நோரோவேயின் கருப்பு காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோரோவேயின் கருப்பு காளை
"காளையின் முதுகில் இளம்பெண்"
ஜான் டி. பேட்டன் (1894) எழுதிய
மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸ் என்ற
நூலிலிருந்து விளக்கப்படம்.
நாட்டுப்புறக் கதை
பெயர்: நோரோவேயின் கருப்பு காளை
AKA: The Red Bull of Norroway
தகவல்
Aarne-Thompson Grouping:மணமகனாக விலங்கு வகை
கதையைச் சேர்ந்தது.
Country: இசுக்கொட்லாந்து
Published in: * இராபர்ட் சேம்பர்ஸ் என்பவர்
பாப்புலர் ரைம்ஸ் ஆஃப் ஸ்காட்லாந்து.

நோரோவேயின் கருப்பு காளை ( The Black Bull of Norroway ) என்பது இசுக்காட்லாந்தின் விசித்திரக் கதையாகும் . 1842 இல் இராபர்ட் சேம்பர்ஸ் என்பவர் எழுதிய பாப்புலர் ரைம்ஸ் ஆஃப் ஸ்காட்லாந்தில் தி ரெட் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் இதே போன்ற கதை முதன்முதலில் அச்சிடப்பட்டது [1][2] இசுக்காட்லாந்தின் பாப்புலர் ரைம்ஸின் 1870 பதிப்பில் தி பிளாக் புல் ஆஃப் நோரோவே என்ற தலைப்பில் ஒரு பதிப்பு ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் 1894 ஆம் ஆண்டு புத்தகமான மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் ஆங்கிலமயமாக்கப்பட்ட பதிப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டது.[3][4]

இது ஆண்ட்ரூ லாங்கின் தி ப்ளூ ஃபேரி புக்,[5] ஃப்ளோரா அன்னி ஸ்டீலின் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ்,[6] ரூத் மானிங்-சாண்டர்ஸின் ஸ்காட்டிஷ் ஃபேரி டேல்ஸ் மற்றும் ஆலன் கார்னரின் பிரித்தானிய ஃபேரிடேல்ஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஜே. ஆர். ஆர். டோல்கீன் இதை " ஆன் ஃபேரி-ஸ்டோரிஸ் " என்ற கட்டுரையில் "கதையில் ஏற்படும் திடீர் திருப்பத்திற்கு" உதாரணமாகக் குறிப்பிட்டார்.

இது ஆர்னே-தாம்சன்-உதர் வகை அட்டவணை 425Aல், " இழந்த கணவனைத் தேடுதல் ".[7] நோர்வேயின் பிரவுன் பியர், தி டாட்டர் ஆஃப் தி ஸ்கைஸ், ஈஸ்ட் ஆப் தி சன் அன்ட் வெஸ்ட் ஆப் தி மூன், தி என்சேன்டட் பிக், தி டேல் ஆஃப் தி ஹூடி, மாஸ்டர் சிமோலினா, ரோஸ்மேரியின் ஸ்ப்ரிக், தி என்சேன்டட் ஸ்நேக், "வெள்ளை-கரடியும் வாலெமன் ராஜாவும்" ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.[8]

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு துணி துவைக்கும் பெண்ணின் மூன்று மகள்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடும் பயணத்தில் வழியில், தங்கள் அதிர்ஷ்டத்தை எப்படி தேடுவது என்று ஒரு சூனியக்காரியிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அவள் தன்னுடைய வீட்டின் பின் கதவைப் பார்க்கும்படி அறிவுறுத்தினாள். மூன்றாம் நாள், மூத்தவள் தன்னை அழைத்துச் செல்ல வந்த ஆறு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் சென்றள். இரண்டாவது மகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு வாகனத்தில் ஏறிச் செல்கிறாள்; ஆனால் மூன்றாவது மற்றும் இளையவள் ஒரு கருப்பு காளையை மட்டுமே காண்கிறாள். சூனியக்காரி தன்னுடன்தான் வர வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

பயந்துபோன இளைய மகள், கனிவாகவும் மென்மையாகவும் இருந்த காளையுடன் செல்கிறாள். அவளுக்கு பசிக்கும்போது தன்னுடைய வலது காதிலிருந்து வரும் உணவை சாப்பிடவும், தாகமெடுக்கும்போது இடது காதிலிருந்து தண்ணீரைக் குடிக்கவும் காளை கூறுகிறது. அவர்களின் பயணத்தின் முதல்நாள் இரவு, அவர்கள் ஒரு கோட்டைக்கு வருகிறார்கள். காளை அந்தப் பெண்ணிடம் அந்தக் கோட்டை தனது மூத்த சகோதரனுடையது என்று சொல்கிறது. அங்கே அவள் ஆடம்பரமாக வரவேற்கப்படுகிறாள். பிரிந்து செல்லும் நாள் வரும்போது அவளுக்கு ஒரு அழகான ஆப்பிள் பரிசாக கொடுக்கப்படுகிறது. மேலும் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய தேவை வரும் வரை அதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டது. பயணத்தின் இரண்டாவது இரவு, அவர்கள் மீண்டும் ஒரு கோட்டையில் தங்குகிறார்கள். இது காளையின் இரண்டாவது சகோதரனுக்கு சொந்தமானது. பிரிந்து செல்லும்போது அழகான பேரிக்காய் பரிசைப் பெறுகிறாள். இதையும் தனது முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மூன்றாவது இரவு, அவர்கள் இளைய சகோதரனின் கோட்டைக்கு வருகின்றனர். விருந்துக்குப் பின்னர் அவளுக்கு ஒரு அழகான பிளம் பழம் இறுதி பரிசாக வழங்கப்படுகிறது. இதையும் அவள் வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவை வரும் வரை பயன்படுத்தக்கூடாது. இறுதியாக, சிறுமியும் காளையும் ஒரு கண்ணாடி பள்ளத்தாக்கிற்கு வருகிறார்கள்.

"நீ இங்கேயே காத்திருக்க வேண்டும்," எனவும் "என்ன நடந்தாலும், ஒரு அங்குலம் கூட நகராதே, அல்லது நான் உன்னைக் கண்டுபிடிக்க முடியாது" எனவும் காளை அப்பெண்ணிடம் சொல்கிறது. பள்ளத்தாக்கை ஆளும் பிசாசை வெளியேற்றுவதற்காக அதனுடன் சண்டையிடப்போவதாக காளை விளக்குகிறது. வானம் நீலமாக மாறினால், தான் வென்றதாவும்; ஆனால் வானம் சிவப்பு நிறமாக மாறினால், தான் தோற்றுவிட்டதாகவும் தெரிவித்து கருப்பு காளை அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுச் செல்கிறது. சிறிது நேரம் கழித்து அவள் வானம் நீலமாக மாறுவதைக் காண்கிறாள். மிகுந்த மகிழ்ச்சியில், சிறுமி தனது நிலையை லேசாக மாற்றிக்கொண்டாள். அதனால் கருப்பு காளை அவளிடம் திரும்பவில்லை.

பள்ளத்தாக்கிலிருந்து தானாக ஏற முடியாமல், ஒரு கொல்லனைக் கண்டுபிடிக்கும் வரை சிறுமி தனியாக அலைகிறாள். அவள் ஏழு வருடங்கள் தனக்கு சேவை செய்தால், அவளுக்கு ஒரு காலணி செய்து தருவதாக கொல்லன் கூறுகிறான். ஏழு வருடங்கள் சென்றபின், அவன், அந்தப் பெண்ணுக்கு- இப்போது ஒரு இளம் பெண்ணாக- இரும்புக் காலணியைச் செய்து, அவளுடைய காலில் ஆணியாக அடிக்கிறான். காலணிகளுடன், இளம் பெண் கண்ணாடி பள்ளத்தாக்கிலிருந்து வெளியே ஏற முடிகிறது.

அந்த இளம் பெண் இறுதியில் சூனியக்காரியின் வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள். அவளும் அவளுடைய மகளும் சுத்தம் செய்ய முடியாத இரத்தம் தோய்ந்த சில சட்டைகளை இப்பெண் துவைத்தால் அடைக்கலம் அளிப்பதாக சூன்யக்காரி கூறுகிறாள். யார் சட்டைகளை சுத்தம் செய்ய முடியுமோ, அவர் அந்தச் சட்டையைச் சேர்ந்த சூனியக்காரியின் வீட்டில் தங்கியிருக்கும் வீரமிக்க இளம் வீரரை மணந்து கொள்வார். தனக்கு முன் இருந்தவர்கள் தோல்வியடைந்தாலும், அந்த இளம் பெண் சட்டைகளை துவைத்த உடனேயே இரத்தக் கறைகள் மறைந்து விடுகின்றன. மேலும், அந்த இளம் பெண்ணின் கால்களும் பூரணமாக குணமடைகின்றன. மகிழ்ச்சியடைந்த சூனியக்காரி, இளம் போர் வீரனின் சட்டைகளை சுத்தம் செய்தவள் தன் மகள்தான் என்று அவனை நம்ப வைக்கிறாள். இதனால் மாவீரனுக்கும் சூன்யகாரியின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

ஜான் டி. பேட்டனின் மோர் இங்கிலீஷ் ஃபேரி டேல்ஸில் இருந்து விளக்கப்படம் [9]

விரக்தியடைந்த அந்த இளம் பெண் தன் வாழ்வின் முதல் பெரிய தேவை ஏற்படுவதாக உணர்ந்தாள். அவள் ஆப்பிளை உடைத்து, அதில் நகைகள் நிறைந்திருப்பதைக் கண்டாள். இரவில் வீரனின் அறைக்கு வெளியே பாட அனுமதிக்கப்படுவதற்கு ஈடாக, மந்திரவாதியின் மகளுக்கு அவள் நகைகளை வழங்குகிறாள். ஆனால் சூனியக்காரி தனது மகள் மூலம் வீரனுக்கு தூக்க பானத்தைக் கொடுக்கிறாள். அதனால் அந்த இளம் பெண் அவள் அழுது பாடினாலும் அவனை எழுப்ப முடியவில்லை.

அவள் தன் வாழ்க்கையின் இரண்டாவது பெரிய தேவையில் இருப்பதை உணர்ந்து பேரிக்காயை உடைக்கிறாள். அதில் ஆப்பிளில் இருந்ததைவிட நகைகள் நிறைந்திருப்பதைக் காண்கிறாள். ஆனால் இரண்டாவது இரவும் முன்பு போலவே செல்கிறது. இறுதியாக, இளம் பெண் தனது வாழ்க்கையின் மூன்றாவது பெரிய தேவையை உணர்ந்து அதிக நகைகளைக் கண்டுபிடிக்க பிளம் பழத்தை உடைக்கிறாள். இந்த நேரத்தில், தூங்கும்-பானம் மீண்டும் கொண்டு வரப்பட்டாலும், மாவீரன் தற்செயலாக அதைத் தட்டுவிடுகிறான். எனவே, அவன் விழித்திருந்து அவளது பாடலைக் கேட்டு உண்மையை அறிகிறான்

அந்த இளம் பெண் தன்னுடன் கறுப்பு காளையாக இருந்த மாவீரனை மணக்கிறாள். மாவீரன் சூனியக்காரியையும் அவரது மகளையும் எரித்துவிடுகிறான். பின்னர் சலவைக்காரனின் மகளும் மாவீரனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

சான்றுகள்[தொகு]

  1. Chambers, Robert (1842). Popular Rhymes, Fireside Stories, and Amusements of Scotland. Edinburgh: William and Robert Chambers. பக். 75–76. https://books.google.com/books?id=NQxMAAAAcAAJ&pg=GBS.PA75. 
  2. Huck, Charlotte S. (2001). The Black Bull of Norroway: a Scottish Tale. [New York]: Greenwillow Books. https://archive.org/details/blackbullofnorro00huck. 
  3. Chambers, Robert (1870). Popular Rhymes of Scotland, New Edition. London and Edinburgh: W. & R. Chambers. பக். 95–99. https://archive.org/details/popularrhymessc01chamgoog. 
  4. Jacobs, Joseph. More English Fairy Tales. London: David Nutt. பக். 1–6 & notes: 218–19. http://en.wikisource.org/w/index.php?title=More_English_Fairy_Tales/The_Black_Bull_of_Norroway. 
  5. The Blue Fairy Book, "The Black Bull of Norroway"
  6. Steel, Flora Annie. English Fairy Tales. London: Macmillan, 1918. pp. 144-153.
  7. Baughman, Ernest Warren. Type And Motif-index of the Folktales of England And North America. The Hague: Mouton & Co., 1966-1967. p. 10.
  8. Heidi Anne Heiner, "Tales Similar to East of the Sun & West of the Moon பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம்"
  9. Jacobs, Joseph; Batten, John D. (1894). "The Black Bull of Norroway". More English Fairy Tales. London: David Nutt. பக். 1–6 & notes: 218–19. http://en.wikisource.org/w/index.php?title=More_English_Fairy_Tales/The_Black_Bull_of_Norroway. Jacobs, Joseph; Batten, John D. (1894). "The Black Bull of Norroway". More English Fairy Tales. London: David Nutt. pp. 1–6 & notes: 218–19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோரோவேயின்_கருப்பு_காளை&oldid=3925316" இலிருந்து மீள்விக்கப்பட்டது