கல்பா, இமாச்சலப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்பா (Kalpa, Himachal Pradesh) இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தின் கின்னெளர் மாவட்டத்தில் ரெகாங் பியோவிற்கு மேல், சத்லஜ் ஆற்றின் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரம் கின்னெளர் இன மக்களின் குடியிருப்புப் பகுதியாகும். இந்த மக்கள் மற்றும் ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு புகழ் பெற்றவர்கள் ஆவர். ஆப்பிள் இப்பகுதிக்கு ஒரு பெரிய பணப்பயிர் ஆகும். உள்ளூர் மக்கள் இந்து மதம் மற்றும் பௌத்த மதம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புகளை பின்பற்றுகின்றனர். மேலும் கல்பாவின் பல கோவில்களில் இந்து மற்றும் பௌத்த கடவுளர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கல்பாவின் சராசரி கல்வியறிவு 83.75% ஆகும். இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற இசை இயக்குனரான சுரேந்தர் நேகி, கல்பாவிலிருந்து வந்தவர். இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி கூட கல்பாவைச் சேர்ந்தவர்.