பஞ்சரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டபஞ்சரம்[1]
கும்பபஞ்சரம்[2]

பஞ்சரம் என்பது, திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த கோயில் கட்டிடங்களில் உள்ள வெறுமையாக அமையக்கூடிய சுவர் மேற்பரப்புகளில் காணப்படும் ஒரு வகை அலங்கார அமைப்பு ஆகும். இது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களில் அரைத் தூண்களுக்கு இடையில் உருவாகும் வெறுமையான இடங்களிலோ, மேற்தளங்களில் அமையும் சுவர்களில் கர்ணகூடு, சாலை போன்ற அமைப்புக்களுக்கு இடையில் உள்ள வெளிகளிலோ காணப்படும்.

வெளிப்புறம் தள்ளிக்கொண்டிருக்கும் சுவர்களில் கோட்ட பஞ்சரமும், பின்தள்ளி இருக்கக்கூடிய சுவர்களில் கும்பபஞ்சரமும் காணப்படும் என்று துப்ரோயில் கூறுகிறார்.[3] ஆனால், இதற்குப் பல புறநடைகள் உள்ளன.

வகைகள்[தொகு]

பஞ்சரங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகக் காணலாம். ஒன்று கோட்டபஞ்சரம், மற்றது கும்பபஞ்சரம்.[4] "கோட்டம்" என்பது கோயில் என்னும் பொருள் கொண்டது. சிறிய கோயில் போன்ற அமைப்பில் காணப்படும் பஞ்சரங்கள் கோட்டபஞ்சரங்கள் எனப் பெயர் பெறுகின்றன. கோட்டபஞ்சரங்களில் மாடம் போன்ற குழிவுப் பகுதியில் இரண்டு பக்கங்களிலும் அரை அல்லது காற் தூண்கள் அமைந்திருக்கும். இத்தூண்கள் அவ்வக் கால கட்டங்களுக்கு உரிய கட்டிடக்கலை ஒழுங்கைச் சார்ந்து இருக்கும். தூண்களுக்கு மேல் தளவரிசையும் அதற்குமேல் வளைகூரை அமைப்புடன் கூடிய சாலை போன்ற அமைப்பும் காணப்படும். சில கோயில் கட்டிடங்களில் காணும் கோட்ட பஞ்சரங்களில் கடவுள் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பது உண்டு. பெரும்பாலான கோயில்களில் இவை வெறுமையாகவே விடப்படுகின்றன.[5] கும்பபஞ்சரத்தில் அடிப்பகுதியில் குடம் போன்ற அமைப்பும் நடுவில் அதற்குள் நிறுத்தப்பட்டிருப்பதுபோல் காணப்படும் அரைத் தூணும், மேற்பகுதியில் தூணுக்கு மேல் தாங்கப்பட்டது போல் உள்ள சிறு மண்டபம் போன்ற அமைப்பும் இருக்கும். இரண்டு வகைப் பஞ்சரங்களினதும் அடிப்படை அமைப்புக்கள் மாறாதிருந்தாலும், கால கட்டங்களைப் பொறுத்து வெவ்வேறு வகையான வடிவங்களுடனும், அலங்காரக் கூறுகளுடனும் காணப்படுகின்றன. கும்பபஞ்சர வகையில் கும்பம் இல்லாமல் தூண் மட்டும் உள்ள வடிவங்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. இவ்வகைப் பஞ்சரம் கம்பபஞ்சரம் எனப்படும்.

கோயில் கட்டிடக்கலை பற்றிக் கூறுகின்ற சைவ ஆகமமான காமிகாகமம் ஒன்பது வகையான பஞ்சரங்களைப் பற்றிக் கூறுகிறது. அவை, சிம்ம பஞ்சரம், சார்த பஞ்சரம், பஞ்சரம், நிர்வியூக பஞ்சரம், லம்பநாசிகம், சிம்மச்ரோத்திரம், கண்டநிவியூககம், ஜசபஞ்சரம், கபோத பஞ்சரம் என்பன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. படம் Jouveau-Dubreuil, G., Dravidian Architecture இலிருந்து எடுக்கப்பட்டது. முதல் பதிப்பு 1910.
  2. படம் Jouveau-Dubreuil, G., Dravidian Architecture இலிருந்து எடுக்கப்பட்டது. முதல் பதிப்பு 1910.
  3. Jouveau-Dubreuil, G., Dravidian Architecture (edited by Krishnaswami Iyangar), Asian Educational Services, New Delhi, 2006. p. 15
  4. Jouveau-Dubreuil, G., 2006. p. 14, 15
  5. Jouveau-Dubreuil, G., 2006. p. 14.
  6. கோயிற் கட்டிடக்கலை, சரஸ்வதம். 7 சனவரி 2017 அன்று பார்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சரம்&oldid=2166868" இலிருந்து மீள்விக்கப்பட்டது