விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 25, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் பிறந்தார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



கடமா (Bos gaurus) என்பது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தை சேர்ந்த இனமாகும். உலகில் காணப்படும் ஆக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியப்]] பகுதியில் கடமாவில் நான்கு உள்சிற்றினங்கள் (sub-species) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் கடமா கடமா தொலைச்சிய கானுறை வேங் கை (நாலடி, 300), மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331) என்றவாறு குறிக்கப்பட்டுள்ளது. இவை வெப்பமண்டல காடுகளில் வாழ்பவையாகும்.