் ஏறித் தண்ணீரில் குதித்து மூழ்கி குளத்துறையின் அடியில் உள்ள மண்ணை எடுத்துவந்து காட்டி மகிழ்கின்றனர்.
பெருமூதாளர்
[தொகு]இப்போது அந்த இளமைக்காலம் போய்விட்டது. முதுமையிலும் முதிர்ந்து பெருமூதாளர் ஆகிவிட்டனர். அவர்களது தலை நடுங்குகிறது. பேசும்போது இடையிடையே இருமல் வருகிறது.
தொடித்தலை விழுத்தண்டு
[தொகு]நிற்கவோ நடக்கவோ ஊன்றுகோலின் துணை வேண்டியுள்ளது. அந்த ஊன்றுகோலையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. ஊன்றுகோலின் தலையில் பூண் இருப்பதால் அந்தப் பூணோடு சேர்த்துப் பிடித்துக்கொள்கின்றனர்.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
[தொகு]இந்தப் பாடல் இந்தப் பெருமகனின் தோற்றத்தைக் கண்டு பாடியதாகச் சில பதிப்புகள் தெரிவிக்கின்றன.