விக்கிப்பீடியா:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review/en

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2007 was a year of steady growth and milestones for Tamil Wikipedia. நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, 10000 கட்டுரைகள் என்ற இலக்கைத் தாண்டி, கடந்த ஆண்டிலிருந்து பதிகை செய்த பயனர்கள் எண்ணிக்கையை இரண்டு மடங்கால் 2400 க்கும் மேலாக அதிகரித்து தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பெற்றது. தமிழ் விக்பீடியாவின் தரம் தொடர்ந்து பேணப்பட்டும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டும் வருகின்றது.

2007 ஆம் ஆண்டில் கணிதப் பகுப்பு சிறப்பாக விரிவு பெற்றது. நடப்பு நிகழ்வுகளும், செய்திகளும் தொடர்ச்சியாக தொய்வின்றி இற்றைப்படுத்தப்பட்டு வந்தன. நிகழ்நேர தகவல் தொகுப்பு விக்கிபீடியாவின் சிறப்புகளில் ஒன்று. எமக்கிருந்த வளங்களுக்கேற்ப நிகழ்நேர தகவல்கள் கொண்ட கட்டுரைகள் எழுதப்பட்டன. குறிப்பாக ஈழப்போராட்ட நிகழ்வுகள் இவ்வாறு பதிவுசெய்ப்படுகின்றன.

தமிழ் வலைப்பதிவர் பட்டறையிலும் சென்னை விக்கி பட்டறையிலும் தமிழ் விக்கிபீடியாவின் பயனர்கள் பங்களித்து அங்கு தமிழ் விக்கிபீடியா பற்றியும் அதன் விக்கி நுட்பத்தையும் பகிர்ந்து கொண்டனர். வானொலிகள், சிறு சஞ்சிகைகள், வலைப்பதிவுகள் ஆகிவற்றில் தமிழ் விக்கிபீடியாவின் ஆக்கங்கள் மீள் பதிப்பு செய்யப்படுவதும் மேற்கோள் காட்டப்படுவதும் பரவலாகி வருகின்றது. தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் இடம்பெறும் கதையாடல்களிலும் கவனத்தைப் பெறுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளும் நாம் எமது குறிகோளை நோக்கிய பொதுவான செயற்திட்டங்களையே நிறைவேற்றி வந்துள்ளோம். 2007 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி தொடக்கம் தெளிவான இலக்குகளுடன், கால வரையுடன், முடிவுகள் கொண்ட தமிழ் விக்கித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றோம்.

2007 ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது போன்று நுட்ப மேம்படுத்தல், தானியங்கி கட்டுரைகள் உருவாக்கம், கட்டுரைத் தரக் கணக்கெடுப்பு போன்றவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மருத்துவம், சட்டம், வேளாண்மை போன்ற முக்கிய துறைகளிலும் நாம் எதிர்பார்த்த பயனர் பங்களிப்பைப் பெறவில்லை. ஐரோப்பா, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் இருந்து தகுந்த நேரடிப் பங்களிப்புக்கள் கிட்டவில்லை. தமிழ்நாட்டில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் தமிழ்சார் அமைப்புகளில் இருந்தும் நாம் எதிர்பார்த்த அளவு நேரடிப் பங்களிப்புகள் கிட்டவில்லை. ஒரு சில பெண்கள் அவ்வப்பொழுது பங்களித்தாலும், தமிழ் விக்கிபீடியாவில் பெண்களின் பங்களிப்புகளும் மிகக் குறைவு. இந்த நிலைமைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஆரோக்கியமான, பல்வகைக் கருத்துடைய, அகன்ற, ஆழமான கலைக்களஞ்சிய ஆக்க விரைவை மட்டுப்படுத்துகின்றன. இருப்பினும் நேரடியாக பங்குபெற இருக்கும் தடைகளை இனங்கண்டு அவற்றைத் தாண்டி அனைவரதும் பங்களிப்புகளையும் உள்வாங்கி வளந்து செல்ல நாம் அக்கறையுடன் செயலாற்றுகின்றோம்.

கடந்த ஆண்டு தமிழ் விக்கிபீடியாவின் செயற்பாடுகள் நோக்கி சில குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றிக்கு நாம் அறிந்த அளவு இயன்றவரை தெளிவான விளக்கங்கள் தரப்பட்டன. தேவையான மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ் விக்கிபீடியாவின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதையும், விமர்சனங்களை முன்வைப்பதையும் நாம் வரவேற்பதோடு, தகுந்த ஆக்கபூர்வமான மாற்றங்களை நேரடியா நீங்களே முன்னின்று நடைமுறைப்படுத்துவையும் நாம் வரவேற்கின்றோம். தமிழ் விக்கிபீடியா தெளிவான கொள்கைகள் உடைய இணக்க முடிவை விரும்பும் ஒரு கூட்டுத் திட்டமாகும். தனிமனிதர்களால் முடிவுகள் இறுதி செய்யப்படுவதில்லை. எவ்வகையான விமர்சனங்களையும், குறைபாடுகளையும் நாம் உள்வாங்கி அவற்றுக்கு இணக்க முடிவு எட்ட முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஆங்கில விக்கிபீடியா போல் இல்லாமல் தமிழ் விக்கிபீடியா சிறிய திட்டமாக அமைவதால் நேரடியான உரையாடல்களும் இணக்க முடிவும் சாத்தியமாகின்றது.

2005 2006 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிபீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் ஆகியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டு மதிநுட்பத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.

இந்த "2007 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை"யின் நோக்கம் 2007 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2008 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005 அறிக்கையின் பேச்சு பக்கம், 2006 அறிக்கையின் பேச்சுப் பக்கம் ஆகியவற்றைப் பார்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிபீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிபீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் பதிக. நன்றி.