விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 21, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர்.பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது.இந்தியப் பெருங்கடல் சுனாமியால் வெளிப்பட்ட ஒரு பாறையில் காணப்பட்டக் கல்வெட்டுக் குறிப்புகளால் இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடித்தனர். மேலும்...


ஜான் கிரிஷாம் ஒரு அமெரிக்க எழுத்தாளர். அவரது ஆங்கில சட்டப் பரபரப்பான புனைவுப் பாணி புதினங்கள் புகழ்பெற்றவை. மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரிஷாம், சட்டம் பயின்றார்; பத்தாண்டுகள் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1984-90 காலகட்டத்தில் மிஸ்சிசிப்பி மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1984 இல் எழுதத்தொடங்கிய அவரது முதல் புதினமான எ டைம் டூ கில் 1990 இல் வெளியானது. அவரது அடுத்த புதினம் தி ஃபிர்ம் (1991) ஏழு மில்லியன் படிகள் விற்பனையாகி அவருக்கு புகழைத் தேடித்தந்தது. அமெரிக்க சட்டம், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் அவரது புதினங்கள் உலகெங்கும் உள்ள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் 250 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் முதல் பதிப்பே இருபது லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகும் எழுத்தாளர்கள் மூவருள் கிரிஷாமும் ஒருவர் (மற்ற இருவர் - டாம் கிளான்சி மற்றும் ஜே. கே. ரௌலிங்). கிரிஷாம் எழுத்தாளர்களுக்கான பிரித்தானிய காலக்சி விருதினை வென்றுள்ளார். அவர் எழுதிய எட்டு புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும்...