பயனர்:Sumangali93/வண்ணை வைத்தீஸ்வரன்கோவில்
வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வரலாறு
[தொகு]ஈழத்திருநாட்டின் வதனமென விளங்கும் யாழ்ப்பாண நன்நகரின் சிறுநுதலேன விளங்குவது வண்ணார்பண்ணை. அந்நுதலில் நறுந்திலகமென மிளிர்வது அங்கேயிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில். அத்திலகத்தின் இனிய வாசனை அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தையல்நாயகியோடுடனுறையும் வைத்தீஸ்வரப்பெருமானின் இனிய பெருங்கருணை. வண்ணை வைத்தீஸ்வரன் கோவில், கோபலசெட்டியார் திருமகனான வைத்திலிங்கசெட்டியார் என்பவரால் இற்றைக்கு இருநூற்றுபதினாறு வருடங்களுக்கு முன் (கி.பி1790) கட்டுவிக்கப்பட்டது .கோபலசெட்டியார், ஒல்லாந்தர் அரசு செய்யும் காலத்தில் தமது மனைவியாரோடு சோழநாட்டிலிருந்து யாழ்ப்பாணதிற்கு வந்து இங்கையே குடியாகவிருந்து ஒல்லாந்த அரசினரின் மொழி பெயர்ப்பாளராக இருந்த கொச்சிக்கணேசையர் என்னும் பிராமணரிடம் உத்தியோகம் பார்த்துவந்தார் . அவர் யாழ்ப்பாணம் வந்தகாலம் முதல் வேப்ப மரமொன்றின் கீழ் விநாயகரை வைத்துப் பூசித்து வந்தார். அவ் விநாயகர் இப்போது வேம்பெடிப்பிள்ளையார் கோவில் (கடைதெருப் பிள்ளையார் கோவில்) எனப்படுகிறது.
ஒரு நாள் ஐயரவர்கள் காரணமில்லாமல் கோபலாச்செட்டியாரை கண்டித்த போது செட்டியார் உத்தியோகத்திலிருந்து விலகி பலசரக்கு வியாபாரம் செய்துவந்தார். வியாபாரம் செய்யும் காலத்து ஒல்லாந்த தேசாதிபதி வீட்டிற்கும் பலசரக்குக் கொடுக்கும் வழக்கம் உடையவராயிருந்தார். இவருடை நேர்மை, ஒழுக்கம் ,விசுவாசம் முதலியவற்றால் தேசாதிபதியின் மனைவியார் செட்டியாரிடம் மிகவும் அபிமானம் உள்ளவரானார். இந்நாட்களில் இந்தியாவிலிருந்து ஈழம் வந்த கூழங்கைத் தம்பிரான், செட்டியாரிடம் நட்புக்கொண்டு அவருடன் வசித்து வந்தார். அவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், சித்தாந்த சாஸ்திரத்திலும் மிக்க பாண்டித்தியம் உடையவர். சிறந்த பக்தர். இவர் அங்கு இருக்கும் போது தான் செட்டியாருக்கு ஒரு மகன் பிறந்தான். புதல்வனைப் பார்த்த தம்பிரான் ஆசிர்வதித்து, 'இவன் கருமங்கள் செய்யப் பிறந்துள்ளான். இவனுக்கு வைத்திலிங்கம் என்று பெயரிடுக ' என்றார். அவ்வண்ணமே பெயரிட்டனர்.
வைதிலிங்கத்திற்குப் பன்னிரெண்டு வயசு ஆனது. பையனைத் தந்தை கடையில் விட்டுப் போயினர். அச்சமயம் தேசாதிபதியின் மனைவி கடைக்கு வந்தார். செட்டியார் எங்கே என்று அவர் பையனை வினவினார். வைத்திலிங்கம் ஓர் மாதுளங்கனியை அந்த அம்மையிடம் கொடுத்து ஏற்க வேண்டினார். அம் மாதுளங்கனியை அம்மாது உளம் கனிந்து வாங்கினார். போசனம் முடிந்து செட்டியாரும் வந்தார். பையன் அவரது மைந்தன் என்று அவர் மூலமறிந்த அம்மையார் ,வைத்திலிங்கத்தை தன் வண்டியிலேற்றித் தம்வீட்டிற்கு அழைத்தேகினார் . தேசாதிபதிக்குப் பிள்ளையில்லாமையால் வைத்திலிங்கம் அவர்களது அரண்மனையிலேயே சுவீகாரப் புதல்வன் போல வளர்ந்தார். அவர்களிடம் ஒல்லாந்த பாஷை பயின்றார். 18வயது வரை தேசாதிபதி வீட்டு வாழ்வே அமைந்தது. ஒரு நாள் தேசாதிபதி முத்துக்குளிப்பை குத்தகைக்கு விடப்போவதைக் கேள்விப்பட்ட வைத்திலிங்கம் தன வளர்ப்புத் தயாரான அம்மையாரிடம் 'அக்குத்தகையை நான் வாங்க விருப்பமுடையேன்' என்றார். அதற்கு உதவி புரிய அம்மையாரை வேண்டினார். உடனே அம்மையார் ஒரு கடிதம் வரைந்து சிறுவனிடம் கொடுத்து கச்சேரியில் தேசாதிபதியிடம் கொடுக்கும் படிகூறினார். தேசாதிபதி முகமலர்ச்சியுடன் வைத்திலிங்கத்தைப் பார்த்து 'முத்துக் குத்தகை வாங்கப்போகிறாயா?' என்று வினவ 'ஆம் ஐயா 'என்றான் சிறுவன். பக்கத்தே பிரதான மந்திரியாயிருந்த கோச்சிக்கணேசையார் 'நீயும் குத்தகை வாங்கப் போகிறாயா? என்றார் ஏளனமாக. ஐயரின் மனோபாவத்தை அறிந்த தேசாதிபதி கோபித்து ஐயரைப் பார்த்து 'குத்தகையை இச் சிறுவன் பெயருக்கு எழுதிப்பிணையாக என் பெயரை எழுதுக' என்றார். இயற் அவ்வண்ணமே எழுதினார். குத்தகையை ஏற்றுக் கிரமமாக நடத்தி ஒரு கணிசமான தொகையை இலாபமாகப் பெற்றார். தொடர்ந்து முத்து குத்தகையை ஏற்று, முத்து வியாபாரம் செய்யும் காலத்தில் கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றார். இவருடன் கூடிக் கற்றவர்கள் தென் கோவை நெல்லைநாதபண்டிதரும், மாதகல் மயில்வாகனப் புலவருமாவார்.
முத்து வியாபாரத்தில் மட்டுமில்லாமல் வைத்திலிங்கச்செட்டியார் அவர்கள் யானை வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்திருக்கிறார். யானை வியபாரம் செய்யும் நிறுவனம் ஒன்று இவரை தங்களது வியாபாரத்திற்கு என ஏற்றுக் கொண்டதற்காக வழங்கிய டச்சுமொழியிலான ஆவணம் சான்றாக அமைவதுடன், அந்த நாளில் வைத்திலிங்கசெட்டியாருக்கு இருந்த செல்வாக்கையும் மதிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது. பெரும் பொருள் ஈட்டி தனவந்தராக வைத்திலிங்கச்செட்டியார் தனக்கென ஒரு மாளிகை அமைக்க எண்ணிய போது கூழங்கைத் தம்பிரான் செட்டியாரிடம் "உன்னை இந் நிலைக்குக் கொண்டு வந்த பரம பிதாவாகிய வைத்தியநாதப் பெருமானுக்கும் தையல்நாயகித்தாயாருக்கும் யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்க வேண்டும்" என்று கூறினார். செட்டியார் அதற்குச் சம்மதித்தார். சைவ ஆலயங்களை இடித்தும், சைவ சமயத்தினரைத் துன்புறுத்தியும் தங்கள் சமயத்தை பரப்பி வந்த ஒல்லாந்தர் மத்தியில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க முற்பட்ட வைத்திலிங்கச் செட்டியார் அவர்கள் தனது செல்வாக்கினைப் பாவித்து வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசிடம் அனுமதியைப் பெற்றார். 1787 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1790இல் வேலையினைப் பூர்த்தி செய்து, வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானுக்கான பரிவாரக் கோயில்களையும் அமைத்து, அதே ஆண்டிலேயே (1790) சாதாரண வருடம் சித்திரை மாதம் பூர்வ பட்ச சப்தமியோடு கூடிய புனர் பூசநட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் செய்வித்தார். நித்திய நைமித்தியங்கள் கிராமமாக நடைபெற்றுவரச் செய்தார்.
ஆலயத்தை தாமே இனிது பரிபாலித்த பின், தமது புத்திரர்களான ஸ்ரீ கோபாலச்செட்டியார், ஸ்ரீகந்தப்பச்செட்டியார் அவர்களிடத்து ஒப்புவித்து விட்டுத் தமது அந்திம காலத்தைக் காசியிற் கழிக்க விரும்பி அங்கு சென்று சில காலம் சீவித்த பின், திருவருளால் தமது உடல் நிரியானத்தை உணர்ந்து கருங்கல்லினால் ஒரு தொட்டி அமைத்து, அத்தொட்டியில் ஆரோகணித்துக் கங்கையில் இறங்கினார். இவர் போன்ற மகாபுண்ணிய புருஷர் உலகில் முன்னும் பின்னும் இருந்ததில்லை என்றால் மிகையாகாது. பின்கோபாலசெட்டியார் ,கந்தப்பச்செட்டியார் ,வைத்திலிங்கச்செட்டியார் ஆகியோர் பரிபாலித்து ,சிலகாலம் வைத்திலிங்கச்செட்டியாரின் மனைவியார் திரு மதிவை .கண்ணம்மா ஆச்சி அவர்களாலும் பின்னர் அவர்களது புதல்வர் கந்தப்பச்செட்டியாராலும் , கோபலன்செட்டியார் வைத்திலிங்கச்செட்டியார் அவர்களால் 1805 ஆண்டு வரையப்பட்ட சாசனத்தின்படி அவரது வழித்தோன்றல்களால் தொடர்ந்தும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.
நல்லைநகர் ஆறுமுகநாவலர் தமது முதற் பிரசங்கத்தை இவ்வாலய வசந்த மண்டபத்திலேயே செய்தார். அவர்களுக்குப் பின் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை புராண பிரசங்கம் செய்தார். பின் சங்கராசுப்பையர் சுவாமிகள் செய்து வந்தார்கள் .நல்லை ஸ்ரீஞானசம்மந்தர் ஆதின நிறுவுனர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் ஸ்சுவாமிகள் துறவு பூணும் வரை முத்தமிழ்மணி சி .எஸ் .எஸ்.மணிபாகவதர் என்ற பூர்வாஸ்சிரம நாமத்துடன் சமயப் பிரசங்கங்களை இவ்வாலய வசந்த மண்டபத்திலே செய்து வந்தார்கள். சைவத்திற்கும் ,தமிழுக்கும் நிலைக்களனாக விளங்கியது இவ் வைத்தீஸ்வரன் கோவில் வசந்த மண்டபம் என்றால் மிகையாகாது. கூழங்கைத் தம்பிரான் வைத்தீஸ்வரப் பெருமான் மீது ஒரு தனிக்கவி பாடியுள்ளார். இன்னும் கொச்சிக்கணேசையர் தையல்நாயகி மீது ஊஞ்சலும் அராலி விஸ்வநாத சாஸ்திரியார் வண்ணைக் குறவஞ்சியும், வட்டுக்கோட்டைக் கணபதி ஐயர் வைத்திலிங்கக் குறவஞ்சியும் பாடியுள்ளார்கள். கோபாலன் செட்டியார் வைத்திலிங்கச் செட்டியார் அவர்களால் யாழ் நகரில் பெரும்பாலான பகுதிகளில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நிலங்களின் ஒரு பகுதி, பாடசாலைகள், மத வழிபாட்டுத்தலங்கள், சன சமூகநிலையங்கள் போன்ற சமூக அமைப்புக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரான்லி வீதி ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரை இந்நிலங்களின் ஒரு பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலமைப்பு
[தொகு]கூழங்கைத் தம்பிரான் முதலாய சான்றோர்கள் உடனிருந்து துணையாற்றக் கட்டப்பட்டதாதலின் இக்கோயில் ஆகம முறைப்படி அமையும் பெருஞ்சிறப்பைக் கொண்டிருக்கின்றது. எல்லாம் வல்லவரும் ஆன்மகோடிகளின் இன்னல்களையெல்லாம் தீர்த்துவைக்கும் மகா வைத்திய நாதனுமாகிய வைத்தீஸ்வர பெருமானுக்கு கிழக்கு நோக்கிய கருவறையும், சிவசத்தியும் உலகமதாவுமாகிய தையல்நாயகித் தாய்க்குத் தெற்கு நோக்கிய கருவறையும் அழகிய சிற்பங்கள் நிறைந்த விமானங்களோடு விளங்குகின்றன.இறைவனின் கருவறையின் புறச்சுவர்களிலேயுள்ள கோட்ட மாடங்களிலே தெற்கில் தென்முகக்கடவுளும் மேற்கில் இலிங்கோற்பவரும்,வடக்கில் நான்முகக்கடவுளும் எழுந்தருளியுள்ளனர். கல்லாலின்புடை,வலக்கையில் சின்முத்திரையோடு சனகன் முதலாய நால்வர் புடைசூழ ஞானமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் தென்முகக் கடவுளுக்கு நான்கு தூண்கள் கொண்ட சிறு மண்டபமுண்டு.மேற்கிலுள்ள கோட்டமாடத்திலுள்ள இலிங்கோற்பவ மூர்த்தி சிற்ப நுட்பங்கள் பல செறிந்து விளங்குகின்றது.சிவராத்திரி தினத்திலே அதற்குச் சந்தனாங்கி சார்த்தியிருக்கும் போது,மேலே பறந்து செல்லும் அன்னப்புள்ளையும் ,கீழே குடைந்து செல்லும் பன்றியையும்,இரண்டினிடையே இருவராலுங் காணமுடியாது சோதிலிங்கமாக நிற்கும் சிவனையும் கண்குளிரக்கண்டு களிக்கலாம். இறைவன் இறைவியின் கருவறைகளோடு சேர்ந்துள்ள அர்த்த மண்டபங்களுக்கு முன் மகாமண்டபமும் அதனையடுத்துக் கிழக்கே நிருத்த மண்டபமும் உள்ளன.கிழக்கு நோக்கி சந்நிதியோடு அமைந்த இவ்வாலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டிருக்கின்றது.இரண்டாம் பிராகாரத்தின் வடகிழக்குக் கோடியிலமைந்துள்ள வசந்த மண்டபம் திருவிழாக் காலங்களில் இறைவன் இறைவியர் திருக்குமாரர்களோடும் சண்டேசுவரரோடும் எழுந்தருளித் தம்மடியார்களுக்குக் காட்சி கொடுக்குமிட மாயமைந்துள்ளது.புள்ளிருக்கு வேளுரிற்போலவே இங்கும் அம்பாள் சந்நிதியில் இரண்டாம் பிரகாரத்தின் வெளியே சித்தாமிர்த புட்கரணி என்னும் புண்ணிய தீர்த்தம் உண்டு.இக்கலியுகத்திலே சித்தர்கள் இறைவர் திருமுடியில் தேவாமிர்தத்தால் திருமுழுக்கு செய்த போது அவ்வமிர்தம் இதிற் கலந்தமையால் இது இப்பெயர்பெற்றது.இதனையடுத்துப் பெரிய திருநந்தவனம் உளது.அது புட்பவிதியிற் கூறியபடி கோட்டுப்பூ,கொடிப்பூ,நீர்ப்பூ,நிலப்பூ ஆகிய நால்வகை நாண்மலர்களும் பச்சிலைகளும் பெறக்கூடியதாய் அமைந்துள்ளதுகிழக்கு சந்நிதியிலே மூன்றாம் பிரகாரமாகிய தெருவீதியின் புறத்தே பதினாறு கால் மண்டபம் ஒன்று தமிழ் நாட்டுப் பாணியிலே கட்டபட்டுக் கோயிலுக்கும் நகரத்துக்கும் அழகு தந்து கொண்டிருக்கின்றது.இம் மண்டபத்திலேயே பூங்காவனத் திருவிழாவிலன்று பார்வதியம்மையார் பரமேசுவரனை நோக்கித் தவம் செய்ய எழுத்தருளுவர்.
சமயப்பணி
[தொகு]ஈழநாட்டிலே தமிழையும் சைவத்தையும் பாதுகாத்து வளர்த்து வந்த பெருமை இவ் வைத்தீசுவரர் கோயிலுக்கு உரியதாகும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் தமது முதற்பிரசங்கத்தை இக் கோயிலின் வசந்த மண்டபத்திலேயே செய்தார். அதனைத் தொடர்ந்து பல பிரசாரக் கூட்டங்களையும் கண்டனச் சொற்பொழிவுகளையும் இங்கேயே நடத்திவைத்தார். நாவலர் பெருமானின் மருகரும் மாணாக்கரும் யாழ்ப்பாண சைவ பரிபாலன சபையின் முதற்றலைவருமாகிய வித்துவ சிரோமணி ந.ச.பொன்னம்பலபிள்ளையவர்கள் தம்முடைய கம்பராமாயண, பெரியபுராண, கந்தபுராண விரிவுரைகளை நடத்திப் புகழடைந்ததும் இம் மண்டபத்திலேயே. இவ் விரிவுரைகளைக் கேட்பதற்குத் தமிழ் நாட்டிலிருந்தும் அறிஞர்கள் இங்கு வந்திருந்தார்கள் என்பர். திருஞானசம்பந்தரின் அடிச்சுவட்டில் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஸ்ரீ சங்கரசுப்பிரமணிய சச்சிதானந்தராஜ யோகிகள் இங்கே தம்மரியகான மழையைச் சொரிந்து தமிழையும் சைவைத்தையும் வளர்த்தார். இவர்கள் தம் வழியிலே இக் காலத்திலும் பலர் இப் பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகின்றனர்.
திருப்பணி
[தொகு]இற்றைக்கு இருபது வருடங்கட்கு முன் இக் கோயிற் புனருத்தாரண கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றறது. இராஜ கோபுரத்தைப் பெரிதாகக் கருங் கற்களாலமைக்க வேண்டு மென்று விருப்பங் கொண்ட அறங்காவலர் அத்துறையில் முயற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாலயத்துக்கு புதிதாக ஐந்து தேர்கள் நிர்மாணிக்கத் திருவருள் பாலித்து அதற்காக ஒரு திருப்பணிச்சபையும் செயற்பட்டுவருகின்றது. அறுபத்து மூன்று சிவனடியார்களின் திருமேனிகளைக் கடவுண் மங்கலஞ் செய்ய வேண்டிய திருப்பணியும் உளது. இவையெல்லாம் மிக விரைவிலே நிறைவெய்தத் தையல்நாயகியுடனுறையும் வைத்தீஸ்வர பெருமான் திருவருள் பாலிப்பாராகவெனப் பிரார்த்திப்போமாக.
சிறப்பொடு பூசனை
[தொகு]தினந்தோறும் திருவனந்தல் (5.00 மணி) கால சந்தி (6.00மணி) உச்சிக்காலம் (12.00மணி) சாயுங்காலம் (5.00மணி) இரண்டாங்காலம் (6.00மணி)அர்த்தசாமம் (7.00மணி) எனக் கால பூசைகள் ஒழுங்காக பத்தி சிரத்தையோடு நடைபெற்று வருகின்றன.வெள்ளிக்கிழமைகளில் இராஜராஜேஸ்வரி அம்பாள் இரண்டாங் காலப்பூசையின் பின் சிறப்புப் பூசையினையேற்று அழகிய மஞ்சத்தில் இவர்ந்து உள்வீதி வலம் வரும்போது பத்தர்கள் சிவநாமம்,தேவி ஸ்தோத்திரமோதி வணங்குவார்கள்.பிரதோஷ தினங்களில் மாலை இடபதேவருக்கு விசேட அபிஷேகமாகி வெள்ளியிலான அங்கி சார்த்தப்பட்டு வழிபாடு நிகழும்.பின் பிரதோஷ நாயகர் வெள்ளி இடப வாகனத்திலிருந்து திருவீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பர்.இக்கோயிலிலே ஒவ்வோராண்டும் நிகழும் பெருவிழாக்கள் ,பங்குனித் திங்களிலே உத்தரத் திருநாளிலே நடைபெறும் தீர்த்த விழாவோடு முடிவடையும் மகோற்சவமாகிய சிவன் திருவிழாவும்,ஆடி மாதத்திலே பூரநட்சத்திரத்திலே நிகழும் தீர்த்த விழாவோடு முடிவடையும் அம்மன் திருவிழாவுமாகிய இரண்டுமாம்சிவன் திருவிழாவில் ஒன்பதாம் திருநாளிலன்று தமது வலப்பாகத்திலே கருணாகடாட்சியாகி அம்பாளைக் கொண்ட கலியாணசுந்தரர் சமயகுரவர் நால்வர்க்குக் காட்சிகொடுக்கும் நிகழ்ச்சி பக்தர்களைப் பரவசப்படுத்தும் தகையது.
ஆடித் திங்களில் நிகழும் அம்மன் திருவிழாக் காலத்தைச் சிறப்பாக மங்கையர் தம்முடைய உபாசனா காலமாகக் கொண்டு அம்பிகையை நோக்கித் தங்குறைகள் நீங்கக் கடுமையான நோன்புகளை மேற்கொள்வர். இத்திருவிழாவின் ஏழாந்திருநாளிலே அம்பிகை நாகவாகனத்திலமர்ந்து சிவனுக்கு பூசை பண்ணும் காட்சி மிக அருமையானதாகும்.தீர்த்தோற்சவத்துக்கு அடுத்த நாள் நிகழும் திருவூஞ்சற் திருவிழா தவறாது பார்த்து மகிழவேண்டியதொன்றாகும்.அப்போது பாடப்படும் தையல்நாயகி திருவூஞ்சல் பத்திச்சுவை மிக்கதாகும்.இக்கோயிலிலே புரட்டாதி மாதத்தில் நிகழும் நவராத்திரியில் இராஜராஜேஸ்வரி அம்பாள் கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் செல்வியை பார்த்துக்கொண்டு மணித்தியாலக் கணக்கில் இருக்கலாம்.
மார்கழி மாதத்திலே சாயுங்காலப் பூசையின் பின் மணிவாசகரை எழுந்தருளச் செய்து நடேசர் சந்நிதியில் திருவாதவூர்ப்புராணம் படித்துப் பயன் சொல்லுதலும்,அதிகாலையிலே பக்தர் பலர் கூடித் திருப்பள்ளியெழுச்சி,திருவெம்பாவைப் பாடல்களை மெய்யன்போடு பஜனை செய்வதும்,திருவாதிரைத் திருநாளன்று அபிஷேக தரிசனத்தின் பின் சிவனுக்கும் உமையம்மைக்குமிடையே ஊடல் நிகழ்ந்ததாக அதனை தீர்த்து வைக்க ஆலால சுந்தர் தூது செல்வதாக நிகழும்போது "திருவூடல் "பாடப்படுவதும் குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகளாம்.
பிரபந்தங்கள்
[தொகு]வைத்தீஸ்வர பெருமான் மீது கூழங்கைத் தம்பிரான் பாடிய தனிக் கவியொன்றுண்டு. தையல் நாயகி கலிவெண்பாவும் முத்துக் குமாரசுவாமி திருவூஞ்சலும் யாழ் சைவபரிபாலன சபை வெளியீடாக வந்துள்ளன. கொச்சிகணேசையர் தையல்நாயகி திருவூஞ்சலும், அராலி விசுவநாத சாத்திரியார் வண்ணைக் குறவஞ்சியும் பாடியுள்ளனர். வைத்தீஸ்வர சுவாமி கோயிலிலே மார்கழி மாதத் திருவாதிரையில் சந்நிதானத்தில் ஓதப் பெறும் "திருவூடல்" 1972 ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்றது.
நிர்வாகம்
[தொகு]இத்திருக்கோயிலை ஆதியிற்றொடக்கம் வைத்திலிங்கச் செட்டியாரின் மரபில் தோன்றியவர்களே அருளாட்சி செய்து வந்துள்ளனர்.இந்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து கந்தப்பச் செட்டியார்,அவர் மகன் பொன்னுச்சாமிச் செட்டியார்,அவர் தம்பி வைத்திலிங்கச் செட்டியார்,அவர் மனைவி கண்ணம்மை ஆச்சி முதலாயினோர் கோயிலை முட்டின்றி நடாத்தி வந்த பின்,வைத்திலிங்கச் செட்டியார் மகன் கந்தப்பச் செட்டியார் இளம் வயதிலேயே நிர்வாக பொறுப்பை ஏற்றுப் புனருத்தாரண கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.
வில்லூன்றிப் புனித தீர்த்தம்
[தொகு]யாழ்பாணத்தின் புராதன ஆலயமான வண்ணை வைத்தீஸ்வரன் கோவில்,மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்ற மூன்றும் அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த ஒரு சிவதலமாகும். இத்தலத்தின் தீர்த்தம் வண்ணை மேற்கிலுள்ள வில்லூன்றி என்னும் சமுத்திரசங்கம தீர்த்தமாகும். இத்தீர்த்தமும், அதனை சுற்றியுள்ள நிலங்களும் "வில்லவராயன் குளக்கரையும், மருதோண்டிக்காடும்" என்ற ஆதனத்தின் பெயரால் அழைக்கப்பட்டுவருகின்றது. வைத்தீஸ்வரன் கோயிலுக்கென உருவாக்கப்பட்ட இப் புனிததீர்த்தம் அமைந்துள்ள நிலங்கள் ,திரு.வை.கந்தப்பச்செட்டியார் காலத்தில் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு அவர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக அதேகாலத்திலேயே இத்தீர்த்தம் அமைந்துள்ள நிலம் திரும்பவும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கையளிக்கப்பட வேண்டுமென 19.04.1994ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசவர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் வில்லூன்றி புனித தீர்த்தமும் அது அமைந்துள்ள இடமும் வைத்தீஸ்வரன் அருளால், வைத்தீஸ்வரனின் ஆதனம் என்று நிரூபணமாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராஜகோபுரம்
[தொகு]"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்ற முன்னோர்கள் வாக்கிற்கிணங்க ஓர் ஆலயத்தின் பிரதான அங்கமாக அமைவது கோபுரமாகும். இக்கோபுரம் வானளாவி உயர்ந்து மூலமூர்த்தியின் மகிமையை விளக்கும் முறையில் அமைந்துள்ளது. மேலே கூறப்பட்ட சிறப்புக்களை தன்னகத்தே இன்று கொண்டிருக்கும் இக்கோபுரம் வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்திருப்பது யாழ்ப்பாண மாநகரத்தின் எழிலை இன்னும் அதிகரிப்பதாக அமைகின்றது.
இக்கோவிலின் இராஜகோபுரமானது 1970ம் ஆண்டளவில் அடித்தளமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மாண வேலைகள் போர்க்காலச் சூழ்நிலைகளின் போது பலதடைவைகள் தடைப்பட்டாலும் 1987ம் ஆண்டளவில் முற்றுப்பெறும் நிலையில் அவ்வேளையில் நடந்த விமானத் தாக்குதலால் கோபுரமும் கோவிலின் பல பகுதிகளும் சேதத்திட்கு உள்ளாக்கப்பட்டன.1 787ல் வைத்திலிங்கச்செட்டியார் இக்கோவிலைக் கட்டத்தொடங்கிய காலத்திலிருந்து சரியாக 200 வருடங்களின் பின் இத்தகைய அனர்த்தங்கள், அழிவுகள் நிகழ்ந்தன. அரச படைகளின் வான்தாக்குதல்களால் சேதமடைந்த இராஜகோபுரத்தினையும் ஆலயத்தின் ஏனைய பகுதிகளையும் திருத்தியமைக்க அரசிடம் நட்டஈடு கோரிய போது எவ்வித நட்ட ஈடும் வழங்கப்படாத நிலையில் கோவில் தர்மகர்த்தாவால் மேற்படி ஆலயத்தின் இராஜகோபுரமானது துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு இன்று வண்ணை ஸ்ரீவாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரன் சுவாமியின் அருளால் பஞ்சதள இராஜகோபுரமாக உருப்பெற்று நிற்கின்றது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள இராஜகோபுரம் 70 அடி உயரமானதாகும். அதுமட்டுமன்றி பஞ்சதளங்களைக் கொண்டு உரிய அளவுப் பரிமாணத்திற்கமைய அமைக்கப்பட்டுள்ளதுடன் இதிற்காணப்படும் கடவுளின் உருவங்களும் எனையவையும் அவற்றிற்குரிய உடல் நிர்மாணத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒற்றைப்பட எண்ணிக்கையில் அமைந்திருக்கும் வாயில்கள் அவற்றிற்குரிய தத்துவ விளக்கத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் இங்கு ஐந்து தளங்களைக் கொண்ட வாயில்கள் காணப்படுகின்றன. இவ்ஐந்தும் உடலில் ஐம்பொறிகளைக் குறிப்பவையாக அமைகின்றன. இங்ஙனம் நம்முடைய அமைப்பிலே உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்கு இக்கோபுர வாயில்கள் சின்னமாக விளங்குகின்றன.
இவற்றோடு மட்டுமல்லாமல் இக்கோபுரத்தின் அழகு, அதில் தீட்டப்பட்ட வர்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டமைந்திருக்கின்றது. சுடலையில் நடனமாடிய சிவனின் உடலில் பூசப்பட்டிருக்கும் சாம்பலின் நிறம் அக்கடவுளின் கோபுரத்திலும் வர்ணமாகத் தீட்டப்பட்டுள்ள அற்புதத்தைக்கான இரு கண்களும் போதாது. இத்தகைய தெய்வீக அழகும் மெருகும் கொண்ட கோபுரம் அங்கு குடிகொண்டிருக்கும் சிவனின் அருளால் யாழ்ப்பாணப்பட்டினத்தை மென்மேலும் அழகூட்டிக் கொண்டிருக்கிறது. எனின் அது மிகையாகாது.
வைத்தீஸ்வரனின் பரிவாரக்கோவில்களும் அவற்றின் முக்கியத்துவமும்
[தொகு]ஈழத்துச் சைவ சமய வரலாற்றில் சிறப்புக்குரிய ஆலயமாக இருந்து வரும் வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் தனக்கே உரிய பல சிறப்பம்சங்களை கொண்டமைந்திருக்கும் பெருமை வாய்ந்ததாகும். இக்கோவில் ஏனைய கோவில்களைப் போலல்லாது தனது பரிவாரக்கோவில்களை யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் கொண்டமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்ததாகும். வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலின் பரிவாரக் கோவில்களாக வேம்படிப்பிள்ளையார் கோவில், வண்ணை மேற்கில் உள்ள ஐயனார் கோவில், காளி கோவில், கற்கட்டு வைரவர் கோவில், பண்ணை முத்துமாரி அம்மன் கோவில் ஆகியன ஆகம முறைப்படி கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தவையாக அமைந்திருக்கின்றது. இக் கோவில்களுள் வேம்படிபிள்ளையார் கோவில் தவிர்ந்த ஏனைய கோவில்கள் யாவும் எல்லைக் கோவில்களாகவும், காவல் தெய்வங்களாகவும் கருதப்படுகிறது.
வேம்படிப் பிள்ளையார் கோவில்
[தொகு]வைத்தீஸ்வரன் கோவில் ஆரம்ப கர்த்தாவான ஸ்ரீமான் வைத்திலிங்கச்செட்டியாரின் தந்தையாரான கோபாலச் செட்டியார் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த காலந்தொட்டே (ஒல்லாந்தகாலம் ) பூசித்து வந்த விநாயகப் பெருமான் குடி கொண்டிருக்கும் இடமே வேம்பேடிப் பிள்ளையார் கோவிலென தற்போது எல்லோராலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு கோவிலமைத்த பெருமை வைத்திலிங்கச்செடியாரையே சாரும். அது மட்டுமின்றி இக் கோவிலமைந்திருக்கும் இடம் வியாபாரத் தாபனங்கள் பல அமைந்து இருப்பதனால் அதனைக் கடைத் தெருப்பிள்ளையார் கோவிலெனவும் அழைப்பர். வைத்தீஸ்வரன் கோவில் உற்சவங்கள் நடைபெறும் விசேட காலங்களில் எல்லாம் முதலில் பரிவாரக் கடவுளான விநாயகருக்கு அபிஷேகம் செய்த பின்பு ஏனைய கிரியைகள் ஆரம்பமாவது வழக்கம்.
காளி கோவில்
[தொகு]பிடாரி அல்லது பத்திரகாளி என்று அழைக்கப்படுகின்ற மற்றுமொரு பரிவாரக் கோவிலான காளிகோவில் வண்ணை மேற்கில் ஐயனார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. சிவன் மகோற்சவத்தின் முன்னர் வரும் மாசிப் பருவத்திற்கு சிவன் கோவிலில் இருக்கும் காளி அம்பாள் எழுந்தருளி, பரிவாரக் கோவிலான காளி கோவிலுக்கு இடப வாகனத்தில் ஊர்வலமாக சென்று காப்புக்கட்டி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது மட்டுமன்றி நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று சிவன் கோவிலின் சந்திரசேகரமூர்த்தம் குதிரை வாகனத்தில் பரிவாரக் கோவிலான காளிகோவிலுக்கு வந்து வாழை வெட்டி திரும்பும் நிகழ்ச்சியும் இங்கு நடைபெறுகின்றது.
ஐயனார் கோவில்
[தொகு]வண்ணார்பண்ணை மேற்கில் அமைந்துள்ள ஐயனார் கோவில் ஸ்ரீ பூரணை புட்கலை சமேத ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் அல்லது அரிகர புத்திர ஐயனார் என்றும் அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோவிலின் சிவன் மகோற்சவத்தின் பொது பூர்வாங்கமாக சில கிரியைகள் பரிவாரக் கோவில்களில் இடம்பெறுவது இக் கோவிலின் பரம்பரியமாகும். மாசி மாதத்தில் கொடியேற்றம் ஆரம்பமாகும் முன்னர் வரும் தை பருவத்திற்கு வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள பூரணை புட்கலை சமேதராய் எழுந்தருளும் அரிகரபுத்தி ரஐயனார் சுவாமி, யானை வாகனத்தில் ஐயனார் கோவிலுக்கு சென்று காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
முத்துமாரியம்மன் கோயில்
[தொகு]பண்ணையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வைத்தீஸ்வரன் கோவிலின் எல்லைக் கோவிலாக மட்டுமன்றி அங்கிருந்து,மக்கள் அனைவரையும் காக்கும் காவல் தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது.இதனை மீனாட்சி அம்மன் கோவிலெனவும் அழைக்கும் வழக்கம் உண்டு.எனினும் அங்கு குடிகொண்டிருக்கும் தெய்வம் மாரியம்மன் ஆகும்.இதனாலேயே இது பண்ணை முத்துமாரியம்மன் கோவிலென எல்லோராலும் அழைக்கப்படுகிறது.சுவாமி கொடியேற்றத்துக்கு முதல் வரும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பண்ணை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் விஷேட அபிஷேகம்,பூசை வழிபாடுகள் இடம்பெறுவதுடன் இங்கு எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மனுக்கு விஷேட உற்சவமும் நடைபெறும்.இவை யாவும் இவ்வாலய பரிபாலன தெய்வங்களாக இருந்து இக் கிராமத்தைக் காக்கும் தெய்வங்கள்,மகோற்சவ காலத்திலும் எவ்வித இடையூறுகளும் இன்றி காக்க வேண்டும் என்பதற்கான வழிபாடுகள் ஆகும்.