பயனர்:ஈழநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலகத் திட்ட வலைப்பதிவில் இருந்து [1]

நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்.

நூலகத்திற்கான முதலாவது வழங்கி, முதல் நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கியதுடன் நூலகத்தினை ஈழத்தமிழர்கள் வாழுமிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தமையும் நூலகத்திற்கு உலகெங்குமிருந்து புலம்பெயர் தமிழர்களுடைய பங்களிப்பைக் கொண்டு வந்து சேர்த்தமையும் ஈழநாதனது முக்கிய பங்களிப்புக்களாகும். இன்றும் கூட ஈழநாதன் வாங்கியளித்த வழங்கியிலேயே நூலகம் இயங்குகிறது. நூலகம் தொடர்பான திட்டமிடல், உரையாடல்களிலும் முக்கிய பங்களித்த ஈழநாதன் நூலகத் திட்டம் 2008 இல் நூலக நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது முதலாவது அறங்காவலர் சபையிலும் இடம்பெற்றுப் பங்களித்தார்.

ஈழத்தமிழர்களுடைய வாழ்வியல் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் ஈழத்தமிழ் ஆளுமைகள் வரலாற்றில் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் மிகப்பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார். பல்வேறு ஆவணவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்குச் சகல விதங்களிலும் உதவி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, சிங்கப்பூரில் நூலகத்திற்கான அலகொன்றைத் தொடங்கி ஈழத்தமிழர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்று ஒழுங்குபடுத்துவதோடு ஆவணப்படுத்தித் திறந்த அணுக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார்; அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இவ்வேளையில் அவர் அகால மரணமடைந்திருப்பது நூலகத்திற்கும் ஆவணப்படுத்தல், நூலகவியல் சார்ந்த செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும். நூலகம் அவருக்கான அஞ்சலியைத் தெரிவிக்கும் நேரத்தில் அவருடைய விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஈழநாதன்&oldid=1224922" இலிருந்து மீள்விக்கப்பட்டது