முரளீதர சுவாமிகள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
முரளீதர சுவாமிகள் தென் இந்தியாவில் பிறந்தவர், இந்து சமய சீரமைப்பாளர் என இவரைப் போற்றுவோர் கூறுகின்றனர். மக்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள இந்து மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மீண்டும் புரிந்துகொள்ளூம்படி செய்ய முனைபவராக இவருடைய சீடர்கள் கூறுகிறார்கள். இவர் இறையின் பெயரைப் பாடுவதால் எல்லோர் மனதிலும் மாறுதல் ஏற்பட்டு அதன் மூலம் "உலக மக்கள் அனைவரும் ஓரினம்" என்ற எண்ணத்தை அடைவதே இவரது முக்கியக் குறிக்கோள் என்று இவருடைய சீடர்கள் கூறுகிறார்கள்.
பிறப்பும் இளமைக்காலமும்
[தொகு]இந்தியாவில், தமிழ்நாட்டில் கடலூரில் மஞ்சகுப்பம் என்னுமிடத்தில் இறைபக்தி மிகுந்த ராஜகோபால ஐயர் - சாவித்திரி அம்மாள் என்ற தம்பதியர்க்கு பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் தீபாவளியன்று (நவம்பர் 8, 1961) முரளீதரன் பிறந்தார்.
இவரைப்பற்றி இவருடைய சீடர்கள் கூறுவன: சுவாமி முரளீதரர் குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுளிடத்தில் ஈடுபாடும் முக்கியமாக ஸ்ரீனிவாசப் பெருமாளிடம் அதிக பக்தியும் கொண்டிருந்தார். கோவில்களில் நடக்கும் வழிபாடு, சொற்பொழிவு இவற்றைக் கேட்பதில் அதிக நாட்டமுடையவராக இருந்தார். அவருடைய தகப்பனார் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து வரும் சாதுக்களைப் போலவே தாமும் ஆகவேண்டும் என்று விரும்பினார். துறவிகள் அணியும் காவி உடையின் மீது ஒரு ஈர்ப்பு கொண்டிருந்தார். மகான்களின் முன்னிலையிலும், (அதிட்டானங்களிலும்) கோவில்களிலும் நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் தீவிர சீடராகவும் அவரை தரிசிக்கவும் அவருக்கு பணிவிடை செய்யவும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமலும் இருந்தார்.
உபதேசமும் தத்துவமும்
[தொகு]இரண்டன்மைக் கொள்கை (அத்வைதம்)
[தொகு]ஆதி சங்கரர் காட்டிய அத்வைதத் தத்துவத்தில் முரளீதரர் பரிபூரணமாக நம்பிக்கை உடையவரெனக் கூறப்படுகின்றது. தன் உண்மை இயல்பை உணர்வதே (உள்ள இயல்புநிலை (ஆத்ம ஸாக்ஷாத்காரம்)) எல்லா உயிரினங்களின் குறிக்கோள் என எடுத்துரைக்கின்றார். குறிப்பாக இரமண மகரிஷியின் வாழ்க்கையையும் அவர் இயற்றிய "உபதேச உந்தியார்", "அக்ஷரமணமாலை", "உள்ளது நாற்பது" போன்ற நூல்களைப் பற்றி விரிவுரை செய்துள்ளார். இவற்றில் சில குறுந்தகடுகளாகவும் ஒலி நாடாக்களாகவும் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.
பக்தி
[தொகு]சுவாமி முரளீதரர் அத்வைதத்தில் நம்பிக்கை உடையவராக இருந்தாலும் கடவுளிடத்தில் பத்தியுடன் இருப்பதாலேயே ஒருவர் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் திட நம்பிக்கை உடையவர் ஆவார். முழுப் பரம்பொருள் தன்னுருவான அருள்மிகு கி்ருஷ்ணனிடமும், பாண்டுரங்கன், குருவாயூரப்பன் முதலிய தெய்வங்களிடத்திலும் அன்பான பக்தி கொள்வதே உகந்தது என்பது இவரது சித்தாந்தம் எனக் கூறுகின்றனர். பக்தியின் வடிவமும் புராணங்களில் தலையாயதுமான ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதின் மூலம் ஒருவர் எளிதாக அருள்மிகு கிருஷ்ணனின் அருகாமையை அடைய முடியும் என்று நம்புபவர். இந்த நெறியில் வந்த மகான்களை சுவாமி முரளீதரர் பின்பற்றுபவர்.
நாம கீர்த்தனம்
[தொகு]இந்த கலி யுகத்தில் முக்தி அடையவும் மற்றும் பக்தி செய்யவும் மிகவும் எளிதான வழி நாம கீர்த்தனம் என்பதை இவர் நம்புகிறார். மறைகள், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் சனாதன தர்மத்தில் உள்ள மற்ற புராணங்களும் கடவுளை அடைய இதே கருத்தைத்தான் கற்பித்து வருகிறது. சாத்திர நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் இறையின் பெயரை மனதுக்குள் செபித்தால் (ஊன்றிக் கூறிவந்தால்) அது அவரை தூய்மைப்படுத்தும். அதே பெயரை உரக்க செபித்தால் அது சொல்பவரையும் கேட்பவரையும் அந்த இடத்தையும் தூய்மைப்படுத்தும். கலி சந்தரண உபநிசதத்தில் குறிப்பிட்டுள்ளபடி[மேற்கோள் தேவை]
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
என்ற மகாமந்திரத்தை நாமகீர்த்தனம் செய்வதே சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு ஆனந்த நிலையை அடைய மிக எளிதான வழி என்பதை சுவாமி முரளீதரர் சொல்லி வருகின்றார்.
உபந்யாசங்கள்
[தொகு]ஸ்ரீ ஸ்வாமிஜி தமிழ்நாட்டின் நகரங்கள், கிராமங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவில்களில் ஸனாதன தர்மம், ஆத்ம ஸாக்ஷாத்காரம், வேதாந்தம், ஸ்ரீமத் பாகவதம், வேதங்கள், உபநிஷதங்கள், குரு, ஸத்ஸங்கம், பக்தி, நாமகீர்த்தனம் உட்பட பல்வேறு ஆன்மீகத் தலைப்புகளில் உபந்யாசம் செய்து வருகிறார்.
இதைத் தவிர ஆதி சங்கரர், நாமதேவர், சனாபாய், துக்காராம், ஞானதேவர், இராமானுசர், வல்லபாச்சார்யார், சிரீ போதேந்திரர், பகவான் இரமணர், சிரீ சதாசிவ பிரம்மேந்திரர், இராம கிருட்டிண பரமகம்சர், தியாகராசர், ஆழ்வார்கள், சிரீ யோகிராம்சூரத்குமார் போன்ற சாதுக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றி சொற்பொழிவு செய்துள்ளார். தன் சொற்பொழிகளில், வேதங்கள், வைதீக தர்மங்களில் சொல்லிய நம் பழம் பெருமை மிக்க பண்பாடு, கலாச்சாரம் மற்றும் இக்கால மக்கள் நேர்வழியில் சென்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தத் தேவையான சமுதாயக் கோட்பாடுகளையும் எடுத்துரைக்கிறார்.
நல்வாழ்க்கை முறை, நெறிகள், ஆன்மீகம் இவற்றைப்பற்றி சுவாமி முரளீதரர் நல்லுரைகள் தமிழ் பொதிகை அலைபரப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பப்படுகின்றது.
சுவாமி முரளீதரர் தமிழ், சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் பல கீர்த்தனஙகள் இயற்றி உள்ளார் (இயற்றியும் வருகிறார்) . ஆன்மீக சிந்தனைகள், குரு மகிமை மற்றும் கடவுள் மகிமை பற்றி அமைந்துள்ள இக்கீர்த்தனங்கள் இனிமையாகவும் எளிமையாகவும் பக்தி ததும்புபவையாகவும் அமைந்துள்ளன.
அண்மையில் சுவாமி முரளீதரர் இயற்றிய "கலி தர்ம உந்தியார்" என்ற முப்பது வரிகளைக்கொண்ட எளிமையான தமிழ்க் கீர்த்தனம் நம் வேதங்களில் கடவுளை அடைய சொல்லியுள்ள பல பாதைகளையும் ஒன்றொன்றாக எடுத்துச் சொல்லி, கடைசியில் நாம சங்கீர்த்தனம் மட்டுமே இக்கலியுகத்தில் இறைவனை அடைய ஒரே வழி என்று நிறுவுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகின்றது
கோவில்கள்
[தொகு]சுவாமி முரளீதரர் இந்தியாவில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீ பெரும்புதூர் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ள மகாரண்யம் என்னும் அழகான கிராமத்தில் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயம் அமைத்துள்ளார். இங்கு தினமும் சுப்ரபாதத்தில் தொடங்கி டோலொத்ஸவம் முடிய முறையாக வழிபாடு நடந்து வருகிறது. இதைத்தவிர முக்கிய தினங்களான ஏகாதசி, அமாவாசை, சிரவண நட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் சிறப்பு பூசை நடக்கிறது.
அமைப்புகள்
[தொகு]குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் மிஷன்
[தொகு]சுவாமி முரளீதரர் 1993 ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் தேதி "குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் மிஷன்" என்னும் இயக்கத்தை நிறுவினார்[மேற்கோள் தேவை]. இந்த அமைப்பின் நோக்கம் பாகவத தர்மத்தைப் பரப்புவதும் சனாதன தர்மத்தின் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி ஆன்மீக காரியங்களை கடைபிடிப்பதாகக் கூறப்படுகின்றது.
ஸ்ரீ சாந்தீபனி குருகுலம்
[தொகு]சுவாமி முரளீதரர் வேதங்களைப் பாதுகாப்பதன் மூலம் அதன் உதவியுடன் சமூகத்தில் உள்ள மக்களின் துயரங்களை நீக்க முடியும் என்பதில் திட நம்பிக்கை உடையவராவார். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் (கடவுளை அடைய மேற்கொள்ளும் சாதனைகள்) வேதங்கள் அடிப்படையாய் இருப்பதால் வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இவரது கொள்கை. இவர் மேற்பார்வையில் 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்ரீ சாந்தீபனி குருகுலம் நிறுவப்பட்டது[மேற்கோள் தேவை]. வேதங்களை காத்து பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். இங்கு யஜுர் வேதம் மற்றும் சாம வேதம் பழங்கால குருகுல முறைப்படி சொல்லிக்கொடுக்கப் படுகிறது.
இது போன்ற வேத பாடசாலைகள் தமிழ்நாடு, ஆந்திரப்ரதேசம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் செயல் பட்டு வருகின்றன. இவைகளில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சைதன்ய மகாப்பிரபு நாம பிட்சா கேந்திரா
[தொகு]சென்னையில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் இந்த நிறுவனம் அமைக்கபட்டது. சமசுக்கிருத மொழியில் "பிக்ஷா" என்றால் "பிச்சை எடுத்தல்" என்று பொருள்.
நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடத்திற்கு வர இயலாதவர்களையும் கலந்து கொள்ள முடியாதவர்களையும் கூட நாமா சென்று அடையவேண்டும் என்பது சுவாமி முரளீதரரின் எண்ணம் என்று அவருடைய சீடர்கள் கூறுகிறார்கள்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
என்ற மகாந்திரத்தை ஊர் ஊராகப் பரப்பி மக்களிடம் பிச்சை கேட்பதே இந்த அமைப்பின் நோக்கம்.
மனித இனத்தின் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் புறவாழ்வு மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் மக்களை பகவானின் நாமத்தைச் சொல்ல வேண்டுவதே இந்த அமைப்பின் குறிக்கோள். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் மகாமந்திர சங்கீர்த்தனம் ஒலித்து அதன் மூலம் மக்கள் பிறவிப்பிணியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் கொள்கை.
இவ்வமைப்பின் முயற்சியால் ஒவ்வொரு ஊரிலும் வாரம் தோறும் பல வீடுகளில் மஹாமந்திர கீர்த்தனம் நடைபெற்று வருகிறது. இது போல் இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இந்தொனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, யுனைடட் கிங்டம், ஒமான், நைஜீரியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தற்சமயம் 350க்கும் மேற்பட்ட நாம கேந்திராக்கள் செயல் பட்டு வருகின்றன.
உலக அமைதி, செழிப்பு, சகோதரத்துவம் மற்றும் இல்லற சுகங்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் திறவுகோலாக உள்ள இந்த மஹாமந்திர கீர்த்தனத்தைப் பெரிய அளவில் பரப்புவதற்காக நாமத்வார் (ஸம்ஸ்க்ருத மொழியில் இதன் பொருள் : "இறை நாமத்தின் வாயில்") துவக்கப்பட்டது.
பிரசுரங்கள்
[தொகு]"மதுரமுரளி" சுவாமி முரளீதரரின் எண்ணங்களையும் நல்லுரைகளையும் எதிரொலிக்கும் மாத இதழாக வெளி வருகிறது. அக்ஷரமணமாலை, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பாம்பன் சுவாமிகள், திருவலம் சுவாமிகள், நாம மகிமை, போன்ற தலைப்புகளில் சுவாமி முரளீதரரின் சொற்பொழிவுகள், பஞ்ச கீதஙகள், கலி தர்ம உந்தியார், ராஜ் டிவியில் சுவாமி முரளீதரர் சொற்பொழிவுகள் ஆகியவை ஒலிநாடாக்களாகவும், குறுந்தட்டுகளாகவும் வெளி வந்துள்ளன. சுவாமி முரளீதரரின் எண்ணங்கள், கேள்வி பதில்கள், மற்றும் உரைகளின் தொகுப்புகள் புத்தகங்களாகவும் வெளி வந்துள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஸ்ரீ முரளீதர சுவாமியின் சத்சங்க இணையம்
- நாமத்வார் பரணிடப்பட்டது 2007-12-11 at the வந்தவழி இயந்திரம்
- க்ளோபல் ஆர்கநைசேஷன் பார் டிவினிடி (அமெரிக்கா
- ஆத்திரேலிய சத்சங்க இணையம் பரணிடப்பட்டது 2008-07-18 at the வந்தவழி இயந்திரம்
- ஒரு பக்த அன்பரின் இணையம்
இந்த நெறியில் தோன்றிய இதர ஆசிரியர்கள்
[தொகு]- யோகிராம்சூரத்குமார்
- சிரீ சிரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் பரணிடப்பட்டது 2007-10-20 at the வந்தவழி இயந்திரம்
- ஸ்ரீ சிவப்ரகாச ஆனந்தகிரி யோகி
- சிரீ பப்பா ராமதாசு
- சிரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் பரணிடப்பட்டது 2008-01-01 at the வந்தவழி இயந்திரம்
- திருவனந்தபுரம் சிரீ அபேதானந்த சுவாமி
- சிரீ ஞானானந்த கிரி
- சுவாமி சிவானந்தா