விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 30, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹொங்கொங் தமிழர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவிட உரிமைப் பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர். ஹொங்கொங் வாழ் தமிழர்களின் எண்ணிக்கைத் தொடர்பான சரியான புள்ளிவிபர அறிக்கைகளோ பதிவுகளோ எதுவும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்களில் பெருமான்மையானோர் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவர்களாவர். இருப்பினும் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள் அல்லர். இலங்கையில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். இவர்களால் உருவாக்கப்பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது.


சேனாதிராச முதலியார் (1750-1840) ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவராவார். இவர் தெல்லிப்பழை பொன். எதிர்வன்னியசிங்க முதலியாருக்கு பௌத்திரர், இருபாலை நெல்லைநாத முதலியாருக்கு மைந்தர், இராமலிங்க முதலியாருக்கும் பர்வதவத்தினி அம்மையாருக்கும் தந்தையார், கூழங்கைத் தம்பிரானுக்கும் மாதகற் சிற்றம்பலப்புலவருக்கும் தந்தையார் நெல்லைநாத முதலியாருக்கும் மாணவகர். ஆறுமுக நாவலருக்கும் சரவணமுத்துப் புலவருக்கும் அம்பலவாணப் பண்டிதருக்கும் நீர்வேலி பீதாம்பரப் புலவருக்கும் இவரே நற்தமிழ் ஆசிரியர் ஆவார். இவரும் இவர்களின் மாணவர்களும் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் மற்றும் சைவ மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கியவர்கள் என்பர்.