பெட்ரோல்
பெட்ரோல் (Petrol, gasoline, பெற்றோல்) என்பது பெட்ரோலியம் எனப்படும் பாறை எண்ணெயில் இருந்து பெறப்படும் ஒரு ஒளியூடுபுகவிடும் திரவமாகும். இது பிரதானமாக அகத்தகன இயந்திரங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சேதனச் சேர்வைகளாலேயே ஆக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியமானது பல்வேறு கூட்டுப்பொருட்களால் ஆனது. இதிலிருந்து பகுதிபடக் காய்ச்சி வடித்தல் செயன்முறை மூலம் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், இவற்றில் மாற்று எரிபொருளாக எதனோலும் சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும்.
பண்புகள்[தொகு]
ஆவிப்பறப்பு[தொகு]
டீசல், விமான எரிபொருள் அல்லது மண்ணெய் ஆகியவற்றிலும் பார்க்க பெற்றோல் ஆவிப்பறப்புக் கூடியதாகும். இதற்குக் காரணம் பெற்றோலின் அமைப்புப் பொருட்கள் மட்டுமல்ல. அதனுடன் சேர்ந்துள்ள கூட்டுப் பொருட்களும் இதற்குக் காரணமாகும். இதன் ஆவிப்பறப்பைக் கட்டுப்படுத்த, -0.50C கொதிநிலையைக் கொண்ட பியூற்றேன் கலக்கப்படும். பெற்றோலின் ஆவிப்பறப்பு, ரைட் ஆவியமுக்க (RVP) சோதனை மூலம் அளவிடப்படும். பயன்பாட்டுக்குத் தேவையான ஆவிப்பறப்பு வீதம் வெப்பநிலையில் தங்கியிருக்கும். சூடான காலநிலையில், உயர் மூலக்கூற்று நிறையுடைய, அதாவது தாழ்ந்த ஆவிப்பறப்பு வீதமுடைய பெற்றோல் பயன்படுத்தப்படும். குளிரான காலநிலையில், ஆவிப்பறப்புக் குறைந்த பெற்றோலைப் பாவிப்பதால், வாகனங்களை இயக்குதல் கடினமாகலாம்.
சூடான காலநிலையில், மிதமிஞ்சிய ஆவிப்பறப்புடைய பெற்றோல் பயன்பாட்டால் "ஆவிப் பூட்டு" எனும் நிலை ஏற்படும். இதன்போது, எரிபொருள் கொண்டு செல்லும் பாதையில், திரவ எரிபொருள் ஆவிநிலைக்கு மாறுவதால் எரிபொருள் பம்பி செயலிழக்கும். இதனால் இயந்திரத்துக்கு எரிபொருள் கிடைக்காது. இப் பாதிப்பு பெரும்பாலும் இயக்குதண்டினால்(camshaft) இயங்கும் எரிபொருள் பம்பிகளிலேயே நடைபெறும். இங்கு தகனிக்கப்பட்ட எரிபொருள் வெளியேறுதல் தடைப்படும். எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில், எரிபொருள் ஒரு குறித்த பெறுமானத்துக்கு அமுக்கப்படவேண்டும். இயந்திரம் ஆரம்பிப்பதற்கு முன் இயக்கு தண்டின் கதி அண்ணளவாக பூச்சியம் என்பதால், மின் பம்பி பயன்படுத்தப்படும். இது எரிபொருள் தாங்கியிலேயே அமைந்திருப்பதால், எரிபொருள் உயர் அமுக்க பம்பியையும் குளிர்விக்கலாம். பயன்படுத்தப்படாத எரிபொருளை தாங்கிக்கு அனுப்புவதால், சீரான அமுக்கம் பேணப்படும். இதனால், எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில் ஆவிப் பூட்டு பிரச்சினையாக அமையாது.
ஐக்கிய அமெரிக்காவில், எரிக்கப்படாத ஐதரோகாபன்களின் வெளியீட்டைக் குறைக்க ஆவிப்பறப்புக் கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்காக ஆவியாதலுக்கு தடை செய்யும் மாற்றியமைக்கப்பட்ட பெற்றோல் பயன்படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியாவில், மாநில அரசாங்கங்களால், கோடைகால பெற்றோல் ஆவிப்பறப்பு எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன. இவை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகின்றன. பெரும்பாலான நாடுகள் கோடைகால, குளிர்கால மற்றும் இடைநிலை எல்லைகளைக் கொண்டுள்ளன.
பெற்றோல் தட்டுப்பாட்டின் போது ஆவிப்பறப்பு விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன (இதனால், அதிக பெற்றோல் பகுதிகள் வளிமண்டலத்துக்கு விடப்படுகின்றன). உதாரணமாக, ஆகஸ்ட் 31, 2005ல், கத்தரினா புயலின் காரணமாக, சில நகரப்பகுதிகளில் மாற்றியமைக்கப்படாத பெற்றோல் விற்பனைக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது. இதன்மூலம், கோடைகால பெற்றோல் வகைக்குப் பதிலாக குளிர்கால பெற்றோல் உடனடியாக பாவனைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றாடல் பாதுகாப்பு முகவரகத்தின் நிர்வாகியான ஸ்டீபன் L. ஜோன்சனின் ஆணைப்படி இச் செயன்முறை செப்டெம்பர் 15, 2005 வரை நடைமுறையிலிருந்தது.[1]
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன. இயந்திரம் நிறுத்தப்படும்போது, இது எரிபொருள் தாங்கியிலிருந்து ஆவியான எரிபொருளை நிலக்கரி நிரப்பப்பட்ட பெட்டகமொன்றில் சேகரிக்கும். பின்பு, இயந்திரம் இயங்கும்போது சேகரிக்கப்பட்ட ஆவியை பயன்பாட்டுக்காக இயந்திரத்துக்கு வழங்கும் (பெரும்பாலும் இயந்திரம் அதன் சாதாரண இயங்கு வெப்பநிலையை அடைந்தபின்). ஆவிப்பறப்புக் கட்டுப்பாட்டு முறைமை ஒரு மூடப்பட்ட வாயு மூடியையும் கொண்டிருக்கும். இதன்மூலம் எரிபொருள் மீள்நிரப்பு குழாயினூடாக ஆவி வெளியாவது தடுக்கப்படும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Week 1: Nationwide fuel waiver issued to bolster fuel supplies". Response to 2005 Hurricanes. U.S. Environmental Protection Agency (31 August 2005).
- ↑ "EVAP Evaporative Emission Control System". AA1Car. பார்த்த நாள் 1/14/2013.