தாராள பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராள பிரபு
இயக்கம்கிருஷ்ணா மாரிமுத்து
கதைசுதர்சன் நரசிம்மன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
ஷான் ரோல்டன்
விவேக்-மெர்வின்
இன்னோ கெங்கா
மேட்லி ப்ளூஸ்
பரத் சங்கர்
கபீர் வாசுகி
ஊர்கா
நடிப்புஹரீஷ் கல்யாண்
விவேக்
தன்யா ஹோப்
ஒளிப்பதிவுஎஸ். கே. செல்வகுமார்
படத்தொகுப்புகிருபாகரன்
கலையகம்ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெய்ன்மென்ட்
வெளியீடு13 மார்ச்சு 2020 (2020-03-13)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாராள பிரபு (Dharal Prabhu) என்பது அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான விக்கி டோனரின் மறு ஆக்கமாகும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.[1][2] இந்த படம் 13 மார்ச் 2020 அன்று அதன்திரையரங்க வெளியீட்டைக் கொண்டிருந்ததோடு விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.மேலும், இத்திரைப்படம் வெற்றிப்படமாகவும் இருந்தது.[3][4]

கதைக்களம்[தொகு]

டாக்டர் கண்ணதாசன் எம்.பி.பி.எஸ் ஒரு கருவுறுதல் சிறப்பு மருத்துவர் ஆவார், அவரது உதவியாளரான காமுவின் உதவியுடன் சென்னையில் ஒரு சிறப்பு கருவுறுதல் சிகிச்சை நிலையத்தை நடத்தி நிர்வகிக்கிறார். அவர் தனது நோயாளிகளுக்கு உயர்தர விந்தணுக்களைப் பெற்றுத்தருவதற்கு உறுதியளிக்கிறார், ஆனால் ஆரோக்கியமான விந்து தானம் செய்பவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் அவர் விரக்தியடைகிறார். வேலைவாய்ப்பகத் துறையில் தனக்கிருந்த தொடர்பு மூலம், விளையாட்டுப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து, பிரபு கோவிந்த் என்ற பெயருடைய பொருத்தமான நபரைக் கண்டுபிடிக்கிறார்.

கால்பந்து விளையாடுவதில் மிகச்சிறந்த திறமை கொண்ட மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி இளைஞரான பிரபு, அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் தனது தாய் வானதி மற்றும் அவரது பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக இருந்து அவர்களைப் பராமரிக்கும் பொருட்டு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் தனது கனவு வேலையைப் பெற விரும்புகிறார். ஒரு நாள், தனது தாயின் உத்தரவின் பேரில் பேரங்காடி ஒன்றில் பொருளொன்றை கொண்டு சேர்க்கும் போது, பிரபு அங்கு பணிபுரியும் ஒரு ஊழியரும் விவாகரத்தானவருமான நிதிமந்தனாவைச் சந்திக்கிறார். உடனடியாக அவளிடம் காதல் வசப்படுகிறார். பின்னர், கண்ணதாசன் அவரைப் பின்தொடர்வதைக் கவனித்து அவரை மடக்கி தன்னைப் பின் தொடர்வதற்கான காரணத்தைக் கேட்கிறார். கண்ணதாசன் நட்பாக, பிரபுவிடம் விந்தணு தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார், அதற்கு பிந்தையவர் வெறுக்கத்தக்க வகையில், அந்த வேண்டுகோளை நிராகரிக்கிறார். தடையின்றி, கண்ணதாசன் எல்லா இடங்களிலும் பிரபுவைப் பின்தொடர்கிறார்.பிரபுவின் விந்தணுக்களைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையில், பிரபு வழக்கமாக நிதியைச் சந்திக்கும் பொருட்டு பேரங்காடிக்கு வருகை தருகிறார், இருவரும் நெருக்கமாகப் பழகுகிறார்கள்.

பின்னர், தனது கால்பந்து பயிற்சியாளர் தனது மறைந்த மனைவியுடன் குழந்தை பெற இயலாமை குறித்து புலம்புவதைக் கண்டபின், பிரபு மனதில் மாற்றம் அடைந்து கண்ணதாசனை அணுகுகிறார். அவர் வழக்கமாக கண்ணதாசனுக்கு விந்தணு தானம் வழங்குகிறார், அவர் செய்யும் ஒவ்வொரு முறை தானத்திற்கும் பணம் செலுத்துகிறார். பிரபு பகட்டாக பணத்தை செலவழித்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். அவர் தனது விந்தணு தானத்தை தனது குடும்பத்தினரிடமிருந்து இரகசியமாக பராமரிக்கிறார். இருப்பினும், கண்ணதாசன் தனது சுயலாபத்திற்காக பிரபுவின் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பல முயற்சிகளை பலமுறை கெடுத்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்ததும், பிரபு அவரை விட்டு வெளியேறி நிதியை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். குற்ற உணர்ச்சி கொண்ட கண்ணதாசன் பிரபு தனது கனவு வேலையைப் பெறுவதற்கும் அவரது குடும்பம் மற்றும் நிதிக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதன் மூலம் பிரபுவை சமாதானம் செய்கிறார், இதன் விளைவாக அவர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்போது கண்ணதாசனுடன் சமரசம் செய்து கொண்ட பிரபு, அவருக்கு ஒரு இறுதியாக ஒரு முறை விந்தணு தானம் செய்கிறார்.

நிதி பின்னர் பிரபுவுடன் ஒரு குழந்தையைப் பெற விரும்புகிறாள், ஆனால் ஒரு குழந்தையைப் பெற முடியவில்லை. மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் தம்பதியினருக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை. கண்ணதாசன் பின்னர் நிதி மலட்டுத்தன்மையுள்ளவர் என்று விளக்குகிறார், இதனால் பிரபு மனதளவில் ஒரு பெரும் நிலைகுலைவினை அடைகிறார். பதிலித்தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க கண்ணதாசன் கோரிக்கை விடுத்தாலும், பிரபு மற்றும் நிதி ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து காவ்யா என்ற மூன்று வயது சிறுமியை தத்தெடுக்கிறார்கள், அவளது பெற்றோர் கார் விபத்தில் இறந்துவிட்டனர் என்பதையும், மேலும், காவ்யா உண்மையில் தனது உயிரணுக்கள் மூலம் பிறந்த குழந்தை என்பதைக் கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சி அடைகிறார். அவர் உண்மையை ஒப்புக் கொள்ளும் கண்ணதாசனை எதிர்கொள்கிறார். காவ்யாவை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க பிரபுவை அவர் கேட்டுக்கொள்கிறார். இந்த அதிர்ச்சி இருந்தபோதிலும். பிரபு காவ்யாவை மென்மையாகி, அவளை தனது சொந்த குழந்தையாக வளர்க்கிறான், அவளுடைய உண்மையான பிறப்பின் மூலத்தை அவனது குடும்பத்தினரிடமிருந்து இரகசியமாக பராமரிக்கிறார். பிரபுவின் குடும்பம் காவ்யாவுடன் நெருக்கமாக வளர்கிறது, ஆனால் அவளுடைய உண்மையான தோற்றம் பற்றி தெரியாது.

பின்னர், கறுப்புப் பணத்தை கையாண்ட குற்றச்சாட்டில் வருமான வரித்துறை பிரபுவை கைது செய்கிறது. எந்தவொரு நேரடியான பதிவும் இல்லாததால், அவர் உண்மையை காவல்துறைக்கு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உண்மையைச் சொல்கிறார். . வெறுப்படைந்த நிதி, பிரபுவை விட்டு விலகுகிறார். ஆனால், கண்ணதாசன் பிரபுவை பிணையில் எடுக்கிறார். பிரபு பின்னர் கண்ணதாசனுடன் சமரசம் செய்து நிதியிடம் மன்னிப்பு கேட்கிறார். கண்ணதாசன் பின்னர் ஒரு அனாதை இல்லத்தில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு பிரபு, நிதி மற்றும் காவ்யாவை அழைக்கிறார். பிரபு தனது செயல்களை அவளிடமிருந்து இரகசியமாக வைத்திருப்பது தவறானது என்றாலும், அதற்குப் பின்னால் உள்ள நல்ல நோக்கங்களைப் பார்க்கும்படி அவர் அவளை வற்புறுத்துகிறார், மேலும் பிரபு தனது தானம் மூலம் ஏராளமான குடும்பங்களுக்கு அளித்த மகிழ்ச்சியைப் பற்றி அவளுக்கு வெளிப்படுத்துகிறார். பிரபுவின் தானம் மூலம் 49 குழந்தைகள் கருத்தரிக்கப்பட்டன என்பதை அவர் மேலும் வெளிப்படுத்துகிறார். மன மாற்றத்துடன், நிதி பிரபுவுடன் சமரசம் செய்து கொள்கிறாள். பிரபு, நிதி, காவ்யா, கண்ணதாசன் மற்றும் பிற குடும்பங்கள் (பிரபு வழியாக கருத்தரிக்கப்பட்ட குழந்தைகள்) கொண்டாடுகின்றனர்.

நடிகர்கள்[தொகு]

  • பிரபு கோவிந்தாக ஹரீஷ் கல்யாண்
  • டாக்டர் கண்ணதாசனாக விவேக்
  • நிதி மந்தனாவாக தன்யா ஹோப்
  • காவ்யாவாக பேபி நிகிதா
  • பிரபுவின் தாய் வானதியாக அனுபமா குமார்
  • பிரபுவின் பாட்டி குந்தவையாக சச்சு
  • கண்ணதாசனின் உதவியாளர் காமுவாக ஆர். எஸ். சிவாஜி
  • லதாவாக அகல்யா வெங்கடேசன்
  • ஹரீஷ் விக்ரமாக ஹரீஷ் விகரம்
  • பயிற்சியாகர் மனோஜ் குமாராக ரவீந்திர விஜய்
  • காவ்யாவின் தந்தையாக சித்தார்த் வெங்கடராமன்
  • காவ்யாவின் தாயாக நந்திதா ஸ்ரீகுமார்
  • மனோஜ் குமாரின் மனைவியாக சுபா
  • அமைச்சர் காத்தவராயனாக நமோநாராயணன்
  • நிதியின் தந்தையாக ரவி பட்
  • நிதியின் அத்தை பிரேமாவாக மதுவந்தி அருண்
  • அமுதாவாக மீரா கிருஷ்ணமூர்த்தி
  • கல்பனாவாக ஆர் ஜே ஆனந்தி
  • சதீஷாக லாலு
  • வணங்காமுடியாக செல் முருகன்
  • சந்திராவாக காயத்ரி
  • கருவுறுதல் சிகிச்சை மருத்துவராக லதா
  • பன்னீர் செல்வமாக ராஜா திருமுருகன்

விமர்சன வரவேற்பு[தொகு]

"ஒரு சிறந்த பின்னணி இசையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் அதிக முயற்சியும் இருந்திருந்தால் இந்த திரைப்படம் சரியான மறுஆக்கமாக மாறியிருக்கும்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியிருந்தது.[3] "படம் கருவுறாமை மற்றும் செயற்கை கருவூட்டல் ஆகியவற்றைப் பற்றி ஒரு இலகுவான, நம்பிக்கையான தோற்றத்தைத் தருவதோடு, பார்வையாளர்களை மகிழ்வித்து அறிவூட்டுகிறது" என்று சிஃபி.காம் எழுதியிருந்தது.[4] பிலிம் கம்பானியன் சௌத்தின் பரத்வாஜ் ரங்கன், "மிகவும் மோசமான சிக்கல்களை, மிகவும் சாதாரணமாகவும், இயல்பாகவும், தாராள பிரபு கையாண்டுள்ளது" (அதாவது நீண்ட விரிவுரைகளற்று) என்றும், படத்தின் மையக்கருத்தினைக் கூட மிகவும் எளிதான ஒரு தொனியில் கையாண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.[5]

நேர்மறையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் , இந்தியாவில் கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து வெளியான ஒரு மாதத்திற்குள் ஒடிடி இயங்குதளங்களில் பார்க்க இந்த படம் கிடைத்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Dharala Prabhu' is an official remake of 'Vicky Donor':Krishna Marimuthu". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  2. "'Dharala Prabhu', a Tamil remake of Bollywood film 'Vicky Donor'". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  3. 3.0 3.1 Dharala Prabhu Movie Review: Director Krishna Marimuthu has succeeded in a fine execution of Vicky Donor remake, பார்க்கப்பட்ட நாள் 2020-03-13
  4. 4.0 4.1 "Dharala Prabhu review: Get ready to be pleasantly surprised!". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-13.
  5. "Dharala Prabhu Movie Review: Harish Kalyan Plays A Sperm Donor In A Dignified, Beautifully Made Drama". FilmCompanion. 13 March 2020.
  6. "Harish Kalyan: I'd want my films to release in theatres – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராள_பிரபு&oldid=3942791" இலிருந்து மீள்விக்கப்பட்டது