மூன்றாம் தமிழ் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் தமிழ் சங்கம் என்பது கபாடபுரம் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் தொடங்கிய கடைச் சங்கம் ஆகும். இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.

இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.

இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களில் சான்றில்லை என்றாலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.

முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_தமிழ்_சங்கம்&oldid=3741590" இலிருந்து மீள்விக்கப்பட்டது