வாள்
வாள் என்பது, உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும். வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகின் ஒரு பக்கமோ அல்லது இரு பக்கங்களுமோ கூராக இருக்கக்கூடும். விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் நுனி கூராகக் குத்துவதற்கு ஏற்றவகையிலும் இருக்கும். வாட்போர்க் கலையின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே அதிக மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்துள்ளது. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முக்கியமாக வாளின் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதும் வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும், வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்புப்பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.