பழந்தமிழராட்சி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழந்தமிழராட்சி என்பது 1952 இல் தேவநேயப்பாவாணரால் எழுதப்பட்ட 170 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாகும். இந்நூலில் பழந்தமிழகத்தில் தமிழ் மன்னர் ஆட்சியின் போது நிகழ்ந்தவற்றை, இலக்கிய நூல்களின் துணைக்கொண்டு பாவாணர் எடுத்தியம்புகின்றார். இந்நூலில், அரசியலுறுப்புகள், ஆள்நிலப் பிரிவுகள், அரசர் பாகுபாடு , அரசன் தகுதிகள், அரசுச் சின்னங்கள், அரசியல் வினைஞர் , அதிகாரிகளின் அமர்த்தம், படையும் பாதுகாப்பும், ஆட்சிமுறை, பொருளாதாரம், அளவைகள், பண்டமாற்றுங் காசும் , மறமும் போரும், அறமுங் கொடையும், குற்றமுந் தண்டனையும் , உழவுங் கைத்தொழிலும் , வணிகமும் போக்குவரத்தும், கலையுங் கல்வியும், சமயமும் கொள்கையும், திருப்பணிகள், அரசர் விழாக்கள், சில அரசியற் கருத்துகள், நம்பற்கரிய செய்திகள் , அன்றாட நிகழ்ச்சி, இல்லற வாழ்க்கை , அரசர் முடிவு ஆகிய தலைப்புக்களின் கீழ் அக்காலத்தில் நிலவி வந்த ஆட்சி பற்றி விளக்கப்படுகின்றது. மேலும், பின்னிணைப்பாக மக்கள் நிலைமை, மொழி நிலைமை , சீமையரசாட்சி வகைகள், வேத்தியல் எழுத்தும் நூல்களும் ஆகியனவும் கூறப்படுகின்றன.

அரசர் பாகுபாடு[தொகு]

அரசர் குறுநிலமாளும் சிற்றரசர், பெருநிலமாளும் தலைமையரசர், பலநிலமாளும் பேரரசர் என மூன்று வகைப்படுவர். சிற்றரசர் மன்னர் என்றும், தலைமையரசர் வேந்தன் அல்லது கோ எனவும் அழைக்கப்படுவர் என்றும் இந்நூலில் கூறப்படுகிறது. அதாவது மன்னன் எனும் பதவியிலும் கோ எனும் பதவி பெரியது எனும் செய்தியைத் தருகிறார்.

அரசுச் சின்னங்கள்[தொகு]

பாவாணர் அரசுச் சின்னங்களாக குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை, கொடி, முத்திரை. முரசு, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை என்பனவற்றைக் கூறுகின்றார். இருபத்தொரு அரசுச் சின்னங்கள் சூடாமனி நிகண்டில் கூறப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் பல "மங்கலப் பொருள்களும் அரணும் உவமையுமாதலின்" அவற்றைப் பற்றிக் கூறவில்லை என்றும் சொல்கிறார்.

படையும் பாதுகாப்பும்[தொகு]

இப்பகுதி பாதுகாப்புக்காக சூழ்ந்திருந்த மதில், வழங்கிய பொறிகள் என்பன பற்றி கூறுகின்றன. மதுரை மதிலரண் பல்வேறு பொறிகளைக் கொண்டிருந்ததென்று கூறுவனவற்றையெல்லாம் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் கூறுவதற்கு,
காய்பொன்னுலை - உருகக் காய்ச்சியெறியும் எஃகு உலை
கல்லுமிழ் கவண்-கல்லையெறியும் இருப்புக் கவண் (இடங்கணி). என்பவற்றினைக் கூறலாம். இப்படி முப்பத்தைந்து பொறிகளைக் கூறுகிறார்.

அளவைகள்[தொகு]

எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை, கால அளவை என்பன பற்றிக் கூறுகின்றார். நிலவரி விதிக்கும் பொருட்டு சோழவள நாடு முழுவது முதலாம் இராச இராசன் காலத்தில் ஒருமுறையும், முதல் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலங்களிலும் அளக்கப்பட்டது எனக் கூறும் செய்தி நீட்டல் அளவையில் கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழந்தமிழராட்சி_(நூல்)&oldid=3065018" இலிருந்து மீள்விக்கப்பட்டது