புறநகர் மறைமாவட்டங்கள்
புறநகர் மறைமாவட்டங்கள் (ஆங்கில மொழி: Suburbicarian diocese) என்பது உரோமை நகரின் அருகே புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஏழு மறைமாவட்டங்களைக் குறிக்கும். இம்மறைமாவட்டங்களின் பட்டம் சார்ந்த ஆயர்களும், உரோமைத் தலைமைக்குருவால் கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைச் சபைகளின் மறைமுதுவர்களும் மட்டுமே கர்தினால் குழாமின் மிக உயரிய அணியான ஆயர்கள் அணியினை சேர்ந்தவர்கள் ஆவர்.
இம்மறைமாவட்டங்களின் எல்லைகளும் பெயர்களும் காலப்போக்கில் மாறுபட்டாலும் தற்போது பின்வருவன புறநகர் மறைமாவட்டங்கள் என கருதப்படுகின்றது:
- ஒஸ்தியா மறைமாவட்டம் (1150 முதல் இம்மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதி கர்தினால் குழு முதல்வருக்கு உறியது)
- வெல்லட்ரி-செக்னி மறைமாவட்டம்
- போர்தோ-சாந்தா ரூஃபினா மறைமாவட்டம்
- ஃபிரஸ்காதி மறைமாவட்டம்
- பாலெஸ்திரினா மறைமாவட்டம்
- அல்பானோ மறைமாவட்டம்
- சபீனா-போகியோ மிர்தேதோ மறைமாவட்டம்
கர்தினால் குழு முதல்வர் ஏற்கனவே தாம் கொண்டுள்ள மற்றொரு ஆலயத்தின் உரிமைத் தகுதியுடன், ஒஸ்தியா மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியைக் கொண்டுள்ளார். 1914 வரை, கர்தினால் குழு முதல்வர் தாம் கொண்டுள்ள ஆலயத்தின் உரிமைத் தகுதிக்கு பதிலாக ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி மறைமாவட்டத்தின் உரிமைத் தகுதியை பெற்றார். ஆயினும் 1914இல் ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி இரண்டாக பிரிக்கப்பட்டது.
திருத்தந்தைக்கு அவரது பணிகளில் உதவுவது இக்கர்தினால் ஆயர்களின் பெரும் பணியாதலால், இவர்கள் தங்கள் மறைமாவட்டத்தை ஒரு துணை ஆயரால் ஆட்சிசெய்வது ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது. குறிப்பாக ஒஸ்தியா மற்றும் வெல்லட்ரி மறைமாவட்டங்களில் நூற்றாண்டுகளாக இது வழக்கில் இருந்தது. 1910இல் திருத்தந்தை பத்தாம் பயஸ் இதனை எல்லா புறநகர் மறைமாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கினார்.[1] 1962இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இவைகளின் உரிமைத் தகுதியினை பட்டம் சார்ந்த (titular bishops) ஒன்றாக மாற்றி இம்மறைமாவட்டங்களுக்கு சொந்த ஆயர்களை நியமித்தார். மறைமாவட்ட ஆயர்களே இம்மறைமாவட்டங்களை நிர்வகிக்கின்றனர் என்றாலும், கார்தினால் ஆயர்கள் இன்றும் தங்களின் ஆலயத்தின் உரிமைத் தகுதியினை சட்டப்படி நிகழும் சடங்கில் ஏற்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Catholic Encyclopedia, "Suburbicarian Dioceses", 1913.