உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:2220181sanjeev/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சிறுகதை


ஓடிப் போனானா பாரதி?

பாரதியின் கவிதைகள் வாங்கப்படும் அளவுக்கு – கவனிக்கவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறேன், ‘படிக்கப்படும் அளவுக்கு’ என்று சொன்னேன் இல்லை – அவனுடைய வசனங்கள் பரவலாக பதிப்பிக்கவோ, வாங்கவோ, படிக்கவோ படுவதில்லை. பாரதி அன்பர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் எவரும் அவனுடைய வசனங்களை ஒதுக்கிவிட்டு அவனை அறிய முடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. எங்கெங்கெல்லாம் அவனுடைய வசனங்களைப் பற்றிக் குரல் எழும்புகிறதோ அங்கங்கெல்லாம் ஓடிப் போய் நின்று கவனமாகக் கேட்டுக் கொள்வேன், அதாவது என் கவன வட்டத்திற்குள் வரும் எந்தக் குரலையும்.

பாரதி வசனங்கள் குறித்த அலட்சியம் மிகப் பலரிடம் விரவியிருக்கிறது. என் மரியாதைக்குரிய ஓர் அன்பரிடமும் இது உண்டு. தமிழ்நாட்டில் பாரதிக்குத் தொண்டாற்றியவர்களில் (அதாவது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களில்) மிக முக்கியமான பத்து பேர் என்று பட்டியல் எடுத்தால், அவர் பெயரும் கட்டாயம் அதில் இருக்கும். ஆனால் அவர் கூட பாரதி வசனம் என்றாலே முகத்தைச் சுளிப்பார். இப்போது தலைகீழாக மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

அவர் சார்ந்த அமைப்பில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. பாரதி வசனங்கள்தான் விவாதப் பொருள். இவர் எதிரணியில் பேசினார். பட்டிமன்ற மரபுக்குச் சற்றும் குறையாமல் தரக்குறைவான ஒரு வாக்கியத்தை, பாரதி வசனங்கள் குறித்துச் சொன்னார். இது நடந்தது 95ல் என்று நினைவு. அந்த நிகழ்ச்சியின் போது நான் அங்கே இல்லை. அதன் பிறகு இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அவருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதினேன். பாரதியின் வசனங்களை ஏன் படிப்பதில்லை என்று எனக்கு விளக்கம் அளித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்தான் நம் தலைப்பில் உள்ள கதை ஆரம்பிக்கிறது.

அவருடைய கடிதத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டி, அதன் பிறகு அவருக்கு நான் எழுதிய நீண்ட கடிதத்தை நண்பர்களுக்கு நடுவில் வைக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள் என்றாலும், செய்திகள் மிக மிகப் பொதுவானவை என்பதால் இவற்றைப் பொது மேடையில் வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தனிப்பட்ட ஒன்று என்பதால் அவருடைய பெயரைத் தவிர்க்கிறேன். இங்கே விவாதம் அவரைப் பற்றியதன்று. எனவே அவருடைய பெயர் தேவையில்லாத ஒன்று.

பாரதியின் வரலாறு எத்தனை தூரம் தவறான கருத்துகளை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கம். பாரதியின் அணுக்கத் தொண்டனாக அறிமுகம் பெறுவதில் பெருமிதம் கொண்ட ஒருவரே இப்படிப் பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்பது பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுகிறது. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்திற்கு விடை எழுத மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டேன். ஆதார பூர்வமாக எடுத்துச் சொல்ல நிறைய வரலாற்றுப் பதிவுகள் தேவைப்பட்டன.

நான் குறிப்பிடும் பாரதி அன்பருக்கு, பாரதியின் கவிதைகளைப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் வம்பில்லை என்ற ஒரு அபிப்பிராயம் ஆழமாகவே இருந்தது. பாரதியின் உரைநடையைப் படிக்கத் தொடங்கினால் பல சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும் என்றொரு கருத்தும் அவருக்கு இருந்தது. எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொன்னார். பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதைக் சுற்றிப் படர்ந்திருக்கும் சில வினோதமான செய்திகளும், பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை எழுத்தில் சிலவும் அவனை நல்லதொரு கோணத்தில் காட்டவில்லை என்பது அவற்றில் ஒன்று. பாரதியின் நெருங்கிய நண்பர்களே, ‘ஒன்றும் அறியாத அப்பாவியான முரப்பாக்கம் சீனிவாசனை – இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகப் பதிவு பெற்றிருந்த இளைஞரை – இக்கட்டில் மாட்டி வைத்துவிட்டு, தான் தப்பித்துக்கொண்டார்,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘பாரதியின் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி,’ என்றும் பாரதியின் சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கும் பாரதி அன்பர் தன் கடிதத்தில் எடுத்து வைத்திருந்தார்.

இனி அவருடைய 1.2.1997 தேதியிட்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள்.

“பாரதி ஒரு மகாகவி. முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும். அவர் வசனகர்த்தா, சிறுகதை ஆசிரியர், வசன கவிதையின் பிதாமகன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பது என் அசைக்க முடியாத கொள்கை. எதற்கெடுத்தாலும் அவர் மீது அட்சதை தூவி அர்ச்சிக்கும் பூஜா மனப்பான்மை எனக்கு உடன்பாடல்ல. மேலும், வசனத்தில் பாரதியை விஞ்சும் எழுத்துகள் வந்துவிட்டன. கவிதையில் அப்படி இல்லை என்பது என் கணிப்பு. மேலும், பாரதியின் வசனத்தை ஆராய்ந்தால் கவிதையுடன் முரண்படும் இடங்கள் வருகின்றன. பாரதியின் வசனச் சிறப்பைப் பற்றி என் பழைய கருத்துகள் சில மறு பரிசீலனை செய்யப்படுகின்றன. எத்தனைப் பிரச்சினைகள் பற்றி அவன் சிந்தித்திருக்கிறான் என்பதை எல்லாம் அறிந்து வருகிறேன்.

பாரதி புதுவைக்குச் சென்ற (ஓடிய) வரலாறு நாம் அறிந்ததே. இது பாகை முள்ளாக உறுத்துகிறது. நான் வணங்கும் இராமநுஜரும் இப்படி கர்நாடகத்துக்கு ஓடியவர். என்ன சமாதானம் சொன்னாலும் இங்கிருந்து போராடி இருக்க வேண்டாமா? இரண்டு ஜன்ம தண்டனை பெற்ற கப்பலோட்டிய தமிழர் ஊரைவிட்டா ஓடினார்? இதில் insult added to the injury என்னவென்றால், இந்தியா பத்திரிகை ஆசிரியராக உண்மையில் செயல்பட்ட பாரதி, புதுச்சேரி செல்ல ‘நாம்கே வாஸ்தே’ ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். அவர் பயந்தாங்கொள்ளி. நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? என்று. (வேடிக்கை. நீதி மன்றத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி வந்துவிட்து மட்டுமன்றி, இப்படி ஓர் எழுத்து!) ஓடிவந்த செயலுக்கு வருந்தியதாக பாரதியார் எழுத்தில் ஒரு குறிப்பும் இல்லை. பாரதி வசனம் பற்றிப் பேசினால் இதெல்லாம் வரும் என்று பட்டிமன்றத்தில் கூறினேன். இதுதான் விமர்சனத்துக்கு ஆளானது.”

இதில் என்ன வேடிக்கை என்றால், மேற்படிச் செய்திகளில் எதற்குமே ஆதாரம் இல்லை என்பதுதான். (1) பாரதி முரப்பாக்கம் சீனிவாசனை (இந்தியா பத்திரிக்கை ஆசிரியர்) காட்டிக் கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்குத் தப்பி ஓடிவிட்டார். (2) அங்கே போய் ஒளிந்து வாழ்ந்துகொண்டு இந்தியா பத்திரிகையில் அவரைப் பற்றி இழிவாக எழுதினார். (3) தான் ‘ஓடிப் போய்விட்டதற்காக’ வருத்தப் பட்டு எழுதவில்லை. (இத்தனைச் சிக்கல்கள் வெளிப்படும் ஆகையினாலே பாரதி வசனங்களைப் படிப்பதில்லை.)

முதல் கருத்துக்கு அணுக்கமாக இருப்பது, பாரதியின் தோழரும் பத்திரிக்கையாளருமான எஸ். ஜி. இராமநுஜலு நாயுடு காரணம். “தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்து விட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமே ஆகும்” என்று எழுதியிருப்பது. உண்மைகளை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்பது புலனாகும்.

‘ஓடிப் போய்விட்டார்’ என்ற வன்மமான எழுத்து சுதேசமித்திரனில் வெளிவந்த ஒன்று. (அதாவது பாரதி இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய காலகட்டத்தில்). “துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால் இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்து இருக்கும்’ என்று சுதேசமித்திரன் 16.11.1908ல் எழுதியதை பெ. சு. மணி சுட்டிக்காட்டுகிறார். (“பிற பத்திரிகைகள் எடுத்துக் கூறாததை பின்வருமாறு வெளியிட்டது” என்ற குறிப்புடன். – பத்திரிகையாளர் பாரதியார், பெ. சு. மணி, பக்கம் 141).

முரப்பாக்கம் சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுத் தான் தப்பிவிட்டார் என்ற தவறான கருத்துக்கு இராமநுஜலு நாயுடு வித்திட்டார். ரா. அ. பத்மநாபன், நாடக பாங்கில் அந்தக் காட்சியை எழுதுவதாக நினைத்துக் கொண்டு ‘சித்திர பாரதி’யில் இந்தத் தவறான கருத்துக்கு நீரூற்றி வளர்த்தார்.

பாரதியின் வாழ்க்கை மிகப் பெரும் அளவில் எழுதப்பட்டிருந்தும், அவரவருக்குத் தோன்றிய விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிக்கலாகப் பிரித்து, உண்மையை ஆதார பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என்னுடைய விடைக் கடிதம் அப்படிப் பட்ட ஒரு முயற்சி. பின்வருவது என் விடைக் கடிதத்திலிருந்து.

எனதன்புக்குரிய ……. அவர்களுக்கு,

தங்களின் அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பல நாள்களுக்குப் பிறகு சிந்திக்க நிறைய தீனி கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஒன்று கூறிவிடுகிறேன். பாரதியைப் பற்றி, மற்றும் அவரின் எழுத்தைப் பற்றி எந்த அபிப்பிராயத்தையும் யாரும் வைத்துக்கொள்ளலாம். அதை யாரும் மறுக்கவோ, குறை கூறவோ முடியாது. தங்களுக்கு, பாரதி கவிஞனாக மட்டுமே தென்பட்டால் அதற்கு எந்தவித ஆட்சேபமும் கிடையாது. உதிக்கும் செங்கதிர் ஒரு வண்ணமும், உச்சி வெய்யில் ஒரு வண்ணமும், அஸ்தமனத்தின் போது ஒரு வண்ணமும் தெரியவில்லையா? ஆனால், வானவில் தோன்றும் போதன்றோ சூரியனுக்கு ஏழு வண்ணங்கள் இருப்பதாய்ப் புலப்படுகிறது?

கண்ணுக்குக் கண் பார்வை மாறுபடும். மஞ்சள் நிறத்தில் நமக்குத் தெரியும் பூ, வெள்ளை நிறத்தில் தேனீக்குத் தெரிவதாகச் சொல்கிறார்கள். போகட்டும். இந்தப் பார்வை வித்தியாசத்தைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான் தெரியுமா?

“ஸங்கீதத்தில் ஸ்வர ஸ்தானங்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழு இருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒலியையும் ஸ (ஷட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற ரி, க, ம, ப, த, நி பாடலாம். இங்ஙனம் ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சிலருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடும் என்றும் சொல்லுகிறார்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத் தொண்டை பேசுதல் ஸாத்தியமில்லை.

ஆனால், ஒளியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக்கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத்துக் கொள்வோம். சந்த்ர மண்டலம் இடிந்து பூமிமேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒலியை மேற்படிக் கிளிக்குஞ்சின் ஒலியினின்றும் எத்தனை ஸ்தாயி மேலாக வைத்துக் கணக்கிடலாம்?

……….ஒளியோ எல்லையற்றது. நாமோ துளி தவிர முழுக் குருடு. மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஒளியாகக் கருதுகிறது. ஒளி விஷயத்தில் ஆந்தை நம்மைவிட ‘கீழ் ஸ்தாயி’ பழகியிருக்கிறது. ஆனால் நம்முடைய ஸ்தாயி ஆந்தைக்கு எட்டாது….”

மேலே எழுதிக் கொண்டே போகிறார். ஆச்சரியமான physics. குழந்தைக்கும் புரியவைக்கும் அழகான உத்தி. நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு எட்டுவது மற்றவருக்குப் புலப்படுவதில்லை. சங்கங்கள் அமைப்பதும், கழகங்கள் குழுமுவதும் தத்தமக்குப் புலப்பட்டதை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே. ஆகவே, உங்கள் பார்வைக்குப் பட்டதைச் சொல்லிவிட்டீர்கள். என் பார்வையில் பட்டதையும் கொஞ்சம் சொல்கிறேன். ஒன்றே ஒன்று. ஆயிரமாயிரம் வாதப் பிரதிவாதங்களால் ஒரே ஒரு உண்மையை நிறுவவோ, தெளிவுபடுத்தவோ, தரிசிக்க வைக்கவோ இயலாது. சத்தியம் வாதங்களுக்கு அப்பாற்பட்டது. பற்பல வாதங்களைக் கண்டும், ஆராய்ந்தும் சத்தியத்தின் வழி இன்னதாக இருக்கலாம் என்று நிச்சயித்துக் கொள்ளலாகும். அதாவது, யாருடைய வாதம் மேலானது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் இருந்தால்.

ராமனுஜரைப் பற்றி சொல்வதற்கான தகுதியோ, கல்வியோ எனக்கில்லை. பாரதியைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலும்.

பாரதி வரலாறு எழுதிய ஒவ்வொருவரும், அவர் பாண்டிச்சேரி செல்வதற்கு (சரி, ஓடிப் போவதற்கு) உடன்படவில்லை; நண்பர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கவே, இணங்கினார் என்கிறார்கள். (முரப்பாக்கம் ஸ்ரீனிவாசன் கதைக்குப் பின்னால் வருகிறேன்.)

“பாரதியார் சென்னையிலிருப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், நண்பர்கள்தான், சிறை செல்வதைவிட புதுவை சென்று அங்கிருந்து இந்தியாவைத் தொடர்ந்து நடத்த முயல்வதே சரி என்று வற்புறுத்தினார்கள். மேலும் அக்காலம் காந்தி யுகதுக்கு முந்தியது. திலகர் முதலிய தலைவர்கள், சிறை சென்று ஆத்மிக வழியில் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க முடியும் என்று கருதவில்லை. போராட்டத்தை விடாமல் நடத்த வேண்டும் என்பதே கருத்தாயிருந்தார்கள்.” — சித்திர பாரதி. ரா. அ. பத்மநாபன்.

“பாரதியார் வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. அவர் எழுத்திலும், பேச்சிலும், வாழ்க்கையிலும் அச்சத்தை அறவே தவிர்த்தவர். அவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதற்கு அவர் நண்பர்கள்தான் காரணம்.” பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும். வை. சச்சிதானந்தன்.

“பாரதியார் சென்னையில் இருப்பது அபாயம் என்றறிந்த அவரது நண்பர்கள், அவர் பிரித்தானியாவின் இந்தியா எல்லையில் எங்கிருந்தாலும் ஆபத்துதான் என்றும், புதுச்சேரி போன்ற பிரெஞ்சு இந்தியாவுக்குப் போய்விடுவதே நல்லது என்றும் சொன்னார்கள்.” — பாரதியைப் பற்றி நண்பர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி. (நீலகண்ட பிரம்மச்சாரி பாரதி ‘விஜயா’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த போது துணையாசிரியராக இருந்தார். கலெக்டர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் இருந்த குழுவின் தலைவர். சத்குரு ஓம்கார் என்ற பெயரில் மைசூர் நந்திஹில்ஸ் பகுதியில் துறவியாக வாழ்ந்த 1978ல் காலமானார்.)

திரு. சீனி. விசுவநாதன் கூறுகிறார்.

“பழுத்த பத்திரிகையாளரும், பாரதியை உள்ளும் புறமும் அறிந்தவருமான திரு. எஸ். ஜி. ராமநுஜலு நாயுடு அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால்,

‘…..அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகுசிறப்புடனும், திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிர வாசகமுள்ளதாக இருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்சம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய், சட்ட வரம்புக்கு உட்பட்டு நடத்தும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரி எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயம் என்று பலர் கூறினர்.’ (அமிர்தகுண போதினி 1929).

“நின்று போராடியிருக்க வேண்டாமா?” என்பது தங்கள் வாதம். நாம் விரும்புகிறபடியெல்லாம் சரித்திரம் நடந்துவிடுமா? நடப்பதுதான் சாத்தியமா?

தொடரும்......

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2220181sanjeev/மணல்தொட்டி&oldid=3845162" இலிருந்து மீள்விக்கப்பட்டது