Wikipedia:முதற்பக்கக் கட்டுரைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- மே 8, 2008
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி (1869-1948) என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையில் இருந்த இந்த மென்பொருள், சோதனைகள் முடிவைந்து வெளிவந்துள்ளது. இச்சேவை ஐக்கிய இராச்சியத்திலும், ஜெர்மனியிலும் கூகிள்மெயில் என அறியப்படுகின்றது. இது முன்னானியில் யாகூ! மெயில், வின்டோஸ் லைவ் மெயில் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. ஜிமெயிலானது அழைப்புக்களின்றி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துஇல் ஆகஸ்டு 9, 2006[1] இல் இருந்தும் ஜப்பானில் ஆகஸ்டு 23[2] , 2006 இலிருந்தும் எகிப்தில் டிசம்பர் 5[3], 2006 இருந்தும் ரஷ்யாவில் டிசம்பர் 16, 2006 [4]முதல் இணையமுடியும்.
- ஏப்ரல் 30, 2008
இராஜராஜ சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு. அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.
- ஏப்ரல் 20, 2008
இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).
இஃது, நேர்விசை மற்றும் ஒரு ஆரத்தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும். முறுக்கு விசையின் S.I அலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது.
எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.
- ஏப்ரல் 15, 2008
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயங்கு முறைகளைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ். (MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு முறைகளுடன் கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி விற்பன்னர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்து விட்டனர்.
மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.
- ஏப்ரல் 8, 2008
புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும்.
பெரும்பாலும் மனிதர்களின் செயற்பாடுகளினால் கடந்த 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தற்போது வரை புவியின் சராசரி வெப்பநிலை 0.6 ± 0.2 செல்சியஸ் அளவு வரை கூடுதலாகியிருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
புவியின் வெப்பநிலைக்கும் கரியமிலத்திற்கும் உள்ள தொடர்பு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது பனிப்பாறைகள் மீதான ஆராய்ச்சி. பல இலட்சம் ஆண்டுகள் முன்னிலிருந்து இன்று வரை வளிமண்டலத்தில் கரியமிலத்தின் அளவையும், அதே சமயத்தில் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பனிக்கட்டி படிவுகளை பயன்படுத்துகிறார்கள். அண்டார்டிகா, ஆர்க்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் உள்ள பனிப்பாளங்கள் பல இலட்சம் ஆண்டுகளாக உருவாகி வருகின்றன. இப்பாளங்களின் ஓவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தை சார்ந்ததாக இருக்கும். இப்பனி அடுக்குகள் அந்த சமயத்தில் நிலவி வந்த கற்றுக்குமிழ்களையும் உள்ளடக்கியிருக்கும். இக்காற்றுக் குமிழ்களை ஆராய்வதன் மூலம் அக்கால கட்டத்தில் வளிமண்டலத்தில் எவ்வளவு கரியமிலம் இருந்தது என்பதை அறியலாம். அதேபோல ஹைட்ரஜன் / ஆக்சிஜன் சமதானி (isotope) களை தீர்மானித்து அதன் மூலம் அக்காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையையும் தீர்மானிக்கலாம்.
பௌத்தத்தில் புத்தத்தன்மை (சமஸ்கிருதம்:புத்தத்துவம், பாளி:புத்தத்த, அல்லது (இரண்டிலும்) புத்தபாவம்) என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையினை அடைந்த ஒருவரை புத்தர் என அழைப்பர்.
பாளி சூத்திரங்களிலும் மற்றும் தேரவாதத்திலும், புத்தர் என்ற சொல், எவருடைய உபதேசத்தினையும் பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் அருகன் என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏப்ரல் 2, 2008
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. படத்தில் பனம் பணியாரம் காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.
- மார்ச் 24, 2008
கணிதத்தில், கணம் அல்லது தொடை என்பது பல்வேறு பொருள்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஓர் ஆழம் உடைய அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்புகள் என்பர். எடுத்துக்காட்டாக 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்ட கணங்களும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்கு கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.
பறவைகள், இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். உலகில் அண்ணளவாக 9000 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.
- மார்ச் 16, 2008
பொனொபோ எனப்படும் மனித குரங்குகள் அண்மை காலம் வரை குறள சிம்ப்பன்சி அல்லது குட்டிச் சிம்ப்பன்சி (Pygmy Chimpanzee) என்று அழைக்கப்பட்டது. இவை சிம்ப்பன்சி இன குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றாகும். "சிம்ப்பன்சி" என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்சி (Common Chimpanzee), மற்றும் பொனொபோ இரண்டையும் குறித்தாலும் வழக்கமாக அழைக்கப்படும் பொதுவான சிம்ப்பன்சியையே குறிக்கும். பொனொபோக்கள் தற்போது அழிவுநிலையில் உள்ளன. அவைகள் இயற்கையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள காடுகளிலேயே காணப்படுகின்றன்.
சுடோக்கு என்பது சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு சதுரத்தில் ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு, எண்களை அமைத்து விளையாடும் புதிர் கணக்கு வகையான விளையாட்டு ஆகும். சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில் எண்-இடம் என்றும் பொருள். மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக சதுரமாக அமைக்க வேண்டும். இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு சட்டகம். இந்த சட்டகத்திலே ஒவ்வொரு வரிசையிலும் 9 சிறு கட்டங்கள் இருக்கும் (3 வெவ்வேறு அறைகளைச்சேர்ந்த கட்டங்கள் இவை), இப்படியாக ஒன்றன் கீழ் ஒன்றாக 9 வரிசைகள் இருக்கும். கிடையாக கட்டங்கள் அமைக்கப்பட்ட வரிசையைக் கிடை என்றும், மேலிருந்து கீழாக ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்படுள்ள கட்டங்களை நெடை என்றும் பெயர். இந்த புதிர் கணக்கு வகையான சுடோக்குவில் ஒவ்வொரு சிறு கட்டத்திலும் 1 முதல் 9 வரையுள்ள ஒன்பது எண்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். இந்த புதிர் கணக்கு சுடோக்கு விளையாட்டு தொடங்கும் முன் சில கட்டங்களில் மட்டும் ஏற்கனவே சில எண்கள் கொடுத்திருப்பார்கள். இவை கொடுக்கப்பட்ட எண்கள் எனப்படும். மீதம் உள்ள சிறு கட்டங்களில் குறிப்பிட்ட விதிகளின் படி எண்களை பதிக்க வேண்டும்.
- மார்ச் 9, 2008
பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.
பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.
இடவியல் (Topology) கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது.
முக்கியமாக 1736 இல் ஆய்லர், 1895 இல் புவான்காரே, 1906 இல் ஃபிரெஷெ, 1914 இல் ஹௌஸ்டார்ஃப், 1922 இல் குரடோவ்ஸ்கி ஆகியவர்களும் இன்னும் சிலரும் செய்த ஆய்வுகளும் தொகுப்புகளும் சேர்ந்து இத்துறை உருவாகியது. அதிலிருந்து ஓர் ஐந்தாறு பத்தாண்டுகளுக்கு இத்துறைதான் கணித உலகெங்கும் ஆய்வாளர்களால் வேண்டப்பட்ட துறையாக இருந்தது. காலப்போக்கில் அதனுள்ளேயே இரண்டு உட்துறைகளாகப் பிரிந்து விரிந்துள்ளது: அதாவது, கணக்கோட்பாட்டு இடவியல், இயற்கணித இடவியல். முந்தியது பொதுவாக இடவியல் வெளிகளைப் பற்றியும், பிந்தியது இடவியல் உரு மாற்றங்களினால் மாற்றமுறா சிறப்பியல்புகளைப் பற்றியும் பேசுகின்றன.
- மார்ச் 2, 2008
பொறியியல்என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல் (materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொரியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். .
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுப்பிளவு போன்றவை.
சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.
- பெப்ரவரி 23
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடும் விலங்குகளான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
ஃபிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் பரிச்சயமில்லாதவர்களையும் ஈர்க்கும் ஒரு சுவையான கணிதப்பொருள்.
வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் இந்த எண்கள் பற்றி முதன் முதல் பேசப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.
மேற்கத்திய வரலாற்றில் லியனார்டோ டா வின்சி (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) எழுதிய "லிபர் அபேஸி" (1202) என்ற இலத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.
- ஜனவர் 31
இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப் படுகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும் 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
ஓட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசியப் வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டயார் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாகக் காணப்பட்ட ஓட்டன் சமவெளி 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மழைக்காடுகளாலும் ஈரப்பதனப் புல் நிலங்களாலும் ஆனது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.
- ஜனவரி 5
பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
ஹாசன் (ஆங்கிலம்: Hassan, கன்னடம்: ಹಾಸನ) இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ஹாசன் சிட்டி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவை ஆட்சி செய்த ஹோய்சாலப் பேரரசின் முக்கிய மாகாணமாக விளங்கியது ஹாசன். ஹாசனிலுள்ள ஹோய்சாலர் கட்டிடக்கலை உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாசன் இன்று நவீன தொழில்நுட்பத்திலும் முன்னேறிவருகிறது. இந்திய வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமைக் கட்டுப்பாட்டு மையம் (Master Control Facility) இங்கு அமைந்துள்ளது.
ஹாசன் மாவட்டத்தின் வரலாறு, கர்நாடகத்தை ஆண்ட இரண்டு பேரரசுகளான மேற்குக் கங்கப் பேரரசு (350 - 999 கி.பி) மற்றும் ஹொய்சால பேரரசுடனும் (1000 - 1334 கி.பி) தொடர்புடையது. பின்பு 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசை ஆண்ட விஜயநகர அரசர்கள் பேளூரிலுள்ள சென்னகேசவ பெருமாளைக் குலத்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக அந்நகரம் விஜயநகர அரசர்கள் ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் 17-18ஆம் நூற்றாண்டுகளில் ஹாசன் ஷிமொகாவின் கெலடி நாயகர்கள் மற்றும் மைசூர் பேரரசிற்கும் இடையே ஒரு சிக்கலுக்குரிய ஊராகவே இருந்தது. இவ்வூர் இறுதியில் மைசூர் பேரரசுடன் இணைந்தது.
- டிசம்பர் 25
இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் ஏசு, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். இஸ்லாம் மற்றும் பஹாய் நம்பிக்கை போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், சிலுவையில் மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர். வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36 வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.
காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறு கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
- டிசம்பர் 11
தெலுங்கு, தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற இம்மொழி இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்றாகும். தெலுங்கு தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 17வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 8 கோடியே 30 இலட்சம் (83 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும்.
தெலுங்கு திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி இந்தியாவில் நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது என நம்பப்படுகிறது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.


