வரைவு:புனைபாவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனைபாவை (நாவல்)

புனைபாவை நாவல் தமிழ் எழுத்தாளரான இரா. முருகவேள் அவர்களால் எழுதப்பட்டது. இந்நூலின் முதல் பதிப்பு நவம்பர் 2020 ஐம்பொழில் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வரலாற்று நாவலாக எழுதப்பட்டுள்ள இந்நாவல் பிற்காலச் சோழர்களின் இறுதி மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வு நூல்களைப் படித்து தன்னுடைய நுணுக்கமான புனைவுத் திறனால் எழுதப்பட்டுள்ளது புனைபாவை.

முருகவேள் தன்னுடைய முன்னுரையில் சொல்லியிருப்பது போல், “மிகச் சிறந்த உட்ஸ் ரக உருக்கைத் தயாரித்து வந்த தமிழக தொழில் மையங்கள் சிதறடிக்கப்பட்டதும், கொல்லர்களும், தோல் தொழில் நிபுணர்களும், தச்சர்களும் சாதியின் காரணமாகப் பிரிக்கப்பட்டு சின்னஞ்சிறு கிராமங்களுக்குள் அடைக்கப்பட்டதும் தமிழகத்தின் ராணுவத் தொழில் நுட்பத்திலும், சிந்தனையிலும் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

படையெடுப்புகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமல் போனதற்கும் இந்தத் தொழில் நுட்ப வீழ்ச்சிக்கும் உள்ள தொடர்பை இப்புனைவு ஆராய்கிறது.”

இந்நாவல் முக்கியமாக கொங்குப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மாற்றங்களை வரலாற்றுப் பார்வையில் அணுகுகிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

இந்நாவல் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

1.   பாகம் – 1  ஆடவல்லான்

2.   பாகம் – 2  மாலிக்-கபூர்

உள்ளடக்கம்

         முதல் பகுதியான ஆடவல்லானில் 11ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோழப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் கொங்குப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கொங்குப் பகுதியை ஆட்சிப் புரிந்த கொங்குச் சோழன் மேல் படையெடுத்துச் செல்வதும் அங்கு நிகழ்த்துகிற மாற்றங்களும் குறிப்பிடத்தக்க பகுதிகளாகும்.

           அடுத்து, கொங்குப் பகுதியில் பழங்குடிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மாற்றங்கள் பேசப்பட்டுள்ளது. இருளர்களின் மேல் நிகழ்த்திய பாதிப்பை இந்நாவல் குறிப்பிட்டுச் சொல்கிற அதே நேரம் வணிகர்களுக்கும் அப்போது இருந்த நிலவுடமையாளர்களான வேளாளர்களுக்குமான முரணைப் பதிவு செய்திருக்கிறது. கொடுமணல் உருக்குவாளின் தொழில்நுட்பச் சிறப்பையும் அக்காலகட்டத்தில் ஏற்பட்ட சாதியக் கட்டுமானங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை தமிழ்ச்சமூகம் எப்படி இழந்தது என்பதையும் இந்தப் பகுதி பேசுகிறது.

         இரண்டாம் பகுதியான மாலிக்-கபூர் படையெடுப்பு பற்றிப் பேசுகிறது. தமிழ் மண்ணில் உருவான தொழில்நுட்பம் வெளிநாடுகளுக்கு எப்படிச் சென்றது என்பதையும் பேசுகிறது. மேலும் அந்தத் தொழில்நுட்பமே பிற்காலப் பாண்டியர்கள் மாலிக்-கபூரிடம் தோற்றதற்கு முக்கியக் காரணம் என்பதையும் இந்நாவல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.இரா. முருகவேள்

இரா. முருகவேள் எழுதிய பிற நூல்கள்

நாவல்கள்

  1. மிளிர்கல் (2008)
  2. முகிலினி (2016)
  3. செம்புலம் (2017)
  4. இன்பமயமான தமிழக வரலாறு (2019)

சிறுகதைத் தொகுப்பு

  1. சர்ரியல் இரவு (2023)

கட்டுரை நூல்கள்

  1. கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும் (2013)
  2. நாத்திக குரு (2020)
  3. நீலத்தங்கம் - தனியார்மயமும் நீர்வளமும் (2021)

மொழிபெயர்ப்புகள்

  1. எரியும் பனிக்காடு (நாவல்) - பி.எச். டேனியல்
  2. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்
  3. தூக்கிலிடுபவரின் குறிப்புகள் - சசி வாரியர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:புனைபாவை&oldid=3837655" இலிருந்து மீள்விக்கப்பட்டது