உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:தமிழ் கழனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதணின் பண்புகள் :

கட்டுரை:


முன்னுரை:

  •   உத்தம சோழனின் மழை வெள்ளத்தை மையமாகக் கொண்ட படைப்பிலக்கியமான ‘முதல்கல்' என்ற சிறுகதை 'தன் கையே தனக்குதவி' என்ற பழமொழிக்கிணங்க படைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர், ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசை விலா, ஊக்கம் உடையான் உழை, என்பார். இது முயற்சிக்கு முன்னோடியாக அமைந்த குறள். இத்தகைய முயற்சியின் நாயகனாக மருதன் காணப்படுகிறான். “முடியாது என்பது முட்டாளின் அகராதி” என்பது ஆன்றோர் வாக்கு. இக்கருத்தைத் தம் ஊராரை அறியச் செய்து உண்மைத் தொண்டனாய்க் காட்சி தருபவன்தான் மருதன். மருதன் மருந்தாயும், விருந்தாயும் படைக்கப்பட்ட பாத்திரம்.

மருதனின் சிந்தனை!

  • வளவனாற்றின் வடகரையில் நின்று பார்த்த மருதனுக்கு வெள்ளக்காட்டைக் கண்டதும் உள்ளம் துடித்தது ; உடல் துடித்தது ; உயிரும் துடித்தது. உழவர்களின் உழைப்பு; உரம்; நாற்று நட்டது. இவை எல்லாம் ஐப்பசி மாத வெள்ளப் பெருக்கால் நட்டாற்றில் விடப்பட்டது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். இப்போதோ, வெள்ளத்தால் ஓடிய பயிரைக் கண்ட போதெல்லாம் ஓடினேன், என்றது மருதனின் மனம். மனம் இருக்கிறது மக்களையும், மழை வெள்ளத்தில் சிக்கிய பயிரையும் காக்க. உதவி செய்வாரில்லை; உற்ற நேரமும் அதுவாகத் தெரியவில்லை. இப்போது பயிரைக் காப்பதைவிட உயிரைக் காப்பதும், ஊரைக்காப்பதும் அவசியம் என அவனுக்குத் தோன்றியது.

மருதனின் மனத்தில் உதித்த சிந்தனை

  • மருதன் வடிகால் மதகைப் பார்த்தான். மதகைத் தொடர்ந்து மூன்று மைல்நீள வாய்க்காலைப் பார்த்தான். வாய்க்கால் முழுவதும் நீரைத் தடுத்த நெய்வேலி காட்டாமணக்குச் செடியைப் பார்த்தான். அவனுக்குள் நீரை வடிகட்ட, ஊரைக்காக்க, பயிரைக் காக்க வழி தெரிந்தது. ஊரார் ஆளுக்கொரு செடியாகக் காட்டா மணக்கைப் பிடுங்கி எறிந்தால் நீர் வடியும்; நிம்மதி கிடைக்கும் எனநினைத்தான். தன் கருத்தை மீன் பிடிக்கும் மாரியிடம் சொன்னாள். மாரியோ தன் தொழிலிலேயே கண்ணாய் இருந்தான்.

மருதன் போட்ட மனு:

  • கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடைபாதை வரப்போரம் கைலியும், பனியனும் சேறால் நனைந்த நிலையில் நடந்தான். அல்லிமலர் மலர்ந்துகிடக்கும் குளக்கரை மேட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மாவைப் பார்த்தான். முல்லையம்மாவிடம் பேச்சுக் கொடுத்த மருதன் பூவரச மரத்தில் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் காளியப்பனிடம் சென்றான். வடக்கே இருக்கும் எட்டு ஊர்த்தண்ணீரால் வர இருக்கும் பாதிப்பைச் சொன்னான். ஊரைக் காக்க, பயிரைக் காக்க மூன்று மைல் தூர வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் புல், பூண்டு, ஆமணக்கை அகற்ற வேண்டும். இதற்கு ஊராரைக் கூட்ட வேண்டும் என்றான். காளியப்பன் பேரக்குழந்தைக்கு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும் எனத் தட்டிக் கழித்தார். அவர் சொன்னால் ஊரே கூடும். ஆனால் மருதனின் முயற்சி வீண் முயற்சியாகப் போயிற்று.

மனம் சோர்ந்த மருதன்

  • காளியப்பனைச் சந்தித்துத் தோல்வியைக் கண்ட மருதன் ஊர் எல்லையை மிதித்தபோது அந்த ஊரின் முதல் பட்டதாரியான பிரேம் குமாரிடம் தன் கருத்தைச் சொன்னான்.
  • அவன் பொதுப்பணித் துறையில் மனு கொடுக்கும்படி சொன்னான். மேலும் தன் தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சமாளித்தான். வீட்டிற்குச் சென்ற மருதன் மனம் சோர்ந்து அதனால் உடல் சோர்ந்து கன்னத்தில் கைவைத்த படி உட்கார்ந்தான்.
  • அவன் மனைவி அல்லி நிலைமையைப் புரிந்துகொண்டு சுடு கஞ்சி கொடுத்தாள். அதைக் குடித்த மருதன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தான். அவளோ நமக்கு 'ஒரு சர்க்கரைக் குழி' நிலம் கூட இல்லை எனச் சமாளித்தாள். மனைவி அன்பையும் மொச்சைக்குழம்பு, முரட்டுச்சோறு, முட்டைகள் ஆகியவற்றை மனம் இல்லாம கனத்த மனத்தோடு சாப்பிட்டு முடித்துச் சோர்ந்து படுத்தான். பிரச்சினைகள் சோர்வை அளிக்கும், செயல்பாடுகள் சோர்வுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும்.

செயல்வீரன் மருதன்:

  • பொழுது விடியும் வரை மருதனின் மனம் ஓயவில்லை. பொழுது விடியும் முன் அவன் மனமும் காலும் வாய்க்காலை நோக்கி ஓடின. வாய்க்காலின் கரையோரம் மண்டிக்கிடந்த ஆமணக்குச் செடிகளையும், புல் பூண்டுகளையும் வாய்க்கால் ஓரம் அறுத்துப் போட்டான். காலையில் கணவனைக் காணாமல் திகைத்த அல்லி, அல்லிக்குளம் தாண்டி வாய்க்கால் ஓரம் சென்றாள். கணவனுடன் தானும் சேர்ந்து ஆமணக்குச் செடியை அகற்றும் பணியில் ஈடுபட்டாள். அக்கரையில் மீன் பிடித்த மாரி வலையை உதறிக் கரையோரம் போட்டான். வளைந்து கிடந்த காட்டாமணக்குகளை அறுக்கத் தொடங்கினான். அந்த வழியாக வில்வண்டியில் சென்ற காளியப்பன் வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டிச் செல்லும்படி சொல்லி விட்டு அவரும் காட்டாமணக்கைக் கட்டுக் கட்டாக அறுக்கத் தொடங்கினார். ஊரார் செய்தி அறிந்து ஓடி வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

முடிவுரை

'கருமத்தைச் செய் பலனை எதிர்பாராதே'

என்கிறது கீதை. கபிலர் அகவலோ

“ஒன்றே செய்

ஒன்றும் நன்றே செய்

நன்றும் இன்றே செய்

இன்றும் இன்னே செய்"

  • என்கிறது. இக்கருத்துக்களின் மொத்த உருவமாய் நின்று முனைப்புடன் காட்டாமணக்கை அகற்றும் பொதுப்பணியில் ஈடுபட்டவன்தான் மருதன். மெய்வருத்தம் பாராது ஊர் வருத்தம் தீர்க்க உழைத்தவன்தான் மருதன். அவனின் நற்செயலுக்கு உடனே உதவி கிடைக்காவிட்டாலும் சிறுபொழுதுக்குள் நிலைமையை அறிந்து ஊரார் கூடினர். ஊராரைத் திரட்டிய உண்மைத் தொண்டன் மருதன்போல் பலர் உருவாகட்டும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்_கழனி&oldid=3270886" இலிருந்து மீள்விக்கப்பட்டது